பிரதமர் மோடி பிரிட்டன் புறப்படுவதற்கு முன்பாக 15 துறைகளில் நேரடி அந்நிய மூதலீடுகளை அரசின் ஒப்புதல் பெறாமலே அதிகரித்துக் கொள்ள அனுமதிப்பது என்று வேகமாக முடிவு செய்யப்பட்டது. அதே வேகத்துடன் இப்போது, வெளிநாட்டிலிருந்து பிரதமர் திரும்பி வந்த கையோடு, அவரது தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு புதனன்று (நவ.18) கூடி, நாட்டின் மிகப்பெரும் பொதுத்துறை கட்டமைப்புகளில் ஒன்றான
இந்திய நிலக்கரி நிறுவனத்தின் (சிஐஎல்) பங்குகளில் 10 சதவீதத்தைக் கைகழுவ ஒப்புதலளித்துள்ளது.

இயற்கை வள கொள்ளைக்கு இது ஒரு முதல் வாசல்

இது உண்மையில் இயற்கை வளத்தைத் தனியார் கொள்ளையடிப் பதற்கான சட்டப்பூர்வ முன்னேற் பாடேயாகும். முன்பு, வாஜ்பாய் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சியின் போது, பொதுத்துறை நிறுவனங்களை விற்பதற்கென்றே தனி அமைச்சகம் ஏற்படுத்தப்பட்டது. பின்னர் வந்த மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சியிலும் கூச்சமே இல்லாமல் இந்தக் கொள்கை தொடர்ந்தது. முன்பாவது, விலக்கிக் கொள்ளப்படும் அரசுப் பங்குகள் வேறு பொதுத்துறை நிறுவனங்களுக்குத் தான் விற்கப்படும் என்று ஒப்புக்காகவாவது சொல்லிக்கொண்டார்கள்.

இப்போது நேரடியாகவே தனியாருக்கு விற்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டிருப்பதுதான் வேறுபாடு.ஒரு அத்தியாவசியமான இயற்கை வளமாகிய நிலக்கரித் துறையில் தனியார் வேட்டைக்கு நல்வரவு சொல்லப்படுகிறது. சிஐஎல் நிறுவனத்தின் 10 சதவீதப் பங்குகளை மட்டுமே விற்க முடிவு செய்திருப்பதாகக் கூறிக்கொண்டாலும், அது முதல்கட்டம் தான் என்பதையும், படிப்படியாகப் பெரும்பான்மைப் பங்குகள் தனியார் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலை ஏற்படுத்தப்படும் என்பதையும் நாடு விரைவில் புரிந்து கொள்ளும்.

அரசுப் பங்குகள் விலக்கத் துறை ஏற்கெனவே ரூ.69,500 கோடி இலக்கு நிர்ணயித்திருந்தது. இவையெல்லாம் அரசாங்கத்தால் மட்டுமே நடத்தப்படுகிற மிகப்பெரும் தொழில்கள் என்பதாலும், ஏற்கனவே பொருளாதார மந்த நிலை கடுமையாக ஒட்டுமொத்த முதலாளித்துவத்தையும் அச்சுறுத்திக் கொண்டிருப்பதன் பின்னணியிலும், அரசு நிர்ணயித்த அளவு பங்குகள் விற்பனை ஆகவில்லை. ரூ.12,600 கோடிதான் வந்தது. இப்போது அந்த இலக்கை ரூ.30,000 கோடியாகக் குறைத்து நிர்ணயிக்க அரசுக்கு இந்தத் துறை பரிந்துரை செய்திருக்கிறதாம்.

சிஐஎல் பங்கு விற்பனை மூலம் சுமார் ரூ.21,100 கோடி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறதாம். இப்படியாக, இந்தத் தொகையையும் ஏற்கெனவே வந்துள்ள தொகையையும் சேர்த்து, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விடவும் கூடுதலாக எட்டிவிட முயற்சிக்கிறது அரசு.எப்படியாவது தனியார்மயம் என்பதுதான் அரசின் நோக்கம். இந்த மோசடிகளை புரிந்துகொண்டுதான் அனைத்துத் தொழிற்சங்கங்களும் எதிர்ப்புத்தெரிவித்துள்ளன. சிஐஎல் நிறுவனத்தைத் தாரைவார்க்கும் சூழ்ச்சியை முந்தையஆட்சியின் போது முறியடித்தது தொழிற்சங்கங்களின் ஒன்றுபட்ட இயக்கம்.

கடந்த ஜனவரியிலும், நிலக்கரித் துறையைத் தனியார் மயமாக்குவதற்கான அவசரச் சட்டத்தை எதிர்த்து ஐந்து நாள் வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியது. மின்சார உற்பத்தி பெரிதும் பாதிக்கப்படலாம் என்ற நிலையில் போராட்டத்தை தொழிற்சங்கங்கள் இரண்டாம் நாளே விலக்கிக்கொண்டன. அந்த நல்லெண்ணத்தையோ, நாட்டு நலனையோ சிறிதும் மதிக்காமல் தற்போது எடுக்கப்பட்டுள்ள முடிவு முறியடிக் கப்பட்டாக வேண்டும்.

Leave a Reply

You must be logged in to post a comment.