வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே இந்தியாவின் பண்பாடாக உள்ளது. பல மொழி பேசும் மக்களும் பல மதங்களைப் பின்பற்றும் மக்களும் வாழும் நாடு இந்தியா.  பல ஆண்டுகளாக சகோதரர்களாக வாழ்ந்துவரும் இம்மக்களிடையே பிளவை ஏற்படுத்துவதையே முழுநேரத்தொழிலாகக் கொண்டு சங்பரிவாரமும் பாஜகவும் செயல்படுகின்றன. முஸ்லிம் மக்களுக்கு எதிராக மத்திய அமைச்சர்களும் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாள்தோறும் விஷத்தை உமிழ்ந்து வருகிறார்கள். இப்படி பாஜகவும் அதன் பரிவாரங்களும் நடந்து கொள்வதால்தான் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மாட்டிறைச்சியே வைத்திராத அப்பாவி முஸ்லிம் ஒருவர் கொல்லப்பட்டார்.

சாத்தான் வேதம் ஓதுவதா?

இதுபோன்ற செயல்கள் இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கும் எதிர்கால வளர்ச் சிக்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று கல்வியாளர்களும் வரலாற்று ஆய்வாளர்களும் எச்சரித்தபோதிலும் அவர்கள் கேட்பதாக இல்லை. மேலும் இதுபோன்ற வன்செயல்கள் நடைபெறும் போது அதைக் கண்டிக்க வேண்டிய பிரதமர் மவுனம் சாதிக்கிறார். தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய உள்துறை அமைச்சகம் வேடிக்கை பார்க்கிறது. இதனால் ஊக்கம்பெறும் சங்பரிவார அமைப்புகள் கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமைய்யாவின் தலையையே வெட்டி வீசுவோம் என்று இப்போது தைரியமாக மிரட்டத் துணிந்துள்ளன. மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவிக்கும் எழுத்தாளர்களுடன் கருத்தியல் ரீதியாக மோதுவதை விட்டுவிட்டு துப்பாக்கியைக் கொண்டு பேசுவது எந்த வகையான சகிப்புத்தன்மை என்று தெரியவில்லை.

இவ்வளவையும் செய்துவிட்டு சகிப்புத்தன்மை குறித்து விவாதிக்கத் தயார் என்று மத்திய அமைச்சரும் பாஜக மூத்த அமைச்சருமான வெங்கய்யாநாயுடு எதிர்க்கட்சிகளுக்கு சவால் விடுத்திருப்பதுதான் வேடிக்கையாக உள்ளது. மேலும் “சகிப்புத்தன்மையற்ற போக்கிற்கு எதிராக எழுத்தாளர்களும் வரலாற்று ஆய்வாளர்களும் பல்வேறு கட்சியினரும் போராட்டம் நடத்துவது என்பது மக்களவைத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்புக்கு எதிரானது’’ என்றும் அவர் கூறுகிறார். மக்களவைத் தேர்தல் என்பது மக்கள் விரோத காங்கிரஸ் அரசின் செயல்பாடுகளுக்கு எதிராகவும் அந்த அரசு கடைபிடித்த மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராகவும் அளிக்கப்பட்ட தீர்ப்புதானே தவிர பாஜகவினர் தங்கள்விருப்பப்படி நடந்துகொள்ள அளிக்கப்பட்ட உரிமம் அல்ல.

ஒருவர் தனக்கு விருப்பமான உணவை உட் கொள்வதைத் தடுக்க முற்படுவது என்பது அரசியல் அமைப்புச் சட்டம் அளித்துள்ள அடிப்படைச் சுதந்திரத்திற்கு எதிரானது என்பதை அறிந்தும் வேண்டுமென்றே அதை மீறும் வகையில் பேசியும் வன்முறையைத் தூண்டியும் வருவது யார்? குறிப்பிட்ட ஆட்சியின் கீழ்தான் இது போன்ற சம்பவங்கள் நடை பெறுகின்றன என்பது போன்ற மாயத்தோற்றத்தை எதிர்க்கட்சிகள் ஏற்படுத்துவதாகவும் அவர் கூறுகிறார். அவர் சொன்னவார்த்தையில் ஒரு திருத்தம், மாயத்தோற்றம் அல்ல உண்மைத்தோற்றமே அது தான். சகிப்புத்தன்மை குறித்து விவாதிக்க நாடாளு மன்றத்தைக் கூட்டவும் தயார் என்பவர்கள் அங்குவிவாதம் நடத்த அனுமதிப்பார்களா? எல்லாவற்றையும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது சகிப்புத்தன்மை அல்ல. மக்களின் உரிமைகளையும் உணர்வுகளையும் மதிப்பதே சகிப்புத்தன்மை என்பதை ஆட்சியாளர்களுக்குப் புரியும் வகையில் சொல்ல வேண்டியுள்ளது. மேலும், சகிப்புத்தன்மை என்பது பரஸ்பரம் மரியாதையும் கருத்துக்களை முன் வைப்பதற்கான சூழலை உறுதிப்படுத்து வதும் ஆகும். அத்தகைய சூழலை பாதுகாப்பதும் அரசின் கடமையாக இருக்கவேண்டும் அல்லவா?

Leave a Reply

You must be logged in to post a comment.