சென்னை வெள்ளமும் லாவணி அரசியலும்

அடைமழை கொட்டி சென்னை நகர் நீரில் மூழ்குவது புதிதல்ல. 1976, 1985, 1996, 1998, 2005, 2008 மற்றும் 2010ஆம் ஆண்டுகளின் அடைமழை வெள்ளம் பற்றிய தகவல்கள் ஆய்வு ஆவணங்கள், வரைபடங்கள் வெள்ளத் தடுப்பில் நிபுணத்துவம் பெற பாடங்களாக உள்ளன. இன்று 24 மணிநேரத்தில் பெய்த மழையைவிட ( 24.65 செ.மீ) 1976ஆம் ஆண்டு சில மணி நேரத்தில் 45 செ. மீ. மழை பெய்தது. மேடாக ஆகாத காலத்து கடல் போல் இருந்த செம்பரம்பாக்கம் ஏரி உடைந்தது. பெருவெள்ளம் அடையாறு வழியாக கடலுக்கு போவதை பேரலைகள் தடுத்ததால் அண்ணாநகருக்குள் புகுந்தது.அறிவியல் அடிப்படையில் நகர்ப்புற வளர்ச்சிக்குத் திட்டமிடவில்லையானால் இயற்கை தண்டித்துவிடும் என்று அந்த அடைமழை அறிவுறுத்தியது. அதோடு வெள்ளம் வடிய 1968-1973 வருடங்களில் திமுக அரசின் சாதனையாக காட்டப்பட்ட கூவம் திட்டம் அறிவியல் அடிப்படை இல்லாத திட்டம் என்பதை அந்த வெள்ளம் நிரூபித்துவிட்டது.

பின்னர் 2005ஆம் ஆண்டு அடைமழை வெள்ளம் தாக்கிய பொழுது அரசாங்கம் கடந்த காலங்களில் நான்கு முறை வெள்ளம் தாக்கிய அனுபவங்களிலிருந்து எதையும் கற்கவில்லை என்பதைக் காட்டியது. அதோடு வீட்டுமனை வர்த்தகம், அரசியல் அதிகாரத்தை கொண்ட கொலை வெறி வர்த்தகமாக மாறிவிட்டதால், எந்தத் திட்டமும் நிறைவேறாது என்பதையும் இந்த அடைமழை காட்டிவிட்டது. அன்று நீர்நிலைகள் மற்றும் வெள்ளநீர் வடிகால்கள் பேணுதல் ஆகியவைகளுக்கு ஒதுக்கிய பணம் விரயமாகியதை அன்றைய ஆட்சியாளர்களைத் தவிர மற்ற அனைவரும் உணர்ந்தனர். நகர்மயமாகும் பொழுது உழைப்பாளிகளே கிராமத்தை விட்டு நகர்ப்புறத்திற்கு லட்சக்கணக்கில் குடியேறுகின்றனர்.

அவர்களது குறைந்த வருமானத்திலும் வாழ்நாள் சேமிப்பில் தாங்கும் விலையில் வாங்க சுகாதாரமான குடியிருப்பு வசதிகள் அறிவியல் அடிப்படையில் அமைக்கப்படவில்லையானால் நீர்நிலைகள் மற்றும் வடிகால்கள் காணாமல் போய்நகரம் மாளிகை கட்டி வாழும் பணக்காரர்களுக்கும் நரகமாகிவிடும் என்பதை அந்தவெள்ளம் காட்டியது.மேலும் 2005 ஆம் ஆண்டு வெள்ளப் பெருக்கால் நீரில் மூழ்கியும் தொற்று நோயாலும் அகால மரணம் அடைந்தவர்கள் தவிர நிவாரணம் பெற போனவர்கள் நெரிசலில் மாண்டசோகம் சென்னை நகர உழைப்பாளிகளின் வறுமை சம்பளத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியது. அரசின் நீர் ஆதாரத் துறை புள்ளி விவரப்படி சென்னை வட்டாரத்தைச் சுற்றி 50 ஆண்டுகளுக்கு முன் இருந்த 1130 ஹெக்டர் பரப்பிலிருந்த 19 பெரிய ஏரிகள் படிப்படியாக 2005இல் 645 ஹெக்டர்களாக சுருங்கிவிட்டன.

நிலத்தடி நீரும் 30 அடிக்கு கீழே போனது. ஏரி சுருங்கி நிலக் கொள்ளையர்கள்வசம் போனதும் நீர்க் கொள்ளையர் வசம் நிலத்தடி நீர் போனதும் யார் கண்ணிலும் படவில்லை. அவைகள் லாபம் சம்பாதிக்கும் தொழில்களாகவே மக்கள் கண்ணில்பட்டது. அதோடுகுறைந்த அளவே பயன்தரும் மொட்டைமாடி மழைநீர் சேகரிப்பு ஒன்றுதான் நிலத்தடி நீர் கீழே போகாமலும், உவராக ஆகாமலும் தடுக்க இறுதித் தீர்வு என்று அரசு மக்களை நம்ப வைத்தது. அதோடு கூவம், அடையாறு இரண்டையும் சுத்தப்படுத்தும் திட்டமென 2000ஆவது ஆண்டில்அறிவித்தது; அதற்கு 1700 கோடி ரூபாய் ஒதுக்கியதாக அறிவித்தது. இவையெல்லாம் ஏமாற்று என்பதை 2005 வெள்ளம் காட்டிவிட்டது. அதன்பிறகு மழைக்காலம் என்றால் மக்கள் வெள்ளத்தோடும், தொற்று நோய்களோடும் குஸ்தி போடும் போர்க்காலமானது. திமுகவும், அதிமுகவும் ஒருவர் மீது ஒருவர் பழி சுமத்தும் அரசியல் காலமானது.2015இல் பெய்த மழை சென்னை மாநகராட்சி மழைநீர் வடிகால் கட்டிய லட்சணத்தையும் ஊழலையும், அறிவியல் அடிப்படையற்ற தன்மையையும் காட்டிவிட்டது. கோயம்பேடு மழைநீர் வடிகால் காங்கீரிட்டால் கட்டப்படாமல் கருங்கல் தூள் கலப்படத்தால் கட்டப்பட்டுள்ளது என்பதை ஒரு அதிகாரி மேலிடத்திற்கு 2014இல் கடிதம் மூலம் தெரிவித்ததை இந்தியன் எக்ஸ்பிரஸ்செய்தியாக வெளியிட்டுள்ளது.மழைநீர் வடிகாலில் நவீன கருவிகளைக் கொண்டு அடைப்புக்களை நீக்கியதாகத் தம்பட்டம் அடித்ததும், பொய் என்பதை இந்த மழை காட்டி கொடுத்துவிட்டது.

இயற்கையின் சீற்றம் தரும் பாடம்

ஆக, கடந்த 39 வருடங்களில் எட்டுமுறை வடகிழக்கு பருவக் காற்றின் சீற்றம் இயற்கையை மதித்து வாழக் கற்றுக் கொள் என்று எச்சரிக்கை விடுத்தும் ஆளும் கட்சிகளாக மாறி மாறி வரும் இரண்டு கட்சிகளும் பாடம் கற்கத் தயாரில்லை. அவர்களது நடைமுறைகள் மக்களை ஏமாற்றுவதாகவே இருந்து வருகின்றன. 1943இல் சென்னை நகரை அடைமழை தாக்கிய பொழுது அன்றைய பிரிட்டிஷ் கவர்னர் வெள்ள நிவாரணப் பணிகளாக பள்ளிக்கூடங்கள், சத்திரங்களை முகாம்களாக்கி கலவை சோறு இலவசமாக வழங்குவதை அறிமுகம் செய்தார். விடுதலைக்குப் பிறகும் மக்களை மதிக்காத பிரிட்டிஷ் நிர்வாக முறையை ஆட்சியாளர்கள் பின்பற்றினர். போர்க்காலஅடிப்படையில் வெள்ள நிவாரணம் என்பது மக்களின் வாக்குகளை சேகரிக்க சரியான வாய்ப்பு என்றே திமுகவும், அதிமுகவும் அதிகக் கவனம் செலுத்தின. அதில் ஏற்படும் குறைகளை அரசியலாக்கின. நிரந்தர தீர்வினை வீண் செலவாக கருதின. வெள்ளம் வடியும் அமைப்புக்களையும் நீர்நிலைகளைப் பாதுகாக்கும் ஏற்பாடுகளையும் பேணுவது அரசின் அரவணைப்போடு வளரும் ரியல் எஸ்டேட் பிசினசையும் உபதொழிலாக மாறிய குடிநீர்த் தொழிலையும் பாதிக்கும் என்று இரு கட்சிகளும் பயந்தன,முன் காலத்தில் சுயமரியாதை இயக்கத்தினரும், இட ஒதுக்கீட்டை உயிர் மூச்சாக கருதிய ஜஸ்டிஸ் கட்சியினரும் திமுகவின் தூண்களாக இருந்தனர். இன்று நிலைமை வேறு. திமுக மற்றும் அதிமுக ஆகிய இருகட்சிகளின், தூண்களாக இருப்பது நிலம், தாது மணல் மற்றும் நீர் ஆற்று மணல் இவைகளின் மீது ஆதிக்கம் செலுத்தும் கொலைவெறிக் கும்பல் என்பது அனைவரும் அறிந்த ரகசியம். திமுக, அதிமுக ஒருவர் மீது ஒருவர் தொடுக்கும் எல்லா ரகமான சொத்துக் குவிப்பு வழக்குகளின் விவரங்கள் இதற்கு அத்தாட்சியாக உள்ளன.

எங்கிருந்து தொடங்குவது?

இருக்கிற ஏரி குளங்கள் கூவம், அடையாறு மற்றும் கால்வாய்கள், மழை நீர்வடிகால்கள் இவைகளை தொடர்ந்து தூர்வாருவது, கழிவுநீரை நூறு சதம் சுத்தப்படுத்துவது, சதுப்பு நிலங்களை பாதுகாப்பது, பிறநாடுகளில் செயல்பட்டு வரும் மழை வெள்ளம் தேங்குமிடத்திலிருக்கும் நீரை சுத்தப்படுத்தி உயர் அழுத்த நவீன தொழில் நுட்பம் மூலம் நிலத்தடி நீராகச் சேகரிப்பது, எல்லாவற்றையும் விட கொலைவெறி வர்த்தகமாகிவிட்ட வீட்டுமனை வர்த்தகத்தை நேர்மையாக்குவது, பெயருக்கு ஒன்றை கட்டி வாயால் வடை சுடாமல் அறிவியல் அடிப்படையில் குடியிருப்பு வளாகங்களை உருவாக்குவது, உழைப்பாளி மக்களுக்கு தாங்கத்தகு விலையில் சுகாதாரமான வீடுகள் கட்டுவது இவைகள் நனவாக சட்டமன்ற நடைமுறைகள் மாற வேண்டும். தனிநபர் துதி லாவணி கச்சேரி தர்பாராக இருப்பதை மாற்றி மக்களுக்கான ஆட்சிமன்றமாக ஆக்குவதில் தொடங்க வேண்டும். அது தொடக்கமே தவிர முடிவல்ல என்ற புரிதலும் வேண்டும்.

Leave a Reply

You must be logged in to post a comment.