திருவாரூர், நவ.20-

திருவாரூர் புதிய பேருந்து நிலையம் யாருக்கு?

நூறு ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட திருவாரூர் நகராட்சிக்கு புதுக்கோட்டை நகராட்சிக்கு அறிவித்தது போல எவ்விதமான சிறப்பு நிதியையும் அதிமுகவை சேர்ந்தவர் தலைவராக இருந்தும் கூட ஜெயலலிதா அரசு அறிவிக்கவில்லை. இதற்கு காரணம் அதிமுகவோடு கைகுலுக்கி கொள்கிற திமுக கவுன்சிலர்கள்தான். வேறு வேறு கறை வேட்டிகள் கட்டினாலும் நகராட்சி பணப் புழக்கத்தில் இரு கறைகளும் ஒரு கறையாக இரண்டற கலந்து வெள்ளமென ஓடுகிறது. அதிமுக – திமுகவின் ஒற்றுமைக்கு ‘சிறந்த உதாரணமாகத்தான்‘ புதிய பேருந்து நிலையம் அமைந்து வருகிறது. கடந்த திமுக ஆட்சியின் போது 11.5 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு 2011 ம் ஆண்டு ஜனவரி மாதம் 6 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டு புதிய பேருந்து நிலைய பணி துவங்கப்பட்டது. திருவாரூர் – தஞ்சை சாலையில் விளமல் அருகே இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது. இதில் மறைந்த நகர்மன்ற தலைவர் கலைஞரின் நண்பர் பெரியவர் கு.தென்னனின் முயற்சி குறிப்பிடத்தக்கதாகும். அதன்பிறகு 2011 ம் ஆண்டு மே மாதம் அதிமுக ஆட்சி ஏற்பட்டு ஜெயலலிதா தலைமையிலான அரசு உருவானபிறகு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் முதல் முறையாக திருவாரூரில் அதிமுகவை சேர்ந்த வழக்கறிஞர் ரவிச்சந்திரன் நகர்மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

அதிமுகவை சேர்ந்தவர் நகர் மன்ற தலைவராக வந்த பிறகு அதிமுக அரசு திருவாரூர் பேருந்து நிலையத்திற்கென எந்த விதமான நிதியையும் ஒதுக்கவில்லை. இதன்காரணமாக இப்பணி தாமதமடைந்தது. நகர் மன்ற தலைவர் நிதியாதாரம் போதாது, மேலும் நிதியை பெற்றுதான் பணியை தொடங்க முடியும் என்றுகூறி அரசை அணுகினாலும் நிதி ஒதுக்கப்படாமலேயே இருந்தது. புதிய பேருந்து நிலையத்தை பொறுத்தவரை கு. தென்னன் நகர்மன்ற தலைவராக இருந்த போது கலைஞர் அரசு 4 கோடி ரூபாய் மானியமாகவும் 1 கோடியே 40 லட்சம் ரூபாயை கடனாகவும், 60 லட்சம் ரூபாய் நகராட்சி பங்காகவும் அறிவிக்கபட்டது. இதனால் பேருந்துநிலைய வளாகம் முழுவதும் சிமெண்ட்சாலையாக அமைப்பதற்கு முடிவெடுக்கப்பட்டது. புதிய நிர்வாகம் வந்த பிறகு காலதாமதத்தின் காரணமாகவும் , கூடுதல் நிதி கிடைக்காத காரணத்தினாலும் ஒன்றரை ஆண்டுகள் கழித்து தற்போதைய அமைச்சர் ஆர். காமராஜ் அடிக்கல் நாட்டினார். நகராட்சி நிர்வாகம் தனது பங்கிற்கு நிதி ஏதும் கொடுக்காத நிலையிலும் சென்னையை சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவருக்கு 4.99 சதவீதம் கூடுதல் டெண்டர் விடப்பட்டதாலும் பேருந்து நிலைய கட்டுமான பணிகள் திருவாரூர் மக்கள் விரும்பியபடி அமையாமல் தரமற்றதாக உருவாகி வருகிறது. ஒப்பந்ததாரரை நாலாபுறமும் பறித்து எடுத்ததாலும் முறையாக அவருக்கு சேர வேண்டிய தொகையை காலத்தோடு வழங்காததாலும், மேலும் இந்த பணியை நகராட்சி நிர்வாகம் முறையாக கண்காணிக்காததாலும் புதிய பேருந்து நிலையம் பொலிவற்ற நிலையில் கட்டப்பட்டு வருகிறது.மேலும் திருவாரூர் நகராட்சிக்கு ஆணையர் இல்லாத நிலையில் நகராட்சி பொறியாளரே கூடுதல் பொறுப்பாக நிர்வாகத்தை கவனித்து வருகிறார். மூன்றுமாதத்திற்கு ஒருமுறை தான் தலைவர் கூட்டத்தை நடத்துகிறார். மேலும் பெண் உறுப்பினருக்கு பேசுவதற்கு வாய்ப்பே வழங்கப்படுவதில்லை. ஒரு சிலர் பேச முயற்சித்தாலும் அவர்களை அதிமுக, திமுக வை சேர்ந்த மூத்த உறுப்பினர்கள் என்று சொல்லப்படுபவர்கள் பேசவிடாமல் அமர செய்துவிடுவர்.தற்போது கட்டப்பட்டு வரும் பேருந்துநிலையத்தில் 10 க்கு 8  அளவில் சுமார் 72 கடைகள் கட்டப்பட்டுள்ளது. இதில் 10 கடைகள் நிர்வாக வசதிக்காகவும் ஏனைய கடைகள் பொது ஏலத்திற்காகவும் உள்ளது. பொதுவாக பேருந்து நிலைய கடைகளுக்கு 11 மாத வாடகையை டெபாசிட்டாக வாங்கி கொண்டு என்ன ஏலதொகையோ அதனை வாடகையாக பெற்று கொள்வது வழக்கம். இதில் கவுன்சிலர்களுக்கென்று எந்த பங்களிப்பும் கிடையாது. 3 ஆண்டுக்கொரு முறை ஏலம் விடவேண்டும் என்ற விதிமுறை இருந்தாலும் தொடர்ந்து தொழில் செய்து வருபவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக 15 சதவீத கட்டண உயர்வை அதிகரித்து நகராட்சி நிர்வாகம் வாடகையாக பெற்று வருவது வாடிக்கையாகும். இந்நிலையில் தற்போதே உனக்கு எனக்கு என்று அந்த பேருந்து நிலைய கடைகளுக்கு லட்சக்கணக்கில் பேரம் தொடங்கிவிட்டது. சொந்த கட்சிக்காரர்களாக இருந்தால் கூட அவர்களிடத்தில் லட்சக்கணக்கில் பணத்தை பெற்று வருகிறார்கள். ஒரு கவுன்சிலருக்கு 2 கடைகள் என்று விதிமுறைக்கு புறம்பாக பேசிக்கொண்டு சில கவுன்சிலர்கள் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறார்கள்என்று வியாபாரிகளும், பொதுமக்களும்குறை கூறுகின்றனர். எனவே பேருந்து நிலையத்தை தரமான முறையில் கட்ட வேண்டும். இத்தகைய முறைகேடுகளை களைய வேண்டுமென மக்கள் நல கூட்டியக்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. நகராட்சி நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. மக்கள் நலக் கூட்டியக்கதில் உள்ள கட்சிகளையும் இணைத்து கொண்டு ஒரு ஆய்வுக்குழுவை அமைத்து இன்னும் பல ஆண்டுகள் நிலைத்து நின்று மக்களுக்கு பயன்படவேண்டிய புதிய பேருந்துநிலைய கட்டுமான பணிகளை தரமாக கட்டுவோம் என வாக்குறுதிகள் அளித்தனர். ஆனால் அதற்கான முயற்சிகள் நகராட்சித் தரப்பில் இதுவரை எடுக்கப்படவில்லை. பேச்சுவார்த்தையின்படி நகர்மன்ற நிர்வாகம் நடந்து கொள்ளுமா? (ந.நி.)

Leave a Reply

You must be logged in to post a comment.