அச்சப்படுத்தும் திசை

இந்தியப் பொருளாதாரக் கொள்கை பற்றி காங்கிரஸ் கவலையை வெளிப்படுத்திவருகிறது. மத்தியில் தற்போதுள்ள பாஜக ஆட்சி இதில் திசை தெரியாமல் செல்கிறது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வருத்தப்பட்டிருக்கிறார். இந்திரா காந்தி பிறந்த நாள் விழாவில் நிகழ்த்திய உரையில் அவர், இந்தியாவுக்கான வளர்ச்சியைத் திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும் என்று ஜவஹர்லால் நேரு காட்டிய வழியையும் நினைவு கூர்ந்துள்ளார். கலப்புப் பொருளாதாரம் என்ற குழப்பக் கொள்கையை நேரு முன்வைத்தபோதும் அதில் குறைந்தபட்சம் பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கம், பாதுகாப்பு என்ற அம்சங்கள் இருந்தன. பெருமுதலாளிகளுக்கு உதவுவதாக இருந்தாலும் புல்லுக்கும் ஆங்கே புசிவது போல் பொதுத்துறை நிறுவனங்கள் கொஞ்சம் வேலை வாய்ப்பைத் தந்தன. ஆய்வுக்கு இடமளித்தன. அயல்நாடுகளோடு பலதுறைகளில் போட்டியிடும் தன்னம்பிக்கைக்கு உதவின. 1991இல் மன்மோகன் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது துவக்கிவைத்ததுதான் ‘புதிய’ பொருளாதாரக் கொள்கை என்பதை அவ்வளவு எளிதாக மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

தாராளமயம், தனியார்மயம், உலகமயம் என்று மும்மயக் கொள்கையால் இந்தியப் பொருளாதாரத்தைத் தவறான திசையில் வழிநடத்தியதன் துவக்கப் புள்ளியே இவர்தான் எனலாம். 2004 தொடங்கி 10 ஆண்டுகள் பிரதமராக வும் இருந்த மன்மோகன் சிங்கின் முதல் ஐந்து ஆண்டுகாலம், அந்த ஆட்சிக்கு வெளியே யிருந்து ஆதரவளித்த இடதுசாரிகளின் கடிவாளத்தால் அந்தக் கொள்கையின் வேகம் சற்று கட்டுப்படுத்தப்பட்டது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் தறிகெட்டு ஓடிய கொள்கைக் குதிரை பல கொள்ளை களுக்கு இட்டுச் சென்றது. அலைக்கற்றை ஊழல், நிலக்கரி ஊழல் என்று வரலாறு காணாத ஊழல் குற்றச்சாட்டுகளும் வழக்குகளும் மக்களை முகம் சுளிக்க வைத்தன. இதுதான் இவர் தலைமையில் நடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி காட்டிய திசைவழி. அதே வழியில் இன்னும் வேகமான பாய்ச்சலில் ஒடுகிறது தற்போதுள்ள பாஜக அரசு. ஊழல் ஒழிப்பு, வளர்ச்சி, திறன்மேம்பாடு என்று வாய்ச்சவடால் அடித்து ஆட்சியைப் பிடித்த பாஜக உலகமயத்தை அமல்படுத்துவதில் அதிதீவிரம் காட்டுகிறது.

வெளிநாட்டு நேரடி முதலீட்டைக் கவர்வதாக மாய்மாலம் காட்டி 18 மாதங்களில் 30 நாடுகளுக்குப் பயணம் செய்திருக்கிறார் நரேந்திரமோடி. இன்னும் கதவுகளை அகலத் திறந்துவிடுங்கள் என்பதுதான் பன்னாட்டு பகாசுர நிறுவனங்களின் நெருக்குதலாக இருக்கிறது. பணவீக்கம் குறைந்துவிட்டது, பற்றாக்குறை சரி செய்யப்பட்டுவிட்டது என்று பறைசாற்றப் படுகிறது. ஆனால் பருப்பு விலையும் வெங்காய விலையும் பிற அத்தியாவசியப் பொருட்கள் விலையும் மக்களை விழிபிதுங்கவைத்துள்ளது. காங்கிரசுக்கு மாற்று அல்ல பாஜக என்பதைத் தான் அனுபவம் தெள்ளத்தெளிவாகக் காட்டுகிறது. மன்மோகன் சிங் திறந்துவிட்ட வழியை மேலும் பெரிதாக்கி இந்தியாவின் பொருளாதாரத்தை முட்டுச் சந்தில் நிறுத்தியதுதான் இருகட்சி ஆட்சிகளின் சாதனை. இன்னும் எந்தத் திசையைக் காட்ட எத்தனிக்கிறார் மன்மோகன் சிங் என்பது அச்சத்தையே ஏற்படுத்துகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.