புதுதில்லி, நவ.5-

பொதுவாழ்வுப் பொன்விழா யெச்சூரிக்கு வைகோ நேரில் அழைப்பு
பொதுவாழ்வில் 50 ஆண்டுகளை எட்டியுள்ள, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அக்கட்சியின் சார்பில் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை காமராசர் அரங்கத்தில், 2016-ஆம் ஆண்டு பிப்ரவரி 9-ஆம் தேதி “வைகோ பொதுவாழ்வுப் பொன்விழா” என்ற தலைப்பில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதில் பங்கேற்க, அகில இந்திய அளவில் பல்வேறு கட்சித் தலைவர்களுக்கு வைகோ அழைப்பு விடுத்து வருகிறார்.சில நாட்களுக்கு முன்பு, பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை வைகோ நேரில் சந்தித்து அழைப்புவிடுத்தார். இந்நிலையில், வியாழனன்று பகல் 12 மணியளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு அலுவலகமான ஏ.கே.ஜி.பவனுக்கு வந்த வைகோ, கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரியைச் சந்தித்து, பொதுவாழ்வு பொன்விழாவுக்கு அழைப்பு விடுத்தார். அப்போது வைகோவை பூங்கொத்து கொடுத்துவரவேற்ற யெச்சூரி, நவம்பர் 25-ஆம் தேதி கோவையில் நடைபெறும் மக்கள் நலக் கூட்டணியின் பொதுக்கூட்டத்திலும், 2016 பிப்ரவரி 9-ல் சென்னையில் நடைபெறும் ‘வைகோ பொதுவாழ்வுப் பொன்விழா’ நிகழ்ச்சியிலும் தாம் அவசியம் கலந்து கொள்வதாக தெரிவித்தார்.

‘தமிழ்நாட்டில் திமுக, அதிமுகவுக்கு மாற்றான ஒரு அரசியல் சக்தி உருவாவது தான் தமிழகத்தின் அரசியல் தேவை’ என்று காலம் சென்ற தலைவர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் அடிக்கடி குறிப்பிட்டதை நினைவு கூர்ந்ததோடு, ‘மக்கள் நலக் கூட்டணி வலுவுள்ள சக்தியாக உருவவெடுக்கும்‘ என்றும் சீத்தாராம் யெச்சூரி நம்பிக்கை தெரிவித்தார்.
பின்னர் இருவரும் தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.முன்னதாக வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் சுதாகர் ரெட்டி, ஏ.பி.பரதன், து.ராஜா ஆகியோரையும் சந்தித்து, பொன்விழாவுக்கு அழைப்பு விடுத்தார்.

Leave A Reply

%d bloggers like this: