சென்னை, நவ.19-

left parties

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிடும் விதத்தில் சிஐடியு தொழிலாளர்கள் ஒரு நாள் ஊதியம் அளித்து உதவிட வேண்டும் என சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வியாழனன்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-தமிழகத்தில் கடந்த 10 தினங்களாக பெய்து வந்த மழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் போன்ற மாவட்டங்களின் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். இந்த மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பல்லாயிரக்கணக்கான வீடுகள் சேதமுற்றுள்ளன. மாநிலம் முழுவதும் மழை வெள்ளத்தால் சுமார் 180 பேருக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

இந்த பகுதிகளை சார்ந்த மக்கள் அன்றாட பணிகளை கூட செய்ய முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி போன நிலை ஏற்பட்டுள்ளது. உணவு, குடிநீர் கிடைக்காமலும், மின்சாரம் துண்டிக்கப்பட்டதாலும் மக்கள் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.  தொழிலாளர் பணியிடங்களுக்கு செல்லமுடியாத நிலையும், குறிப்பாக முறைசாரா தொழிலாளர்கள் வேலையிழந்தும், ஊதியமிழந்தும் பரிதாப நிலையில் உள்ளனர். தற்போதும் பெரும்பாலான இடங்களில் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இத்தகைய அவல நிலையில் உள்ள மக்களுக்கு தமிழக தொழிலாளி வர்க்கம்நேசக்கரம் நீட்டுவது ஒவ்வொரு தொழிலாளியின் கடமையாகும்.

அந்த வகையில் சிஐடியுவுடன் இணைக் கப்பட்ட சங்கங்களில் உள்ள தொழிலாளர்கள் ஒரு நாள் ஊதியத்தை அளிக்க வேண்டும் என்று சிஐடியு மாநிலக்குழு அறைகூவல் விடுக்கிறது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் மாத ஊதியம் பெறும் ஒவ்வொரு தொழிலாளியும் தனது ஒரு நாள் ஊதியத்தை சம்பந்தப் பட்ட நிர்வாகத்திடம் அளித்து, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்த உயரிய பணியை முன்னுரிமை பணியாக கருதி உடனடியாக செயல்படுத்திட வேண்டுமென அனைத்து சங்கங்களையும் சிஐடியு தமிழ் மாநிலக்குழு கேட்டுக்கொள்கிறது.

Leave A Reply

%d bloggers like this: