புதுதில்லி:-

மக்களை `மயக்க’ முயற்சி தங்கத் திட்டங்களை அறிமுகம் செய்த மோடி

பிரதமர் நரேந்திர மோடி வியாழனன்று 3 தங்கத் திட்டங்களை அறிமுகம் செய்தார். மக்களிடையே முடங்கிக் கிடக்கும் 20,000 டன் தங்கத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த இந்த 3 தங்கத் திட்டங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார். தேசியச் சின்னமான அசோகச் சக்கரம் மற்றும் மகாத்மா காந்தியின் உருவம் பொறிக்கப்பட்டுள்ள தங்க நாணயம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தங்க நகைகள் மற்றும் பிற தங்கம் தொடர்பான சொத்துக்களை வட்டிவருவாய் பெற்றுத் தரும் வைப்புகளாக மாற்றும் திட்டம் மற்றும் தங்கப்பத்திர திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

வட்டி விகிதங்கள்

தங்கத்தை பணமாக்கும் திட்டத்துக்கு 2.5சதவீத வட்டி அளிக்கப்படும். தங்கப் பத்திரத்திட்டத்தில் முதலீட்டாளர்கள் 2.75 சதவீத வட்டி வருவாய் ஈட்டுவர். தங்க நாணயங்கள் தொடக்கமாக 5 மற்றும் 10 கிராம்களில் கிடைக்கும். 20 கிராம் தங்க நாணயங்கள் 125 எம்.எம்.டி.சி நிறுவன விற்பனை நிலையங்களில் கிடைக்கும்.உலக தங்க கவுன்சிலின் உத்தேச மதிப்புகளின்படி, இந்தியாவில் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் 22,000 – 23,000 டன்கள் தங்கம் `பயனற்று’ முடங்கிக் கிடக்கின்றன. இந்த நிலையை மாற்றி, தங்கம் வாங்குபவர்கள், முதலீட்டாளர்கள், அரசு என முத்தரப்பினரும் பயன்பெறும் விதத்தில், இந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் இரண்டுபுதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்தப்பின்னணியில் பிரதமர் 3 தங்க திட்டத்தை அறிமுகம் செய்தார். (பிடிஐ)

Leave A Reply

%d bloggers like this: