கனடாவின் பிரதமராகப் பதவியேற்றிருக்கும் இளைஞர் ஜஸ்டின் துரோதோவிடமிருந்து இந்திய அரசியல் தலைவர்கள் கற்றுக்கொள்வதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அவருடைய அமைச்சரவை வானவில்லைப் போல் வண்ணமயமாக அமைத்துள்ளதை கண்டு உலகமே வியக்கிறது. அமெரிக்கா கண்டத்தில் நிறைந்து காணப்படும் இனவாதத்திற்கும், பயங்கரவாத பயத்திற்கும் சவால்விடும் வண்ணம் தன்னுடைய அமைச்சரவையை உருவாக்கியுள்ளார். துரோதோவின் அமைச்சரவையில் சரி நிகர் எண்ணிக்கையில் பெண்கள் இடம் பெற்றுள்ளனர், ஆனால், நம் நாட்டிலோ நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டையே நிறை வேற்ற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம். அவர் அமைச்சரவையில் பெண்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் சமத்துவம் பற்றி செய்தியாளர்கள் வினவியபோது, ”இதில் என்ன ஆச்சரியமிருக்கிறது?

கனடாவைப் பாருங்கள்

நாம் வாழ்வது 2015ல் என்பதை நினைவில் வைத்திருங்கள்” என பதிலளித்துள் ளார். அமெரிக்க ஐக்கிய நாட்டில் 2016ல் நடக்கவிருக்கும் தேர்தலின்போது அமெரிக்க அரசியல் தலைவர்களும், வாக்காளர்களும் இதைக் கவனத்தில் எடுத்துக் கொள்வார்களா? உலக நாடுகள்அனைத்திற்குமே இது பாடமாக அமையவேண்டும். தேர்தல் என்றதுமே நம் நாட் டின் பல அரசியல் கட்சித் தலைவர்களுக்கு மதமும்,சாதியும்தான் நினைவுக்கு வருகின்றன. கனடாவில் ஜஸ்டின் துரு தோவுக்கு முன் ஆட்சியிலிருந்த கன்சர் வெடிவ் கட்சியைச் சேர்ந்த ஸ்டீபன் ஹார்பர் பயங்கரவாத பயத்தைப் பரப்புரை செய்துகொண்டிருந்தார். கனடா விலும் நம்நாட்டின் பா.ஜ.க.வைச் சேர்ந்த யோகி ஆதித்யாநாத், சக்ஷி மகராஜ்போன்ற பிற்போக்குவாதிகள் இருக்கத்தான் செய்கின்றனர். இத்தகு பத்தாம் பசலிகளின் பின்னால் பதுங்கிவிடாமல், ஆரம்பத்திலிருந்தே மார்பை நிமிர்த்தி அரசியலில் பீடுநடைபோடுகிறார் துருதோ. பெருபான்மைபலம் கொண்ட ”வெள்ளை” மக்கள் தன்னைக் கவிழ்த்தி விடுவார்களோ என்ற பயமுமின்றி தன்னுடைய அரசியலை முன்னெடுத்துச் செல்லுகிறார்.

ஒரு முறை முக்காடு அணிந்த ஒரு முஸ்லிம் பெண் தன்னுடைய பெண் குழந்தையை துரோதோவிடம் கொடுத்துவிட்டு, “என் குழந்தை உங்கள் பாதுகாப்பில் கனடா நாட்டின் சுதந்திரமான பெண்ணாக வளருவாள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது” என்றாள். இதைக் கேட்ட மக்கள் திரள் கரகோஷம்எழுப்பியது. இத்தகு இஸ்லாமிய நேசவார்த்தைகளையும், நடவடிக்கைகளை யும் கனடா மக்கள் ஆதரிப்பார்கள் என்று கன்சர்வேடிவ் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பரால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. மாற்றுக் கலாச்சாரத்தை மதிக்காத பொது புத்தியிலிருந்து ஹார்ப்பர் மாறுபட்டிருக்கவில்லை என்பதே காரணம். இத்தகு வெறுப்புக் கலாச்சாரத்தை இந்தியாவிலும், அமெரிக்கவிலும், இன்னும் பல நாடுகளிலும் காண்கிறோம்.

பன்முகத்தன்மை கொண்ட அமைச்சரவை

இதனால்தான் துருதோவால் அனைத் துப் பிரிவு மக்களையும் உள்ளடக்கிய அமைச்சரவையை உருவாக்க முடிந்தது. இவருடைய அமைச்சரவையில் நான்கு சீக்கியர்கள் இருக்கிறார்கள் என்றால் நம்மால் நம்ப முடியுமா? ஒரு இஸ்லாமியப் பெண் இடம் பெற்றுள்ளாள். ஓரினச் சேர்க் கையாளர் சேர்க்கப்பட்டுள்ளார். மாற்றுத் திறானாளிகள் இடம் பெற்றுள்ளார்கள். இவற்றுக்கெல்லாம் மேலாக கனடாவின் பூர்வகுடி இனத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இடமளிக்கப்பட்டுள்ளது. முக்கியமான துறைகளுக்கான அமைச்சர்கள் எல்லாம் அத்துறை சார்ந்த வல்லுநர்கள் என்பதும் கவனிக்கத்தக்கது. சுகாதாரத்துறை அமைச்சர் ஒரு டாக்டர். பாதுகாப்புத்துறை அமைச்சர் ஓய்வு பெற்ற ஒரு சீக்கிய ராணுவ அதிகாரி; வேளாண்துறை அமைச்சர் ஒரு விவசாயி. ஒரு சிறந்த விஞ்ஞானியே அறிவியல்துறை அமைச்சராவார். நீதித்துறை அமைச்சர் ஒரு சட்டவல்லுநர். இவ்வாறே அனைத்துத் துறைகளும் துறைசார்ந்தவர்களாலேயே நிரப்பப்பட்டுள்ளது. அதேசமயம் தனது அமைச்சரவையில் அனைத்து சமூகப் பிரிவினரும், சரியான அளவில் பெண்களும் இணைந்துள்ளதை உறுதிப்படுத்தினார். அதேசமயம் இவர்கள் அனைவரும் தேர்ந்தெடுக்கப்பட்ட திறமைசாலிகள், வெறும் அடையாளத்திற்காக அமர்த்தப்பட்டவர்கள் அல்ல. அமெரிக்காவில் நிலவிடும் இனப்பாகுபாடும், இந்தியாவில் தற்போது தலைதூக்கியுள்ள பெரும்பான்மை மதவாதமும் நாம் அனை வரும் அறிந்ததே. கனடாவிலும் ஒரு சமயத்தில் இத்தகு பாகுபாடுகள் நிலவியதுதான். பஞ்சாபிலிருந்து புலம்பெயர்ந்து வந்த சீக்கியர்களை வான்குவரில் குடியேற்றுவதில் சிரமம் இருந்தது. இரண்டாம் உலகப் போருக்குப்பின் ஜப்பானி யர்களை ஏற்றுக் கொள்வதில் மாச்சரியம் இருந்தது. சீனர்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தலைவரி கனடாவின் மிகப்பெரிய அவமானமாகும். இத்தகு பின்னணி களையெல்லாம் மீறி துரோதோ கனடாவை இனவேறு பாடுகளற்ற நாடாகஉருவாக்க முயலுவதால்தான் அவரை இன்று உலகமே பாராட்டுகிறது. இதை உலகின் பல அரசியல் தலைவர்களும் செய்திடத் தயங்குகிறார்கள். கலாச்சார துவேஷத்துக்கு எதிராக, துணிச்சலாகச் செயல்படுபவர்கள் எல்லாம் வெற்றியேபெறுகிறார்கள். உலக அரசியலின் துரதிர்ஷ்டம் துரோதோ போன்ற தலை வர்கள் அடிக்கடி தோன்றுவதில்லை.

வெறுப்பு அரசியலுக்கு எதிரான நிலைபாடு

வதந்திகளைப் பரப்பி மக்களிடையே அச்சத்தை விளைவிக்க முயலும் இன வெறியர்கள் எந்தவொரு சமுதாயத்திலும் இருக்கத்தான் செய்கிறார்கள். நம்மூர் சக்ஷிமகாராஜ் போன்ற ஆசாமி ஒருவர் கனடா நாடாளுமன்றத்தில் இருந்தார். வெள்ளையின மக்களை, கருப்பு மற்றும் பிரவுன் நிற மக்களிடமிருந்து பிரித்து வைக்க வேண்டும். அப்போதுதான் வெள்ளையினத்தினரின் தூய்மையைப் பாதுகாக்க முடியும் என்று வெறுப்பு அரசியல் பேசினார். இவர்கள் வரலாற்றுச் சக்கரத்தை பின்னோக்கிச் சுற்ற முயலுபவர்கள். முக்காடு, குல்லா அணியும்இஸ்லாமிய மக்கள் மீது காழ்ப்புணர்ச் சிகளை வளர்த்து அரசியல் ஆதாயம் தேடுபவர்கள். முஸ்லிம் பெண்கள் முக்காடு அணிவதை ஆதரிப்பவர் அல்ல துரோதோ. முக்காடை நீக்குவதற்கு அவர்கள் முழுமனதோடு ஏற்றுக்கொள்ளும் வரை நாம் காத்திருக்க வேண்டும். சட்டங்கள் இயற்றியோ, வன்முறையை பிரயோகித்த அல்ல என்பதே துரோதோவின் நம்பிக்கை.

பொருளாதார வளர்ச்சி

நாட்டில் சகிப்புத்தன்மையை வளர்ப்பதில் மட்டுமல்ல பொருளாதார வளர்ச்சி குறித்தும் துரோதோ தெளிவான சிந்தனையுடனுள்ளார். வளர்ச்சிப் பொருளா தாரத்தை வலியுறுத்துபவர்கள் அனை வரும் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அந்நாட்டின் சமூக அமைதி மிக முக்கியமானது என்பதைக் குறிப்பிடு கின்றனர். நோபல் பரிசு பெற்றுள்ள பொருளாதார நிபுணர் அன்கஸ் டீட்டன் சமூக அமைதி இல்லாமல் பொருளாதார வளர்ச்சி சாத்தியமில்லை என்று கூறியுள்ளதை துரோதோ முற்றிலும் ஆதரிக்கிறார். தன்னுடைய தேர்தல் வெற்றிக்குப்பின் வெளியிட்ட திறந்த கடிதத்தில் சந்தைப் பொருளாதாரத்தை போற்றிடும் கன்சர்வேட்டிவ் கட்சியினரிடமிருந்து தான் முற்றிலும் மாறுபட்டவர் என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். மக்கள் நலம் குறித்த விஷயங்களில் அரசின் தலையீடு இருக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளார். பெரும் பணக்காரர்களுக்கு அதிக வரிவிதித்து பொதுமக் களைக் காப்பாற்றத் தயங்கிடமாட்டேன் என்றும் விளக்கியுள்ளார். இதற்கென்றே நீதித்துறை அமைச்சராக கனடாவின் பூர் வீகக் குடியினர் ஒருவரை நியமித்துள்ளார்.

தந்தை வழியில் தனயன்

சித்தாந்த ரீதியில் துரோதோ அவரின் தந்தையும் முன்னாள் பிரதமருமான பியர் துரோதோவை ஒத்தே விளங்குகிறார். பியர் பதினாறு ஆண்டுகள் பிரதமராக நீடித்தார். கனடாவில் மதச்சார்பற்ற குடியரசை நிறுவதில் உறுதியாக இருந்தார். பியர் பிரதமராக இருந்தபோது கனடா கடும் நெருக்கடிகளைச் சந்தித்தது. குபெக் பிரிவினை வாதிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து நாட்டின் ஒற்றுமை யைக் காப்பாற்றினார். பியர் துரோதா பல வழிகளிலும் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவை ஒத்திருந்தார். இருவரும் தங்கள் நாட்டின் வளர்ச்சி குறித்த கனவை நனவாக்குவதில் குறியாய் இருந்தனர். தன் தந்தையைப் போன்றே ஜஸ்டின் துரோதோவும் கனடாவின் பொரு ளாதார வளர்ச்சியிலும், ஒற்றுமையைப் பேணுவதிலும் அக்கறையுடன் விளங்கு கிறார்.

கட்டுரையாளர் : சமூக அறிவியலாளர் மற்றும் பேராசிரியர்,சிவ்நாடார் பல்கலைக் கழகம்.தமிழில் : பேரா.பெ.விஜயகுமார்.

Leave A Reply

%d bloggers like this: