திப்புவும் திண்டுக்கல்லும்!

திண்டுக்கல் மாவட்டத்தில் எப்படியாவது தங்களை வளர்த்துக் கொள்ள சமீப காலமாக இந்துத்துவா சக்திகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. திண்டுக்கல்லில் இந்துக்களும், இஸ்லாமியர்களும், கிறிஸ்துவர்களும் சகோதரர்களைப் போல ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறார்கள்.இந்நிலையில், ரத்தம் குடிக்கும் ஓநாய்கள் போல அல்லது சிண்டு முடிந்து விடும் சிறு நரிகள் போல ஏதாவது பிரச்சனையை கிளறி அமைதிக்கு குந்தகம் விளைவிக்க காத்திருக்கிறது இந்துத்துவா கும்பல்.

வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராக வீர சமர்புரிந்து, மரணம் தழுவிய ஹைதர் அலி மற்றும் அவரது மகன் திப்புசுல்தான் ஆகியோருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதி எம்எல்ஏ வலியுறுத்தினார். அதனை ஏற்று கடந்த ஆண்டு, 110 விதியின் கீழ், சுதந்திரப் போராட்ட வீரர்கள் திப்புசுல்தான் , ஹைதர் அலி ஆகியோருக்கு மணிமண்டபம் திண்டுக்கல்லில் கட்டப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார்.

தற்போது திண்டுக்கல் அங்குவிலாஸ் அருகே அரசு இடம் கையகப்படுத்தப்பட்டு மணிமண்டபம் கட்டும் பணி துவங்கியுள்ளன. மிகவும் காலதாமதமாக துவங்கப்பட்டாலும் விரைந்து பணிகள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இந்த மணிமண்டபத்தை கட்டக்கூடாது; நிறுத்த வேண்டும் என்று இந்துத்துவா சக்திகள் ரகளையில் ஈடுபட்டு வருகின்றன. திப்புசுல்தான் மற்றும் ஹைதர்அலி ஆகியோர் இந்துமத விரோதிகள், இந்துக்களின் வழிபாட்டுத் தளங்களை இடித்தவர்கள். அவர்களுக்கு மணிமண்டபமா? என்று கூச்சல் போட்டு வருகிறார்கள்.

மேலும், திண்டுக்கல் மலைக்கோட்டையில் இருந்த அபிராமி அம்மன் கோவிலை சிதைத்தவர்கள் என்றும், அபிராமி அம்மன் சிலையை உடைத்தவர்கள் என்றும் தவறான பிரச்சாரம் செய்கிறார்கள்.
இதில் துளி அளவும் உண்மை இல்லை. அபிராமி அம்மன் சிலையை உடைத்திருந்தால் தற்போது நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள கோவிலில் உடைந்த சிலையல்லவா இருந்திருக்கும்?
வெள்ளையர்கள் மலைக்கோட்டையில் உள்ள கோவிலை தரிசிக்கச் செல்வது போல சில ஒற்றர்களை அனுப்பி வைத்தனர். இதனை தடுக்கவே மலைக்கோட்டையில் இருந்த சிலைகளை கீழே கொண்டு வந்து பிரதிஷ்டை செய்து வைத்தார் திப்பு.

இந்த வரலாறு தெரியாமல் உளறும் மதவெறியர்களுக்கு இன்னொன்றும் சொல்ல வேண்டும். திண்டுக்கல் மலைக்கோட்டையில் ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு கோவில் கட்டப்பட்டது. அந்த கோவிலை வேலுநாச்சியார் வழிபடுவதற்காக ஹைதர்அலியே கட்டிக் கொடுத்தார். அதற்கும் ஒரு பின்னணி உண்டு.சிவகங்கையில் உள்ள காளையார் கோவிலில் மன்னர் முத்துவடுகநாதர் தனது இளைய ராணி கவுரிநாச்சியாருடன் தரிசனத்திற்கு சென்ற போது கும்பினி படைகளால் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தைக் கேள்விப்பட்ட ராணி வேலுநாச்சியார், தனது தளபதிகளான மருதுசகோதரர்கள் மற்றும் மந்திரி தாண்டவராயனுடன் தப்பித்துச் சென்றார்.

வஞ்சகமாக தனது கணவரை கொலை செய்து ஆட்சியை அபகரித்த கும்பினி படைக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும்; மீண்டும் சிவகங்கையை கும்பினி படைகளிடம் இருந்து மீட்க வேண்டும் என்ற வேட்கையோடு இருந்த வேலுநாச்சியார், மைசூர் மன்னர் ஹைதர் அலியின் உதவியை நாடினார். இதனையடுத்து திண்டுக்கல் கோட்டையில் இருந்த ஹைதர் அலியைச் சந்திக்கச் சென்றார். அப்போது தனது ஆசனத்தில் இருந்து எழுந்து சென்று வேலுநாச்சியாரை வரவேற்று உரிய ஆசனம் அளித்து விபரம் கேட்டார். தனது கணவர் முத்துவடுகநாதரும் இளையராணியும் கொலை செய்யப்பட்டதை வேலுநாச்சியார் விவரமாக எடுத்துக் கூறினார்.

இதனை கேட்ட ஹைதர் அலி மிகவும் கவலையுற்றார். பின்னர் ஆறுதல் கூறிய ஹைதர், தங்களுக்கு எந்த வகையில் நான் உதவ வேண்டும் என்று கேட்ட போது மீண்டும் சிவகங்கையை கும்பினி படையிடம் இருந்து மீட்டுத்தர உதவ வேண்டும்; சிவகங்கை சுதந்திர நாடாகும் வரை தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட இந்த திண்டுக்கல் மலைநாட்டில் உங்கள் சகோதரி போல தங்கிக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கோரினார். நீங்கள் எப்போது சிவகங்கையின் மீது போர் தொடுக்க ஏற்ற தருணம் என்று நினைக்கிறீர்களோ அப்பொழுது உங்களுக்கு வேண்டிய படைக்கலன்களை தந்து உதவுவான் இந்த சகோதரன்; அது வரை திண்டுக்கல் கோட்டையிலோ, விருப்பாச்சி கோட்டையிலோ, நாகல்நகரிலோ, விளாம்படம் விடுதியிலோ ஒரு அரசிக்குரிய ஆள் அம்பு சேனையுடன் வாழலாம். அதற்கு மாத செலவாக 400 பவுன் வழங்கப்படும் என உறுதியளித்தார்.

இதனையடுத்து திண்டுக்கல் மலைக்கோட்டை, விருப்பாட்சி, அய்யம்பாளையம் கோட்டைகளில் வேலுநாச்சியார் தங்கி தனது தளபதிகளான வெள்ளைமருது, சின்னமருது, மந்திரி தாண்டவராயன் ஆகியோருடன் சிவகங்கையில் போர் தொடுக்க தயாரிப்பு பணிகளை மேற்கொண்டார்.
வேலுநாச்சியார் திண்டுக்கல் கோட்டையில் தங்கியிருந்த போது தனது இஷ்ட தெய்வமான ராஜராஜேஸ்வரியை தரிசிக்க முடியவில்லை என்ற மனவருத்தம் கொண்டார். இந்த மன உறுத்தலை அறிந்த ஹைதர்அலி, திண்டுக்கல் மலைக்கோட்டையில் ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு ஆலயம் அமைத்து தங்கத்திலான விக்ரகத்தை பிரதிஷ்டை செய்து தந்தார். எட்டு ஆண்டுகள் தங்கியிருந்த வேலுநாச்சியார் ஆங்கிலம், பிரெஞ்சு உள்ளிட்ட பல மொழிகளைக்கற்றார்.

பின்னர் ஒரு சமயம், வத்தலக்குண்டு பகுதியில் உள்ள கரும்புத்தோட்டங்களை காட்டு யானைகளும், கால்நடைகளை புலிகளும் நாசம் செய்ததையடுத்து மக்கள் திப்புவிடம் முறையிட்டனர். இதனையடுத்து திப்புசுல்தான் வேட்டைப்படைகளுடன் சென்ற போது அந்த வேட்டையில் வேலுநாச்சியார், மருதுசகோதரர்கள் கலந்து கொண்டனர். இந்த வேட்டையில் காட்டு விலங்குகள் விரட்டியடிக்கப்பட்டன. மருதுசகோதரர்களின் வேட்டைத்திறனை திப்பு பாராட்டினார்.

இதனையடுத்து தீரர் திப்புசுல்தானின் நட்பு கிடைக்க வாய்ப்பளித்த அன்னை வேலுநாச்சியாரின் காலில் விழுந்து ஆசிபெற்றனர் மருதுசகோதரர்கள். வத்தலக்குண்டு வேட்டைக்குப் பிறகு உற்சாகமடைந்த வேலுநாச்சியார் மற்றும் மருது சகோதரர்கள் சிவகங்கையை மீட்கும் போருக்கு தயாரானார்கள். திண்டுக்கல் கோட்டையில் புதிய பீரங்கிகள் வார்க்கப்பட்டன. ஹைதர் அலியின் 1000 படைவீரர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. அதே போல் சிவகங்கை சீமையின் மலைப்பகுதிகளில், மறைவிடமான ஊர்களில் படைவீரர்களுக்கு போர்பயிற்சி அளிக்கப்பட்டது.

1780ம் ஆண்டு ஐப்பசி மாதம் சிவகங்கையை மீட்க படையுடன் ராணி வேலுநாச்சியார் புறப்பட்டார். அந்த சமயத்தில் திப்புசுல்தான் ராஜே°வரி அம்மன் தங்கசிலையை தனது தந்தை ஹைதர்அலி சார்பில் வெற்றி வாழ்த்து கூறி வேலுநாச்சியாருக்கு வெகுமதியாக தந்தார்.12 பீரங்கி வண்டிகள் முன் செல்ல யானைப்படை, குதிரைப்படை,காலாட்படை ஆகிய போர்ப்படைகள் திண்டுக்கல் கோட்டையிலிருந்து புறப்பட்டன. திப்புசுல்தான் அப்போது வாழ்த்தி வழியனுப்பினார். நாச்சியார் படை மதுரை கோச்சடை கருப்பன் கோவில் திடலில் முகாமிட்டது.

ஆற்காடு நவாபு மதுரையிலிருந்து மல்லாரிராயன் படையை அனுப்பினான். மல்லாரி ராயன் வெள்ளைமருது வீசிய வளரி தாக்கி மாண்டு போனான். இதனையடுத்து திருப்புவனம் கோட்டைக்குச் சென்றது நாச்சியார் படை. சிலைமான் அருகே நவாபின் சார்பாக சென்ற ரங்கராயன் படையுடன் போர் நடந்தது. சின்னமருது வீசிய வளரியால் ரங்கராயன் மாண்டான். இந்த செய்தியறிந்த கும்பினிபடை கர்னல் பாஞ்சோர் மதுரையில் தங்கியிருந்த நவாப்பின் மகன் உமராதுல் உபராகானை வரவழைத்து பீரங்கிகளுடன் நாச்சியார் படையை தாக்க தயாரானான்.

வேலுநாச்சியார் தனது படையை சக்கரவியூக தாக்குதலுக்கு திட்டமிட்டார். திப்புசுல்தானின் 12 பீரங்கி, 500 துப்பாக்கிகளைக் கொண்டு கும்பினி படையின் 30 பீரங்கி,1000 துப்பாக்கி வீரர்கள் மோதினர். இரு தரப்பிலும் உயிர்ச்சேதம் ஏற்பட்டது. 2 கட்ட போர் முடிந்து 3வது கட்டப் போரின் போது அறுங்கோண தாக்குதல் நடத்த திட்டமிட்ட நாச்சியார் மற்றும் மருதுசகோதரர்கள் யானைப்படை கொண்டு தாக்குதலில் ஈடுபட்டனர். வெள்ளையர் மற்றும் ஆற்காடு நவாப்பின் கூட்டுப்படைகளை விரட்டி அடித்து மீண்டும் சிவகங்கையை மீட்டார் வேலுநாச்சியார்.

வீரமங்கை வேலுநாச்சியாருக்கு பட்டாபிசேகம் நடைபெற்றது. வெற்றிக்கு உதவிய திப்பு-ஹைதர் படையினருக்கு தக்க சன்மானம் வழங்கப்பட்டது. தனது நினைவாக திப்புசுல்தானுக்கு வேலுநாச்சியார் தங்கத்தினாலான புலிபொம்மையை வழங்கி நாச்சியார் நன்றி கூறினார். தொடர்ந்து ஆட்சி நடத்த தேவையான ஆலோசனை மற்றும் உதவிகளை திப்பு – ஹைதர்அலி ஆகியோருடன் தமது அமைச்சர் சின்னமருதுவை அனுப்பி பெற்று ஆட்சி நடத்தினார்.

இத்தகைய நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்த திப்புவை பற்றியும் ஹைதரை பற்றியும் இந்துத்துவா அமைப்புகள் தங்கள் சுயநலத்திற்காக. ஓட்டு வங்கியை பெருக்கிக் கொள்வதற்காக, இந்து- இ°லாம் மக்களிடையே மோதலை உருவாக்குவதற்காக தவறான பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விடுகிறார்கள். இதுபோன்ற உண்மை வரலாறுகளை அவர்களை நம்பிப் போகும் அப்பாவி இளைஞர்களுக்கு ஆச்சாரம் கெடாமல் கற்றுத்தர வேண்டியுள்ளது. மத நல்லிணக்கத்தை காக்க வேண்டியுள்ளது. அதற்காக நாமும் பல களம் காண வேண்டியுள்ளது.

தொகுப்பு : இலமு, திண்டுக்கல்.
(தகவல், நன்றி : 1990ல் மு.சேகர் எழுதிய `செம்மண்’ புத்தகம் மற்றும்
வலைத்தளத்தில் இருந்து பெறப்பட்ட விபரங்கள்)

Leave a Reply

You must be logged in to post a comment.