விமான பணிப் பெண்களிடம் பாலியல் சீண்டல் கோவையில் இந்து மகாசபை நிர்வாகி கைது

பீளமேடு, நவ. 19 –

பாலியல் வல்லுறவுவிமானப் பணிப் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக இந்து மகாசபை நிர்வாகி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவையில் இருந்து சென்னைக்கு, புதனன்று இரவு 10.45 மணிக்கு 130 பயணிகளுடன் தனியார் விமானம் புறப்பட தயாரானது. அப்போது பயணிகளில் 3 பேர் குடிபோதையில் விமான பணிப்பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தகராறு செய்துள்ளனர். இவர்கள் விமான பணிப்பெண்களை செல்போனில் போட்டோவும் எடுத்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த பணிப்பெண்கள் விமான அதிகாரிகளிடம் புகார் செய்யவே, அவர்கள், தகராறில் ஈடுபட்ட 3 பேரையும் கண்டித்து, செல்போனில் எடுத்த புகைப் படங்களை அழிக்குமாறு கூறியுள்ளனர். ஆனால், அதிகாரிகளிடமும் அவர்கள் தகராறில் ஈடுபடவே, இதுகுறித்து பீளமேடு காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் கோபி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சம்பந்தபட்ட 3 பேரையும் காவல்நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த செந்தில்குமார் (40), ராஜா (40), சுபாஷ் (32) என்பதும், மேலும், செந்தில்குமாரும், ராஜாவும் வழக்கறிஞர்கள் – சுபாஷ் இந்து மகாசபையின் இளைஞர் அணி நிர்வாகி என்பதும் தெரியவந்தது. இவர்கள் 3 பேர் மீதும், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் அவர்களைக் கைது செய்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.