தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் தமிழ்நாடு அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் அமைக்கப்பட்ட ஒரு அரசு நிறுவனமாகும். 1947ம் ஆண்டில் சென்னை நகரில் வீடுகளின் தேவைக்காக “நகர் மேம்பாட்டு அறக்கட்டளை” (சிஐடி) எனும் பெயரில் தொடங்கப்பட்ட அமைப்பு, பின்னர் `தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்’ என்று மாற்றப்பட்டது. இந்த நிறுவனத்தின் மூலம் தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் வீட்டு மனைகள், வீடுகள் அமைக்கப்பட்டு சந்தைவிiயை விட சற்றுகுறைவான விலையில் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வீட்டு மனைகள், அடுக்குமாடி குடியிருப்புகள் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினர், குறைந்த வருவாய்ப் பிரிவினர், நடுத்தர வருவாய்ப் பிரிவினர், உயர் வருவாய்ப் பிரிவினர் என நான்கு பிரிவுகளின் கீழ் ஒதுக்கப்படுகின்றன.

ஏரிகளை வீட்டுமனைகளாக மாற்றியதால் குடியிருப்புகளை சூழ்ந்தது வெள்ளம்

தமிழ்நாட்டில் மொத்தம் 39,202 ஏரிகள் உள்ளன. இவற்றுள் 13,710 ஏரிகள் நீர்வள ஆதாரத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. முன்பெல்லாம் ஒரு ஏரி நிறைந்தால் அந்த ஏரியில் இருந்து அருகில் உள்ள குளம், ஏரி அல்லது அடுத்த ஊரில் உள்ள குளம், ஏரிகளுக்கு வாய்க்கால் மூலம் தண்ணீர் போய் சேரும். அந்த ஏரி நிரம்பியவுடன் அடுத்த ஊரில் உள்ள ஏரிக்கு செல்லும். இப்படி அனைத்து ஏரிகளும் நிரம்பிய பின்னரே மீதமுள்ள நீர் கடலுக்கு செல்லும். அப்படி ஒரு ஏற்பாட்டை நம் முன்னோர்கள் செய்து வைத்திருந்தனர். அதனால் தண்ணீர் பஞ்சம் ஏற்படாமல் இருந்தது.

இந்நிலையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் தமிழகத்தில் உள்ள பல ஏரிகளை வீட்டுமனைகளாக மாற்றியது. குறிப்பாக சென்னைக்கு அருகில் அம்பத்தூர், ஆவடி பகுதியில் ஒரு காலத்தில் ஏரியிருந்த இடத்தில் தான் இன்று வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் உள்ளன. இதனால் ஏரிகளின் கொள்ளவு குறைந்ததுடன், ஏரிகளுக்கு வரும் நீர்வரத்தும் தடுக்கப்பட்டது. பல இடங்களில் மழைநீர் வடிகால்வாய்கள் சமூக விரோதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
இதனால் தற்போது மழைநீர் வெளியேற முடியாமல் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் அமைக்கப்பட்ட குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது.

இதனால் அங்கு குடியிருப்போர் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவிக்கின்றனர். மேலும் முறையான மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கப்படாததும், கழிவு நீரை முறையாக சுத்திகரிப்பு நிலையம் மூலம் சுத்தப்படுத்தி நீரை முறையாக குழாய் மூலமோ, கால்வாய் மூலமோ வெளியேற்றவும் வசதிகள் இல்லாத காரணத்தால் சாக்கடையும் மழைநீரும் சேர்ந்து சுகாதாரத்திற்கு சவால் விடுகிறது.

எனவே அரசு உடனடியாக குளங்கள், ஏரிகள், ஆறுகள் உள்ளிட்ட நீர் நிலைகளை பாதுகாக்கவேண்டும். குடியிருப்புகளாக மாற்றப்பட்ட இடங்களில் மழைநீர் எளிதாகவெளியேற உரிய வடிகால்வாய் வசதிகளை ஏற்படுத்தவேண்டும். மேலும் இனி வரும் காலங்களில் பயன்படுத்தமுடியாத நீர்நிலைகளில் எந்தவித வீட்டு மனைகளையும் அமைப்பதில்லை என்ற கொள்கை ரீதியாக முடிவெடுக்க வேண்டும்.
                                                                                                                                         அம்பத்தூர் ராமு

Leave A Reply

%d bloggers like this: