“குறிப்பிட்ட சூழலில், நிலவுகிற நிலைமைகள் அனைத்தையும் உள்வாங்கிட வேண்டும்’. (“ஊடிnஉசநவந ளுவரனல டிக ஊடிnஉசநவந ஊடினேவைiடிளே” ) என்பது கம்யூனிசப் புரட்சியாளர்களுக்கு மாமேதை லெனின் வழங்கிய அறிவுரை. சர்வதேச பாட்டாளிவர்க்க இயக்கத்தின் வெற்றிகர அனுபவமான நவம்பர் புரட்சியைக் கற்பதன் மூலம், மேற்சொன்ன நடைமுறையினைப் பின்பற்றும் கள அனுபவக் கல்வி கிடைக்கிறது. இந்திய முதலாளித்துவத்தை வீழ்த்தி சோசலிசத்தை நோக்கி பயணிக்க வேண்டிய கடமையை ஏற்றுக் கொண்டிருக்கும் மார்க்சிஸ்டுகளுக்கு இந்தக் கல்வி மிக அவசியமானதாகும். நவம்பர் புரட்சியின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்த முக்கிய அம்சங்களை பின்வருமாறு வரிசைப்படுத்தலாம்:-

புரட்சியைக் கற்போம்

1) ரஷ்ய நிலைமைகளை மார்க்சிய அடிப்படையில் புரிந்துகொண்டது,

2) தொழிலாளர்கள், விவசாயிகள் மத்தியில் அதிகரித்த வர்க்க உணர்வு,

3) அதன் வெளிப்பாடாக எழுந்த இயக்கமும், அதற்கு தலைமையேற்ற கம்யூனிஸ்டுகளின் உழைப்பும்

4) படைப்பாக்கத்துடன் புதிய உத்திகளையும், சர்வதேசப் போக்குகளையும் ஆய்வு செய்து வழிகாட்டிய லெனினின் தலைமை.

1905 இல் ஒரு முன்னுரை

1898 ஆம் ஆண்டிலிருந்து ரஷ்யாவை ஆண்ட ஜார் மன்னன் இரண்டாம் நிக்கோலஸ் ஆட்சியில் ஊழல் மலிந்திருந்தது. பொருளாதாரம் தேங்கியது. இந்த நிலைக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் அதிகரித்தன. ஆண்டுக்கு 176 என்ற அளவில் வேலை நிறுத்தங்கள் அதிகரித்திருந்தன. 1905 ஆம் ஆண்டில் ரயில்வே தொழிலாளர்கள் வேலை நிறுத்தம், கடற்படையினர் போராட்டம், விவசாயிகள் போராட்டம் எனப் பெரும் எழுச்சியை ரஷ்யா சந்தித்தது. இந்தப் போராட்டங்களை ஜார் அரசாங்கம் கடுமையாக ஒடுக்கியது. இதன் பலனாக ரஷ்ய முதலாளித்துவம் பலமடைந்தது. அரசு பிற்போக்காக மாறியதுடன், நடுத்தர வர்க்க முதலாளித்துவம் மிகவும் பலவீனப்பட்டது. அறிவுஜீவிப் பிரிவினர் முதலாளித்துவத்துடன் நெருக்கமாக இருந்தனர்.அதே சமயம், அரசு ‘டூமா’ என்ற நாடாளுமன்ற அமைப்பை உருவாக்குகிற அவசியமும் நேர்ந்தது. இக்காலகட்டத்தில்தான் உள்ளூர் மட்ட உழைக்கும் மக்களின் சங்கமாக “சோவியத்துக்கள்” என்ற கிராம சபை போன்ற அமைப்புகள் உருவாகின. இவற்றில் தொழிலாளர்களும், ஓரளவு விவசாயிகளும், இராணுவ வீரர்களும் அங்கம் வகித்தனர். ரஷ்ய மக்கள் தங்களுக்காக தேர்ந்தெடுத்து வளர்த்த ஜனநாயகக் கட்டமைப்பாக அது அமைந்தது.

விவசாயச் சிக்கல்கள்

மன்னர் குடும்ப நிலம்,கிருத்துவ தேவாலய நிலங்கள் மற்றும் 30,000 நிலப்பிரபுக்கள் கைப்பிடியில் இருந்த நிலங்கள் என விவசாயத்தில் நிலப்பிரபுத்துவத் தனியுடைமை ஆதிக்கம் இருந்தது. இது விவசாயப் பிரச்சனையின் அடிப்படைக் காரணமாக இருந்தது.புரட்சிக்கு ஆதரவாக விவசாயிகள் திரள்வதற்கான சூழலும் அன்றைய ரஷ்யாவில் நிலவியது. ’சமூகப் புரட்சியாளர்கள்’ என்ற கட்சியும் ‘காடட்டுகள்’ என்ற கட்சியும் விவசாயிகள் மத்தியில் ஆதரவுத் தளங்களை வைத்திருந்தனர்.1908-ஆம் ஆண்டுகளில் விவசாய இயக்கமும் தொழிலாளர் இயக்கம் போன்றே வலுப்பெற்று வந்தது.ஆங்கங்கே விவசாயிகள் நிலப்பிரபுக்களுக்கு எதிராக தீவிரமான போராட்டங்களில் ஈடுபட்டனர்.பல இடங்களில் நிலப்பிரபுக்களின் நிலங்களையும் கைப்பற்றினர். ஆயுதம் ஏந்திய தாக்குதல்களும் நிகழ்ந்தன.

கம்யூனிஸ்டுகளின் செயல்பாடு

மேற்சொன்ன நெருக்கடியான சமூகச் சூழலில்தான் கம்யூனிஸ்டுகள், பாட்டாளிவர்க்கத்தின் மீது நம்பிக்கையோடு செயல்பட்டனர். அனுபவங்களை கிரகித்து, செயல் திட்டங்களை வகுத்தனர். புரட்சிகரக் கட்சியினை கீழ்மட்ட அளவில் அரசியல் உயிரோட்டத்துடன் கட்டுதல், அரசியல் நடைமுறைக் கொள்கை, வர்க்கத்திரட்டல் என கடும் போராட்டத்தின் மூலம், ரஷ்ய நிலைமைகளில் தாக்கத்தை ஏற்படுத்தினர். லெனின் தலைமையில் நடந்த இந்த “தொழிலாளி-விவசாயி வர்க்கக் கூட்டணி” எனும் கருத்தாக்கம் அவ்வாறுதான் உருவெடுத்தது. பாரிஸ் கம்யூன் தோல்வியிலிருந்து வரலாற்றுப் படிப்பினையைப் பெற்றுக் கொண்ட போல்ஷ்விக்குகள் இந்த சரியான முடிவை எட்டினார்கள். புரட்சி இயக்கத்தின் தொடக்க காலங்களில் நரோத்னியம் எனும் சிந்தனைப்போக்கு கொண்டவர்கள் விவசாயிகளின் எழுச்சி மூலமாகவே சோசலிசம் கொண்டு வரலாம் என்ற கருத்தைக் கொண்டிருந்தனர். அதற்குப் பிறகுடிராட்ஸ்கியின் “நிரந்தரப் புரட்சி” எனும் தத்துவம் தோன்றியது. இது புரட்சியில் விவசாயிகள் ஆற்ற வேண்டிய பங்கினை குறைத்து மதிப்பிடும் தவறினை செய்தது. இந்த இரண்டுக்கும் எதிராக ரஷ்யக் கம்யூனிஸ்ட் இயக்கம் போராடி வந்துள்ளது.ரஷ்ய புரட்சியின் வரலாறு என்ற நூலில் டிராட்ஸ்கி  “உலக வரலாற்றில் முதல்முறையாக விவசாயி தனக்கு ஒரு தலைவரைத் தேர்ந்தெடுக்கும் சூழல் உருவானது, தொழிலாளிதான் அந்தத் தலைவர் என்பதை விவசாயிகள் அடையாளப்படுத்திக் கொள்ளும் நிலை ஏற்பட்டது. ஒரு அடிப்படைக் கருத்தாக்கம் எதிரொலித்தது. இதில்தான் இதற்கு முன்னர் நடந்த புரட்சிகளுக்கும், ரஷ்யப் புரட்சிக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு அமைந்தது.” என்கிறார்.

பாட்டாளிகளின் பங்கேற்பு

புரட்சிக்கான களப் பணிகளில் பாட்டாளிகள் முழுமையாகப் பங்கெடுத்தனர். மாற்றத்திற்கான ஆயுதமாக அவர்கள் வேலை நிறுத்தங்களை முன்னெடுத்தனர். அரசின் அடக்குமுறைகளையும், துப்பாக்கிச் சூடுகளையும் தாண்டி எதிர்கொண்டு இந்தப் போராட்டங்களை நடத்தினர். வாய்மொழியாகவும், துண்டுப் பிரசுரங்கள் மூலமாகவும் போராட்டச் செய்திகளை பரப்புவதுடன், விஷமத்தோடு பரப்பப்படும் வதந்திகளை அம்பலப்படுத்துவதென செயல்பட்டார்கள். ஒரு அற்புதமான வர்க்க ஒற்றுமையின் அடித்தளத்தில் அமைந்த இந்தப் போராட்டம் வரலாற்றாய்வாளர்களின் கண்களுக்கு படுவதில்லை. களத்தில் போராடும் தொழிலாளர்கள், போராட்டக் களத்திலிருந்து வீடு திரும்பிய பின்னர் தங்கள் குடும்பத்தோடும், சக மக்களோடும் கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபட்டனர். இவ்வகையில் தங்கள் அரசியல் கூர்மையை செழுமைப்படுத்திக் கொண்டனர். பிளக்கனோவ், லெனின், மார்க்சின் மூலதனம் போன்ற புத்தகங்களை வாசிப்பது, அடுத்த நாள் போராட்ட அனுபவத்தோடு இணைத்து விவாதிப்பது என்பதாக தொழிலாளர்கள் செயல்பட்டனர்.

சோவியத்துகள்

சோவியத்துகள் என்ற உள்ளூர் அமைப்புகளில் கம்யூனிஸ்டுகள் செயல்பட்டனர். தொழிற்சாலைகளிலும், சோவியத்துகளிலும் ஏராளமான கட்சிக் குழுக்களை உருவாக்கினர். இவ்வாறு சோவியத்துகள் போராட்டங்களின் அரசியல் தளத்தை உயர்த்தி மாற்றத்தை நோக்கிக் கொண்டுசெல்லும் பணியைச்செய்தன. வேலை நிறுத்தங்களுக்கும் உதவின, ஆட்சி மாற்றத்திற்கும் உதவின. தொடக்கத்தில் சோவியத்துகளில் கம்யூனிஸ்டுகள் குறைவாக இருந்தனர். எனினும் தொழிலாளர்களும், போர்வீரர்களும் உள்ளிட்ட உழைக்கும் மக்கள் கொண்ட இந்த அமைப்பு அவர்களோடு நடைபோட்டது.

உலகப்போரின் தாக்கம்

ரஷ்ய முதலாளித்துவத்தின் மூலதன நலன்களுக்காக முதல் உலகப்போரில் ரஷ்யாவை ஜார் மன்னர் ஈடுபடுத்தினார். இது உள்நாட்டுப் பொருளாதாரத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியதுடன். 25 இலட்சம் போர்வீரர்கள் கொல்லப்பட்டனர். விவசாயிகளை உள்ளடக்கிய தரைப்படைதான் அதிக இழப்பைச் சந்தித்தது.போரில் ஈடுபட்டிருந்த வீரர்களின் மன நிலையை பிரேயகா என்ற வீரர் “சண்டையிட்டு அவர்கள் மிகவும் வெறுத்துப் போனதால் எந்த விலை கொடுத்தாவது சமாதானம் வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள்.” என எழுதினார்.வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு தண்டனையாக போர்முனைக்கு அனுப்பட்ட பல தொழிலாளர்கள் ராணுவத்திற்குள்ளே புரட்சிகரக் கனலை எரியச் செய்தனர். “தாய் நாட்டிற்காகப் போர்” என்ற போலியான தேச பக்த உணர்வை முதலாளித்துவம் இராணுவத்தினரிடம் ஏற்படுத்தியிருந்தது. அந்த உணர்வு மெல்ல மெல்ல ஆட்டம்கண்டது.

கருத்து மோதல்கள்

1917-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நிகழ்ந்த முதலாளித்துவப் புரட்சிக்குப் பின் முதலாளித்துவம், அதிகாரத்திற்கு வந்த பிறகு ரஷ்யக் கம்யூனிஸ்ட்கள் சோசலிசப் புரட்சி வர நீண்ட காலம் பிடிக்கும் என நம்பினர். ஆனால், உழைக்கும் வர்க்கத்தின் புரட்சி ஆற்றலை உணர்ந்த லெனின், ஏப்ரல் கருத்தாய்வுகள் என்ற பிரசித்திபெற்ற, புரட்சிக்கான வேலைத் திட்டத்தை உருவாக்கி,அடுத்த கட்டத்திற்கு புரட்சியை வழிநடத்தினார்;அதில் , “புரட்சியின் முதல் கட்டத்தில் முதலாளிகள் கையில் அதிகாரம் சென்றடைந்துள்ளது, இதற்குக் காரணம்,ரஷ்யப் பாட்டாளி வர்க்கத்தின் வர்க்க உணர்வு குறைவாக இருந்ததுதான். அத்துடன், அமைப்புரீதியாகத் திரள்வதில் பாட்டாளி வர்க்கத்திற்கு இருந்த பலகீனமும் அந்த நிலைமை ஏற்பட்டதற்குக் காரணம்…  புரட்சி இரண்டாவது கட்டத்திற்கு முன்னேறிட வேண்டும்… பாட்டாளி வர்க்கத்திடமும், விவசாயிகளில் மிகுந்த வறிய நிலையில் உள்ள ஏழை விவசாயிகளிடமும் அதிகாரம் சென்றடைய வேண்டும்“ என்றார் லெனின்.

வழிகாட்டும் லெனினியம்

சோசலிசம் உறுதியாக வந்தே தீரும் என்ற கருத்து வரலாற்று நோக்கில் சரியானது.ஆனால்,நடைமுறைக் கருத்தாக இதனை உச்சரிப்பது வெறும் வேத மந்திரமாகப் போய் முடியும். சோசலிசம் உறுதியாக வந்தே தீரும் என்று அமைதி காக்க லெனினியம் அனுமதிப்பதில்லை. புரட்சிக் கடலில் இடையறாமல் வியூகங்கள் அமைத்து நீந்திக் கொண்டே இருக்க அது தூண்டுகிறது. தோல்விகள் வரும்போது, அடுத்த தாக்குதலை முதலாளித்துவத்தின் மீது அசுரத்தனமாக தொடுத்திட லெனினியம் நம்மைப் பணிக்கிறது. உழைக்கும் வர்க்கத்தின் ஆற்றலை வெறும் பொருளாதார கோரிக்கைகளுக்கும், இதர சாதாரண நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தினால், உள்ளுறைந்துள்ள புரட்சி ஆற்றல் வெளிவராமல் முனை மழுங்கிபோகும். இது முதலாளித்துவத்தின் இருப்பை நீடிக்கச் செய்திடும். எனவே புரட்சி உணர்வை பிரகாசிக்கச் செய்வதும், குறிப்பிட்ட நிலைமைகளில் புரட்சி வேலைத்திட்டத்தையும், நடைமுறை அரசியல் உத்திகளையும் உருவாக்கிட வேண்டும். இதற்கு, ஒருவர் மார்க்சிஸ்டாகவும், லெனினிஸ்டாகவும் இருக்க வேண்டும். இதுவே “நவம்பர் புரட்சி” உணர்த்து முக்கிய பாடம்.

Leave A Reply

%d bloggers like this: