திருவள்ளூர்,நவ.18-

திருவள்ளூர் மாவட்டத்தில் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது

திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர் புறநகர், மணலி புதுநகர்,அத்திப்பட்டு புதுநகர் உட்பட பல்வேறு பகுதிகளில் 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் லட்சக்கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ மழையால் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஆரணி ஆறு, குசஸ்தலை ஆறு, கூவம் ஆறு ஆகியவற்றில் வரலாறு காணாத அளவிற்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஊத்துக்கோட்டை அருகில் உள்ள பிச்சாட்டூர் ஏரி நிரம்பியதால் அதன் கதவுகள் திறந்ததால் ஆரணி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி ஏரி நிரம்பி வழிவதால் உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

இதனால் குசஸ்தலை ஆற்றில் வெள்ளம் கட்டுக்கடங்காமல் செல்கிறது. காரனோடை அருகில் கன்னியம்பாளையம் பகுதியில் ஆற்றின் கரை உடைந்து வழுதிகம்பேடு, விச்சூர் உள்பட பல கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மீஞ்சூரையடுத்த மணலி புதுநகரையும் வெள்ளம் சூழ்ந்து குடியிருப்புகளில் நுழைந்துள்ளது.இதனால் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வீடுகளில் கட்டில், பீரோ,துணி, பாத்திரங்கள்,ஆவணங்கள் அனைத்தும் நீரில் முழ்கிவிட்டன. குழந்தைகள், பெண்கள் என அனைவரும் வெளியேறி நடுரோட்டிற்கு சென்றுவிட்டனர்.அதே போல அத்திப்பட்டு புதுநகரில் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் தண்ணீரில் மூழ்கியுள்ளது.

பட்டமந்திரியில் 4ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இப்படி பொன்னேரி, பஞ்செட்டி, திருக்கண்டலம், ஊத்துக்கோட்டை, மெய்யூர், சோழவரம், திருநின்றவூர், பூண்டி,கடம்பத்தூர், திருத்தணி, பள்ளிப்பட்டு, திருபாச்சூர் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.வீடுகளை இழந்துள்ள லட்சகணக்கான மக்கள் போதிய உணவு,குடிநீர் இன்றி தவிக்கின்றனர்.முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு மட்டும் உணவு வழங்கப்படுகிறது. அங்கு வேறு எந்த அடிப்படை வசதிகளும் செய்துதரப்படவில்லை, அதிகாரிகளும் சென்று விசாரிக்கப்படுவதில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 1236 ஏரிகளில் சுமார் 150 ஏரிகளில் தான் மழைநீர் நிரம்பியுள்ளது. பொன்னேரி அருகில் உள்ள சின்னம்பேடு ஏரி 1548 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்த ஏரிக்கு வரும் வரவு கால்வாய் தூர்வாரப்படாததால் சின்னம்பேடு ஏரி வறண்டுள்ளது. இப்படி பல ஏரிகளின் வரவு கால்வாய்கள் ஆக்கிரமித்தும் தூர்வாராமலும் இருப்பதால் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. குளங்கள் நிறைந்து மழைநீர் ஏரிக்கு செல்லும்,ஏரிகள் நிறைந்த பிறகுதான் ஆற்றுக்கு செல்லும் அப்படித் தான் அன்று வடிவமைத்துள்ளனர்.

இவைகள் அனைத்தும் பாதுகாக்கபடாமல் சீரழிக்கப்பட்டுள்ளதால் மழைக்காலங்களில் வெள்ளநீர் வெளியேற முடியாமல் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ப.சுந்தரராசன், மாவட்டச் செயலாளர் டி.பன்னீர்செல்வம், மாவட்டச்செயற்குழு உறுப்பினர் கே.செல்வராஜ், பொன்னேரி பகுதிச் செயலாளர் இ.தவமணி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் இ.சுந்தரேசன், ஜி.வினாயகமூர்த்தி,எம்.பழனி,ஜீவா ஆகியோர் செவ்வாய் (நவ.17) அன்று மாவட்டம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மழையால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.

கடும் மழையால் மாவட்டம் முழுவதும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த விளைபொருட்கள் சேதமடைந்துள்ளன. முகாம்களில் உள்ளவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும்,மாவட்டம் முழுவதும் சாலைகளை முழுமையாக சீரமைக்க வேண்டும், ஏரி வரவு கால்வாய்கள் தூர் வாரவேண்டும், மழையால் தொழிலை இழந்துள்ள கைத்தறி நெசவாளர்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும். வருங்காலத்திலாவது மழைநீரை சேமிக்கும் வகையில் தடுப்பணைகளை கட்டுவதோடு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உரிய காலத்தில் எடுக்கவேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.