திருநெல்வேலி, நவ.5-

கங்கைகொண்டான் பெப்சி கம்பெனிக்கு அனுமதியை ரத்து செய்க: உ.வாசுகிநெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் இயங்கி வரும் பெப்சி கம்பெனியின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அம்பாசமுத்திரத்தில் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி வியாழனன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் ஏற்கனவே கோக் கம்பெனி செயல்பட்டு வருகிறது. தற்போது பெப்சி கம்பெனிக்கு தமிழகஅரசு அனுமதி வழங்கி உள்ளது. பெப்சி ஆலைக்காக, அரசு நிலம் ஒரு ஏக்கருக்கு வருடத்திற்கு வெறும் ஒரு  ரூபாய் வீதம் 36 ஏக்கர் 100 வருடங்களுக்கு குத்தகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. பெப்சி குளிர்பான நிறுவனத்திற்கு 1,000 லிட்டர் தண்ணீர் வெறும் 37 ரூபாய்க்கு நாளொன்றுக்கு தாமிரபரணியிலிருந்து 15 லட்சம் லிட்டர் வழங்க ஏற்பாடாகியுள்ளது. தாமிரபரணி ஆறு மூலம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் 86,000 ஏக்கர் விவசாயம் நடைபெறுகிறது. நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களை சார்ந்த 80 லட்சம் மக்களது குடிநீர் தேவையை நிறைவேற்றுகிறது.

பெப்சிக்கு தண்ணீர் வழங்கினால் விவசாயம், குடிநீர் தேவைகள் பாதிக்கும் அபாயம் உள்ளது.கருத்துக் கேட்புக் கூட்டங்களோ, முறையான விசாரணையோ இன்றி வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.தற்போது துவரம் பருப்பு அரசியல் பிரச்சனையாக மாறியுள்ளது. பெரும் வர்த்தகர்கள் எத்தனைகிலோ வேண்டுமானாலும் இருப்புவைத்துக் கொள்ளலாம் என்ற அனுமதியை வழங்கியவர் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தான். ஆன்-லைனில் சூதாடி பருப்பை பதுக்குவதும் விலையேற்றத்திற்கு காரணம். எனவே தான் ஆன்-லைன் வர்த்தகம் கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பத்தில் இருந்து தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மத்திய அரசு ஆன்-லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின் போது கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கற்பகம், ஒன்றியச் செயலாளர் ரவீந்திரன், ஒன்றியக் குழு உறுப்பினர் ரபேக்காள் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.