கோவை, நவ. 21-

ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு இளைஞர்கள் நலனுக்கு பயண்படுத்துக வாலிபர் சங்க மாவட்ட மாநாடு வலியுறுத்தல்

கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு நிலங்களை மீட்டு இளைஞர்களின் நலனை மேம்படுத்தும் வகையில் விளையாட்டு மைதானம், உடற்பயிற்சி கூடம் உள்ளிட்டவைகளை அமைக்க வேண்டும் என வாலிபர் சங்கத்தின் மாவட்டமாநாடு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 17வது கோவை மாவட்ட மாநாடு சனியன்று கோவை துடியலூரில் ஆர்.சிந்து நினைவரங்கத்தில் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.மணிகண்டன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.பாரதி, அருள்குமார், கிருஷ்ணராஜ் ஆகியோர் தலைமையில் துவங்கியது. முன்னதாக, மாவட்ட துணை செயலாளர் வி.எஸ்.பரமசிவம் மாநாட்டு கொடியை எழுச்சி முழக்கங்களுக்கிடையே ஏற்றி வைத்தார். என்.கோகுலகிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார். மாநில பொருளாளர் எஸ்.பாலா மாநாட்டை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

வாலிபர் சங்க மாநில துணைச் செயலாளர் நந்தகோபால், மாணவர் சங்க மாவட்ட செயலாளர் தீபக்சந்திரகாந்த் ஆகியோர் உரையாற்றினர். இதைத்தொடர்ந்து மாவட்ட செயலாளர் ஜே.ரவீந்திரன், பொருளாளர் ச.சீலாராஜ் ஆகியோர் முன்வைத்த அறிக்கையின் மீது பிரதிநிதிகளின் விவாதம் நடைபெற்றது.

தீர்மானங்கள்

இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு, கோவை மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் செயல்படுகிறது. இவைகளில் பெரும்பாலான பள்ளிகள் அரசின் கட்டணத்தை அமலாக்காமல் பெரும் கட்டண கொள்ளையில் ஈடுபட்டு வருகிறது. மேலும், அரசின் சட்டங்கள் எதுவுமே தனியார் பள்ளிகளில் அமலாக்குவதில்லை, மாறாகஅரசின் உத்தரவு குறித்து கேள்வி கேட்கும் பெற்றோர்களின் பிள்ளைகள் பழிவாங்கப் படுகின்றனர். இதுகுறித்த புகாரின் மீது மாவட்ட கல்வித்துறை சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிகள் மீது சிறு நடவடிக்கை கூட எடுக்க முன்வருவதில்லை. இத்தகைய போக்கை மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. எனவே, அனைத்து கல்வி நிறுவனங்களிலும் அரசின் உத்தரவை உடனடியாக அமலாக்க துணிச்சலான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாநாடு கேட்டுக்கொள்கிறது. மேலும், பெண்கல்விக்கு முக்கியத்துவம் அளித்துதுவக்கப்பட்ட அவினாசிலிங்கம் பல்கலைக் கழகத்தை சுயநிதிகல்லூரியாக்கும் அறக்கட்டளைநிர்வாகத்தின் போக்கை மாநாடு கண்டிக்கிறது. மேலும் பல்கலைக் கழகத்தை பாதுகாக்க மாணவியர்கள் பேராசிரியர்கள் நடத்தும் போராட்டத்திற்கு முழுமையான தனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது. அதேநேரத்தில் மாதக்கணக்கில் இந்த போராட்டம் நடைபெற்று வந்தபோதிலும் மத்திய, மாநில அரசுகள் இந்த பிரச்சனையில் தலையிடாமல் காவல்துறையை கொண்டு ஒடுக்கும் முயற்சியில் ஈடுபடுவதை வாலிபர் சங்கமாநாடு வன்மையாக கண்டிக்கிறது. எனவே, ஆட்சியாளர்கள் உடனடியாக தலையிட்டு அவினாசிலிங்கம் பல்கலைக் கழகத்தை அரசுடமையாக்க வேண்டும். இதேபோல், கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அரசு நிலங்கள் சில தனியார் நிறுவனங்களாள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இத்தகைய நிலங்களை மீட்டு இளைஞர்களின் நலனை மேம்படுத்தும் வகையில் உடற்பயிற்சிக் கூடம், விளையாட்டு மைதானம் உள்ளிட்டவைகளை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்டபல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. நிறைவாக, சங்கத்தின் மாநிலத்தலைவர் செ.முத்துக்கண்ணன் மாநாட்டைநிறைவு செய்து நிறைவுரையாற்றினார்.

புதிய நிர்வாகிகள் தேர்வு

இம்மாநாட்டில் புதியநிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் சங்கத்தின் புதிய மாவட்ட தலைவராக ரவீந்திரன், செயலாளராக கனகராஜ், பொருளாளராக சீலாராஜ் மற்றும் 7 துணை நிர்வாகிகள் மற்றும் 29 பேர்கொண்ட மாவட்ட குழுஉறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.இம்மாநாட்டின் இரண்டாவது நாளான ஞாயிறன்று மாலை ஆயிரக்கணக்கான வாலிபர்கள் பங்கேற்கும் பேரணி வடமதுரையிலிருந்து துவங்கி துடியலூர் பேருந்து நிலையம் அருகில் நிறைவு பெற்று அங்கு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.