திருவனந்தபுரம், நவ. 19 –

கேரளத்தில் மொத்தமுள்ள 6 மாநகராட்சிகளில் 5 மேயர் பதவிகளை கைப்பற்றி இடதுஜனநாயக முன்னணி மாபெரும் வெற்றி வாகை சூடியது. உள்ளாட்சித் தேர்தலில் 4 மாநகராட்சிகளில் பெரும்பான்மை பலம் பெற்றிருந்த இடதுஜனநாயக முன்னணி, கண்ணூர் மாநகராட்சி மேயர் தேர்தலில் காங்கிரஸ் எதிர்ப்புக் கோஷ்டி உறுப்பினரின் நிபந்தனையற்ற ஆதரவால் அங்கும் மேயர் பதவியை கைப்பற்றியது.

left partiesகேரளத்தில் சமீபத்தில் நடை பெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுஜனநாயக முன்னணி மகத்தான வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 6 மாநகராட்சிகளில் திருவனந்தபுரம், கொல்லம், கோழிக்கோடு மற்றும் திருச்சூர் ஆகிய மாநகராட்சிகளில் பெரும் பான்மை பலம் பெற்றது. கண்ணூர் மாநகராட்சியில் இடது ஜனநாயக முன்னணி 27 இடங்கள், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 27 இடங்கள் என சரிசமமாக பெற்றிருந்தன. எனினும் இங்கு காங்கிரஸ் போட்டி வேட்பாளர் ஓரிடத்தில் வெற்றிபெற்றிருந்தார்.

இந்நிலையில், அனைத்து மாநகராட்சிகளிலும் நவம்பர்18 புதனன்று மேயர் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலின் போது கண்ணூர் மாநகராட்சியில் ஓரிடத்தில் வெற்றிபெற்றிருந்த காங்கிரஸ் போட்டி வேட்பாளர் பி.கே.ராகேஷ், இடதுஜனநாயக முன்னணியின் மேயர் வேட்பாளர் இ.பி.லதாவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக மாமன்றக் கூட்டத்தில் அறிவித்து வாக்களித்தார். இதையடுத்து இ.பி.லதா
மேயராக வெற்றி பெற்றார். முன்னதாக போட்டி வேட்பாளரான ராகேசின் ஆதரவை பெறுவதற்கு காங்கிரஸ் தலைமை கடுமையாக முயற்சி மேற்கொண் டது. அவருடன் பேரம் பேசியது. எனினும் அந்த பேரத்திற்கு அவர்பணியவில்லை. டாஸ் மூலம் துணை மேயர் பதவிக்கான வாய்ப்பு ஐக்கிய ஜனநாயக முன்னணி வேட்பாளருக்கு கிடைத்தது.

இதுதவிர திருவனந்தபுரம், கொல்லம், கோழிக்கோடு மற்றும் திருச்சூர்ஆகிய மாநகராட்சி மேயர் பதவிகளுக்கு இடதுஜனநாயக முன்னணியின் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். திருவனந்தபுரத்தில் இளம் வழக்கறிஞரும், இந்திய ஜனநாயக வாலிபர்சங்கத்தின் தலைவருமான வி.கே.பிரசாந்த் மேயராக தேர்வு செய்யப்பட்டார். இங்கு இவருக்கு 42 வாக்குகள் கிடைத்தன. இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் 34 வாக்கு பெற்றார். கொல்லம் மாநகராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக வி.ராஜேந்திர பாபு மேயராக தேர்வு செய்யப்பட்டார்.
திருச்சூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அஜிதா ஜெயராஜ் மேயராக தேர்வு செய்யப்பட்டார். கோழிக்கோடு மாநகராட்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான வி.கே.சி.மம்மத் கோயா மேயராக தேர்வு செய்யப்பட்டார். கொச்சி மாநகராட்சியில் மட்டும் காங்கிரஸ் வேட்பாளர் சௌமினி ஜெயின் 41 வாக்குகள் பெற்று மேயராக தேர்வு செய்யப்பட்டார். இங்கு இடதுஜனநாயக முன்னணி வேட்பாளருக்கு 30 வாக்குகள் கிடைத்தன.

நகர்மன்றங்கள் நகர்மன்றங்களைப் பொறுத்தவரை கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் மாவட்டங்களில் உள்ள அனைத்து நகராட்சிகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களே நகர்மன்றத் தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டனர். இரண்டு மாவட்டங்களிலும் தலா  4 மாநகராட்சிகள் உள்ளன. பத்தனம்திட்டா மாவட்டத்தில் இரண்டு நகராட்சிகளில் இடதுஜனநாயக முன்னணியும், இரண்டு நகராட்சிகளில் ஐக்கிய ஜனநாயக முன்னணியும் நகர்மன்றத் தலைவர் பதவிகளை கைப்பற்றினர். ஆலப்புழாவில் இடதுஜனநாயக முன்னணி இரண்டு நகர்மன்ற தலைவர் பதவிகளை பெற்றது.

கோட்டயம் மாவட்டத்தில் ஐக்கிய ஜனநாயக முன்னணி 4 நகர்மன்றத் தலைவர் பதவிகளைப் பெற்றது. இடுக்கி மாவட்டத்தில் இரண்டு அணிகளும் தலா இரண்டு நகர்மன்றங்களை கைப்பற்றியுள்ளன. எர்ணாகுளம் மாவட்டத்தில் இடதுஜனநாயக முன்னணி நான்கிலும், ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆறிலும் வெற்றி பெற்றன. திருச்சூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 8 நகராட்சிகளில் 7 தலைவர் பதவிகளை இடதுஜனநாயக முன்னணி கைப்பற்றியது. பாலக்காடு நகர்மன்ற தலைவர் பதவியை பாரதிய ஜனதா கட்சி பெற்றுள்ளது. இங்கு இரண்டு நகராட்சிகளில் இடது ஜனநாயக முன்னணியும் நான்கு நகராட்சிகளில் ஐக்கிய ஜனநாயக முன்னணியும் வென்றுள்ளன.

மலப்புரம் மாவட்டம் கொண்டட்டி நகராட்சியில் இடதுஜனநாயக முன்னணி தலைமையிலான விகாசா முன்னணி வெற்றி பெற்றது. இதர எட்டு
நகராட்சிகளை ஐக்கிய ஜனநாயக முன்னணி பெற்றது.கோழிக்கோடு மாவட்டத்தில் நான்குநகராட்சிகளில் இடதுஜனநாயக முன்னணி வென்றது. மூன்றில் ஐக்கிய ஜனநாயக முன்னணி வென்றது.வயநாடு மாவட்டத்தில் சுல்தான்பத்தேரி நகராட்சியில் கேரள காங்கிரஸ் உறுப்பினர் திடீரென ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு எதிராக நிலைபாடு மேற்கொண்டு இடதுசாரி வேட்பாளரை ஆதரித்தார்.

எனவே அங்கு இடதுஜனநாயக முன்னணி வெற்றி பெற்றது. வயநாடு மாவட்டத்தின் தலைநகரான கல்பேட்டா நகராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல், காங்கிரஸ் கோஷ்டி பூசல் காரணமாக ஒத்திவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கண்ணூர் மாவட்டத்தில் ஐந்து நகராட்சிகளை இடதுஜனநாயக முன்னணி கைப்பற்றியது. மூன்றில் ஐக்கிய ஜனநாயக முன்னணி வென்றது. காசர்கோடு மாவட்டத்தில் இடதுஜனநாயக முன்னணி இரண்டு இடங்களையும், ஐக்கிய ஜனநாயக முன்னணிஒரு இடத்தையும் பெற்றன.மொத்தமுள்ள 86 நகராட்சிகளில் இடது ஜனநாயக முன்னணி 43 நகராட்சிகளை பெற்றுள்ளது. ஐக்கியஜனநாயக முன்னணி 38 நகர்மன்றங்களைப் பெற்றுள்ளது. பாஜக- 1 மற்றும் வளர்ச்சி முன்னணி என்ற பெயரிலான அமைப்பு – 1 என இடங்களைப் பெற்றுள்ளன.(ஐ.என்.என்)

Leave A Reply

%d bloggers like this: