எம்.பில் தேர்வில் பங்கேற்க 20 பேருக்கு அனுமதி தாமதம்
ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக புகார்

எம்.பில் தேர்வில் பங்கேற்க 20 பேருக்கு அனுமதி தாமதம்

தேனி,நவ. 5-

எம்.பில் தேர்வில் பங்கேற்க ரூ.10ஆயிரம் லஞ்சம் தராததால் தேர்வுக்கூடத்திற்கு தாமதமாக அனுமதிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழக மாலை நேரக்கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை தேர்வு நடைபெற்றது. மாலை நேரக் கல்லூரி நிர்வாகம் தேர்வு எழுதுபவர்களிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சமாக வசூலித்தது. 80க்கு மேற்பட்ட மாணவர்கள் லஞ்சம் தர மறுத்துவிட்டனர். வியாழக்கிழமை தேர்வு எழுத வந்த அவர்களை தேர்வுக்கூடத்திற்கு நிர்வாகம் அனுமதிக்கவில்லை. சில மாணவர்கள் மறுநாள் தருவதாக கூறி தேர்வறைக்கு சென்றனர். பின்னர் 10 மணிக்கு அவர்களுக்கு விடைத்தாளும், கேள்வித்தாளும் அளிக்கப்பட்டு தேர்வு துவங்கியது. பணம் தராத மாணவர்கள் தனியாக அமரவைக்கப்பட்டனர்.

இத்தகவல் தெரிந்தவுடன் அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு செய்தியாளர்கள் திரண்டனர். அதனை தொடர்ந்து 10.40 மணியளவில் கல்லூரி நிர்வாகத்தினர் 20-க்கு மேற்பட்ட மாணவர்களை தனியாக தேர்வெழுத அனுமதித்தனர். எம்.பில் தேர்வில் பங்குபெறுபவர்கள் பெரும்பாலும் அரசுப்பள்ளிமற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றுபவர்கள் ஆவர். எம்.பில் கல்வித்தகுதியை பெற்றால் கூடுதல் சம்பளம் பெறலாம் என்ற நோக்கத்தில் அவர்கள் பயில்கின்றனர். அதனால் கூடுதலாக லஞ்சம் கொடுத்து காப்பி அடித்து தேர்வில் வெற்றி பெறலாம் என்று ரூ.10 ஆயிரம் கொடுத்ததாகவும், தங்களால் கொடுக்க இயலவில்லை என சில மாணவர்கள் தெரிவித்தனர். (ந.நி)

Leave a Reply

You must be logged in to post a comment.