காணாமல் போன ஏரிகள்

திரைப்படம் ஒன்றில், நடிகர் வடிவேல், கிணறு ஒன்று காணாமல் போய்விட்டதாக காவல்துறையில் புகார் அளித்து, காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கிணறு எங்கேயிருந்தது என கேட்க, வடிவேல் இங்கேதான் இருந்தது என ஒருஇடத்தை காட்ட, காவலர்கள் விழிபிதுங்கி நிற்க, திரையரங்ல் அமர்ந்து மக்கள் இதை கண்டு, சிரித்து மகிழ்ந்தனர். இருந்த இடத்திலிருந்து கிணறு எப்படி மாயமாய் மறைந்து போகும் என்பது படம்
பார்த்தவர்களின் கணிப்பு. ஆனால், திரைஉலகில் மக்களை மகிழ்விக்க, சிரிப்பு பாத்திரத்தில் நடிப்பவர்கள், பல சமயங்களில் மக்களை சிந்திக்கவும் வைத்துள்ளனர்.

நடிகர் வடிவேல் சொல்லிய கிணறு காணாமல் போனது மட்டுமல்ல, தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகாலமாக பல்லாயிரக்கணக்கான ஏரிகள், குளங்கள், குட்டைகள் காணாமல் போய்விட்டன. அதன் விளைவே இன்று தமிழகம் மழை வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.மூன்று மாதத்தில் பொழிய வேண்டிய மழை ஒரு சில தினங்களில் கொட்டி தீர்த்துவிட்டது என்று முதல்வரும், வரலாறு காணாத மழை என்று அறியாத சிலரும் மழையின் தாக்கத்தை வர்ணித்து வருகின்றனர். இது உண்மையா என்றால் இல்லை. தமிழகத்தின் 13 கடலோர மாவட்டங்கள் உள்பட இத்தகைய மழை பொழிவை எதிர்பார்த்துதான், நமது முன்னோடிகள், அரசாட்சி முதல் மக்களாட்சி வரை (1967 வரை) 39,000-க்கு மேற்பட்ட ஏரிகள் குளங்களை அமைத்து வைத்திருந்தனர்.

சொல்லப்போனால், மழையின் தீவிரத்தை அவர்கள் நன்கு உணர்ந்திருந்த காரணத்தினாலேயே, சென்னையை சுற்றி, நூற்றுக்கணக்கான ஏரிகளை அமைத்திருந்தனர். செங்கல்பட்டு மாவட்டம் ஏரிகள் நிறைந்த மாவட்டமாக கருதப்பட்டது. குமரி மாவட்டத்தில் மட்டும் 2040 குளங்கள் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் இன்றும் உள்ளது. பராந்தக சோழன் ஆட்சிக்காலத்தில், தனது எதிரிகளை எதிர்நோக்குவதற்காக, தனது புதல்வன் இராஜதித்தனை, படை வீரர்களுடன் திருமுனைப்பாடி என்ற இடத்தில் ஆண்டுகள் பல தங்கியிருந்து முகாமிடச் செய்தான்.

ஆயிரக்கணக்கான வீரர்கள் எந்த வேலையும் செய்யாமல் இருப்பதை கண்ட இராஜதித்தன் தன் படைவீரர்களைக் கொண்டு காவிரி நீரை சேமிக்க அமைத்ததுதான் வீராணம் ஏரி. இந்த ஏரியின் நீளம் 18 கிலோ மீட்டர், அகலம் 4 கிலோ மீட்டர். 1011ம் ஆண்டு கட்ட துவங்கி 1037-ல் கட்டப்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றன. அரசர்கள் காலத்தில் கூட நீர்நிலைகளை மேம்படுத்தும் எண்ணம் அவர் களுக்கு இருந்து கொண்டே இருந்திருக்கிறது. ஆனால் இன்று நீர்நிலைகளை மேம்படுத்தா விட்டாலும் அழிக்காமல் இருந்தால் போதும் என்ற நிலை உருவாகி விட்டது.

இந்த ஏரியிலிருந்துதான் சென் னைக்கு நீர் கொண்டுவர திமுக ஆட்சியில் திட்டம் தீட்டப்பட்டு, குழாய்கள் வாங்க ஒப்பந்தம் செய்வதற்கு அதிகாரிகளின் மறுப்புரைகளையும் மீறி ( வீராணம் குழாய் ஊழல் ) ஆணைகள் வெளியிடப் பட்டதாகவும், பின்னர் இது குறித்து சர்க்கரியா கமிஷன் விசாரணையில் ஊழல்கள் வெளியாகின எனவும், பதிவுகள் கூறுகின்றன.தமிழகம் முழுவதும் உள்ள 39,000-க்கும் மேற்பட்ட, ஏரிகள், குளங்கள், குட்டைகளில் சரிபாதி இன்று ஆக்கிரமிப்பில் உள்ளன. நீர்நிலைகள் அழிக்கப்பட்டதாலேயே இன்றைய துயரத்திற்கு மூல காரணம். நீர்நிலைகள் இந்த 50 வருட காலங்களில், குறிப்பாக இரண்டு கழகங்களின் ஆட்சியில் ஆக்கிரமிப்பிற்கு உள் ளாகியுள்ளன என்றால் அது மிகையாகாது.

சென்னையில் ஓடுகின்ற இரண்டு ஆறுகள் இந்த கழகங்களின் ஆட்சியில் பட்டப்பாடு சொல்லிக்கொள்ள முடியாதது ஆகும். கூவம் நதியில் படகு விடுகிறேன் என்று திமுக ஆட்சியில் கோடிக்கணக்கான முதலீடு செய்யப்பட்டு அது ஆற்றில் கரைத்த பெருங்காயமாக மாறிவிட்டது. அடையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட தரைப்பாலங்கள் இன்றைய மழைவெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது. அடையாற்றின் கரைகளில் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் சாதாரண ஏழை, எளிய மக்கள் அல்ல. அள்ளிக்கொடுத்த வள்ளல்களும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர் என்பதே உண்மையாகும். இந்த இரண்டு ஆறுகளின் கரையிரண்டிலும் ஏழை,எளிய மக்கள் அமைத்துள்ள குடிசைகள் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. ஆனால் அங்கு பிரம்மாண்டாமாக அமைக்கப்பட்ட கட்டிடங்கள் ஆற்று வெள்ளத்தை நகருக்குள் திருப்பி விட்டுள்ளன என்பது கவனிக்கத்தக்கது.

செம்பாரப்பாக்கம் ஏரியின் உபரி நீர் இந்த ஆற்றின் வழியாகத்தான் சென்று வங்க கடலில் கலக்கிறது. இந்த ஆண்டு செம்பாரப்பாக்கம் ஏரியிலிருந்து வினாடிக்கு அதிகபட்சமாக 19,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.ஆக்கிரமிப்பிற்கு யார் காரணம்? மழை வெள்ளத்தால் ஏழை, எளிய மக்கள் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாகியுள்ள நிலையில், வாட்ஸ் அப்மூலம் ஒரு செய்தி திட்டமிட்டு பரப்பப்படுகிறது. ‘ஏரியில் வீடு கட்டினால் தண்ணீர் வராமல் தயிரா வரும்” என கவுண்டமணி கேட்பது போன்று பிரச்சாரம் செய்யப்படுகிறது.

ஏதோ ஏழை, எளிய மக்கள் நீர்நிலை அருகில் வீடுகள் கட்டியிருப்பதாலேயே இன்றைய வெள்ளப் பெருக்கிற்கு காரணம் என்று மக்கள் மத்தியில் எண்ணத்தை ஏற்படுத்த முயற்சி நடைபெறுகிறது. இது உண்மையா ? இல்லவே இல்லை. ஏழை, எளிய மக்கள் மட்டுமல்ல, நடுத்தர மக்கள், கொஞ்சம் வசதி படைத்தவர்கள் கூட ஏரி, குளம் , குட்டைகளில் வீடுகள் கட்டியுள்ளனர். ஆனால் தமிழக அரசின், பெருநகர வளர்ச்சி குழுமம் மற்றும் மாவட்டங்களில் உள்ள நகர்புற வளர்ச்சித்துறைகளின் மூலமாக, ஏரி, குளங்களில் சுயநல அரசியல் வாதிகளுக்கு வீட்டு மனைகள் அமைத்திட அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.

அரசியல் நிர்ப்பந்தங்களுக்காக, அதிகாரிகளால் அனுமதிகள் வழங்கப்பட்டா லும், நீர்நிலைகளில், மழைக்காலங்களில் மழை நீர் செல்ல உரிய வடிகால்களைக் கூட அமைத்திட வேண்டும் என்ற பொறுப்புணர்வு இவர்களுக்கு இல்லை. எல்லாவற்றிலும் காசு பார்க்கும் குணம் கொண்டவர்களின் அற்ப நடவடிக்கைகளால் இன்று தமிழகம் வெள்ளக்காடாக மாறிவிட்டது. இத்தகைய போக்கு கடந்த 20 ஆண்டுகாலமாக அதிகரித்து உள்ளன. இரண்டு கழகங்கள் ஆட்சிகளில் மணல் கொள்ளைக்கு அடுத்தப்படியாக செல்வம் கொழிக்கும் தொழிலாக “ரியல் எஸ்டேட்
தொழில்” இருந்து வருகிறது.

இத்தொழிலில்தான் வேறுவிதமாக கிடைக்கும் பணம் முதலீடு செய்யப்படுகிறது. வெள்ளைப்பணமாக மாற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வீட்டுமனைகள் அமைத்து கொள்ளை இலாபம் கண்ட சுயநல அரசியல்வாதிகள், தங்களின் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி நீர்நிலைகளை அழித்து புதிய நகரங்களை உருவாக்கிவிட்டனர். அத்தகைய நகரங்கள் தான் இன்று நீரில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன. பல ஆண்டுகள் பருவமழை பொய்த்துவிட்டதால் அதை சாக்காக வைத்துக்கொண்டு, அரசிடமிருந்து சிறப்பு அனுமதி பெற்று நீர்நிலைகள் மக்கள் குடியேறும் இடங்களாக மாற்றப்பட்டன.

இதன் உச்சக் கட்டமாக, அரசு பொறுப்பில் இருக்கும் அமைச்சர்கள் தங்கள் செல்வாக்கினை செலுத்தி, பல மாவட்டங்களில், ஏரி, குளம், குட்டைகளில் அரசு அலுவலகங்கள், பேரூந்து நிலையங்களையே அமைத்துவிட்டனர். அரசும் அதற்கு சிறப்பு அனுமதி அளித்திருக்கிறது. இது கூட பொதுநலம் என்ற அடிப்படையில் இல்லை. அரசு அலுவலகங்கள் கட்டினால் அருகிலுள்ள ரியல் எஸ்டேட் இடங்களுக்கு கிராக்கி கிடைக்கும் என்பதாலேயே அரசு கட்டிடங்களும் கட்டப்பட்டுள்ளன.

நடைமுறையில் உள்ள சட்டங்களைக்கொண்டே ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியும். அரசு நிலங்களில் உள்ள குளம், குட்டைகளின் ஆக்கிரமிப்பை அகற்ற முன் நோட்டிஸ் தரவேண்டிய அவசியமில்லை என்று சென்னை உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது. காமராஜர் ஆட்சிக்காலத்தில், கிருஷ்ணகிரி அணை, சாத்தனூர் அணை, அமராவதி அணை உள்ளிட்ட ஏழு அணைகள்கட்டப்பட்டன. அதன் பின் 50 ஆண்டுகளில் சொல்லிக்கொள்ளும் படியாக எந்த நீர்நிலைகளும் அமைக்கப்படவில்லை. பல அறிவிப்புகள் அறிவிப்புகளாகவே உள்ளன.

மலாக்கப் படவில்லை. மாறாக இருந்த நீர் நிலைகள் அழிக்கப்பட்டன என்பதே கசப்பான உண்மையாகும். மறைந்த, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் காலம் அவர்கள் தமிழகத்தின் நீர் நிலைகள் மேம்பாட்டிற்கு உரிய ஆலோசனைகளை, அவர் கழக ஆட்சிகாலங்களில், இரண்டு முதல்வர்களிடத்திலும் கொடுத்திருப்பதாக திருச்சி கல்லூரி ஒன்றில் நடைபெற்ற விழாவில் பேசுகையில் குறிப்பிட்டார். அவரது ஆலோசனையும் இதுநாள் வரை ஆட்சியாளர்களால் செவிமடுக்கப்படவில்லை. அவரது ஆலோசனைப்படி வேலைகள் நடைபெற்றிருந்தால், இன்று
தமிழகத்தில் கொட்டும் மழையை சேமித்து பல ஆண்டுகளுக்கு பயன்படுத்தியிருக்க முடியும்.
தமிழகத்தின் இன்றைய அவல நிலைமைக்கு கடந்த 50 ஆண்டுகாலமாக ஆட்சியிலிருந்த, இருக்கின்ற ஆட்சியாளர்களே தவிர கொட்டும் மழையல்ல. தண்ணீருக்காக அண்டை மாநிலங்களில் கையேந்தும் நாம் கொட்டும் மழையை கடிந்து கொள்வது சரியாக இருக்காது. விவேகமாகவும் இருக்காது.

                                                                                                                                                         க.ராஜ்குமார்

Leave A Reply

%d bloggers like this: