புதுக்கோட்டை, நவ.5-

காவல்துறையே பதற்றத்தை உருவாக்குகிறது! சிபிஎம் குற்றச்சாட்டுஅமைச்சருக்கு எதிராக நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதிமறுத்ததால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பதற்றமான சூழலுக்கும், வன்முறைக்கும் காவல்துறையே வழிவகுத்து விட்டது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:- ஆர்ப்பாட்டம் என்பது, மக்கள் தங்கள் பக்கம் உள்ள கருத்தின் மீது, அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமையாகும். ஆனால், புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதியில்லை எனக்கூறி, கூட்டத்தை தடியடி நடத்திக்களைத்ததுடன், கைதுசெய்யும் நடவடிக்கையிலும் இறங்கியுள்ளனர்.

இதனால் ஒரு கட்டத்தில் காவல் துறையினரின் கட்டுப்பாட்டையும் மீறிபெரும் வன்முறை வெடிக்கும் அளவிற்கு நிலைமை சிக்கலாகியுள்ளது. அதிமுக அலுவலகம், கடைகள், நிறுவனங்கள் மீது கல்வீச்சு நடந்துள்ளது. காவல்துறை தடியடியால் பலர் காயமுற்றுள்ளனர். அமைச்சருக்கு ஆதரவாகச் செயல்படுகிறேன் என்கிற பெயரில் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் ஒரு பதற்றமான சூழல் உருவாவதற்கு காவல்துறையினரே வழிவகுத்து விட்டனர்.தீபாவளி நெருங்குவதால் கடைவீதிகள் எல்லாம்வியாபாரம் சூடுபிடித்து நடக்கும் நேரம். நடைபெற்ற அசம்பாவிதச் சம்பவங்களால் பொதுமக்களும், வர்த்தகர்களும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். பல கடைகள் நாள்முழுவதும் மூடப்பட்டுள்ளன. வியாபாரிகள் பெருமளவிற்கு நஷ்டத்தை சந்தித்துள்ளனர். மேலும், மாவட்டத்தின் பல இடங்களில் சாலை மறியலும், மரத்தை வெட்டி சாய்த்து போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் சம்பவங்களும் நடந்துள்ளன.அமைச்சரின் தவறான வார்த்தைகளே இத்தகைய கொந்தளிப்புகளுக்கு மூலகாரணமாக இருந்துள்ளது. இதுகுறித்து எந்தவொரு கருத்தையும் அமைச்சர் இதுவரை தெரிவிக்கவில்லை. ஒரு பொறுப்புள்ளஅமைச்சர் மவுனம் காப்பது, அவர் அவ்வாறு பேசியுள்ளார் என்று கருதுவதற்கே இடமளிக்கிறது. சொந்தக் கட்சியினர் இடையேநடந்த ஒரு சம்பவத்திற்கு மாவட்ட மக்களை சிரமத்திற்கு உள்ளாக்குவதையும், இதனைத் தொடர்ந்து சாதியக் கலவரத்தை உருவாக்க நினைப்பதையும் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.இது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். தமிழக முதல்வர், தனது அமைச்சர் மற்றும் தனது கட்சிக்காரர்களால் நடந்துள்ள விரும்பத்தகாத சம்பவத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கவிவர்மன் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.