மத்திய குழுவை அனுப்புக! ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல்

சென்னை,நவ.18-

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தால் 150க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடர் என்ற அடிப்படையில் மத்திய அரசு வேடிக்கை பார்க்காமல் ஆய்வு குழுவை அனுப்பி பாதிப்புகளை ஆய்வு செய்ய வேண்டும். மாநிலத்திற்கு தேவையான உரிய நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.

தமிழகத்தில் கடுமையான வெள்ளச் சேதம்சென்னையில் புதனன்று (நவ.18) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், செய்தியாளர்கள் எழுப்பிய வினாக்களுக்கு ஜி.ராமகிருஷ்ணன் அளித்த பதில்கள் வருமாறு:
மழைவெள்ளத்தால், கடலூர்மாவட்டம் பெரியகாட்டுப்பாளையம் கிராமத்தில் 10 பேர் இறந்துள்ளனர். இவர்களில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 6 பேர் இறந்துள்ளனர். விசூர் கிராமத்தில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 4 பேர் இறந்துள்ளனர். அரசு நிர்வாகம் கடலூர் மாவட்டத்தில் அனைத்து கிராமத்திற்கும் சென்று ஆய்வு செய்து சரியாக மதிப்பீடு செய்து, மக்கள் அதிருப்தி அடையாத வகையில் நிவாரணம் வழங்க வேண்டும்.

இயற்கை இடர்பாடுகள் ஏற்படுகிற போது அதனை தடுக்க 2008ம் ஆண்டு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் ( தி ஸ்டேட்  டிஸ்சாஸ்டர் மேனேஜ்மென்ட் அத்தாரிட்டி) உருவாக்கப்பட்டது. 2012ல் மாவட்ட அளவில் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் உருவாக்கப்பட்டது. இவற்றில் பெரும்பகுதி செயலற்று உள்ளது.
தற்போது நிகழ்ந்துள்ள இயற்கை பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் பெருமளவிலான பாதிப்பை குறைத்திருக்க முடியும். ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு இயற்கையை மட்டும் குறை கூற கூடாது. அரசுக்கும் பொறுப்பு உள்ளது.

சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ளம் காரணமாக குடியிருப்புகளில் இருந்து மக்கள் வெளியேறி பல்வேறு இடங்களில் தங்கி உள்ளனர். அவர்கள் மீண்டும் தங்கள் குடியிருப்புக்கு வர சில நாட்களாகும். அதுவரை அவர்களுக்கு தங்கும் இடம், உணவு போன்றவற்றை அரசு வழங்க வேண்டும். இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தனி நபர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆற்றிய பணிகளும், மின்சாரம் துண்டிக்கப்பட்ட இடங்களில் மின்வாரிய ஊழியர்கள் இரவு பகல் பாராமல் பணியாற்றியதும் பாராட்டுக்குரியது. கடலூரில் நவ.17 அன்றுஅமைச்சர்கள் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், பத்திரிகை செய்தி கொடுத்தார்கள். அதில் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தார்கள் என்று குறிப்பிடவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால், என்னென்ன பாதிப்புகள் வரும் என்பதை யூகித்து நடவடிக்கைகளை எடுத்திருக்க முடியும்.

ஒரு அரசியல் கட்சி என்றஅடிப்படையில் ஆளும் கட்சி 2016 மே மாதம் நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்தயாரிப்பு பணிகளை தொடங்கிவிட்டது. புயல், வெள்ளம் வரும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்த போதும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் தான் பாதிப்பு அதிகமாக நிகழ்ந்துள்ளது. அரசியல்
ஆதாயத்திற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை, நிவாரணப்பணிகள் சரியில்லை என்று குறை கூறவில்லை. கள ஆய்வு செய்து அதனடிப்படையில் கூறுகிறோம்.

நிவாரணப் பணிகளில் ஈடுபடுகிற அதிகாரிகள், ஊழியர்கள், ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள், தேர்தலை முன்வைத்து செயல்படுவது சரியல்ல. மாநில அரசு, மத்திய அரசிடம் தேவையான நிவாரணத்தை கேட்டு பெற வேண்டும்.வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உள்ள விவசாய தொழிலாளர்களுக்கு அடுத்த சில மாதங்களுக்கு வேலை கிடைக்காது. ஆகவே, அத்தகைய மாவட்டங்களில் நூறுநாள் வேலை திட்டத்தை நீட்டித்து, விவசாய தொழிலாளர்களுக்கு வருமானத்தை ஏற்படுத்தி தர வேண்டும். மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரிசி, உணவு, போர்வைகள், பாத்திரங்கள் போன்றவற்றை வழங்கி வருகிறோம்.
இவ்வாறு ராமகிருஷ்ணன் கூறினார். இச்சந்திப்பின் போது மத்தியக்குழு உறுப்பினர்கள் கே.வரதராசன், உ.வாசுகி ஆகியோர் உடனிருந்தனர்.

Leave A Reply

%d bloggers like this: