புதுதில்லி, நவ.4-

ஷாருக்கான்

நாட்டின் சகிப்புத்தன்மையற்ற போக்கு குறித்து பாலிவுட் திரைக்கலைஞர் ஷாருக்கான் தனது கருத்தை பதிவு செய்த 2 நாட்களுக்குப் பிறகு, அவரை பாஜக எம்.பி. யோகி ஆதித்யநாத் கடுமையாகத் தாக்கிப் பேசியுள்ளார். பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீதுடன் ஷாருக்கானை ஒப்பிட்ட யோகி ஆதித்யநாத், ஷாருக்கான் பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டும் என்றார். “நாட்டில் உள்ள அவரது பெரும்பான்மையான ரசிகர்கள் கூட்டம் அவரது படங்களை புறக்கணித்தால் அவரும் கூட ஒரு சாதாரண முஸ்லிமாக தெருக்களில் அலைய வேண்டியதுதான். மதச்சார்பின்மை என்ற பெயரில் சிலர் தீவிர கருத்துகளை வெளிப்படுத்திவருகின்றனர், இவர்கள் தேச -விரோதிகளாகவே பேசி வருகின்றனர்.

துரதிர்ஷ்டவசமாக அவர்களது எதிர்ப்புக்கு தனது ஆதரவுக்குரலை ஷாருக்கான் தெரிவித்து தவறிழைக்கிறார். நான் கூறுகிறேன், இவர்கள் பயங்கரவாதிகளின் மொழியில் பேசுகின்றனர். ஷாருக்கானின் மொழிக்கும் ஹபீஸ் சயீதின் மொழிக்கும் அதிக வித்தியாசமில்லை. இவர்கள் பாகிஸ்தானுக்குச் செல்வதை வரவேற்கிறோம். இந்தியாவின் பெருமையை சீர்குலைப்பவர்களுக்கு அப்போதாவது புரியும்” என்று ஆதித்யநாத் விஷத்தைக் கக்கினார். முன்னதாக, செவ்வாயன்று பாஜக மூத்த தலைவர் கைலாஷ் விஜய்வர்கியா என்பவர், தொடர் டுவிட்டர்களில் ஷாருக்கானை கடுமையாகத் தாக்கி எழுதினார். ஷாருக்கான் தேச விரோதி என்றும், அவர் இந்தியாவில் வாழ்ந்தாலும் அவரது ஆன்மா பாகிஸ்தான் வசமே உள்ளது என்றும் அவதூறு பொழிந்திருந்தார். அதன் பிறகு விஜய்வர்கியா மீது கடும் விமர்சனங்கள் எழுந்ததையடுத்து தனது கருத்துகளை அவர் வாபஸ் பெற்றார்.

தனது கருத்துகளை திரும்பப் பெற்றாலும், அதற்காக மன்னிப்பு கேட்க மறுத்தார் விஜய்வர்கியா.இதனிடையே, யோகி ஆதித்யநாத் மற்றும் விஜய்வர்கியா ஆகியோரின் கருத்துகளைக் கண்டித்த காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான டாம் வடக்கன், எதிர்ப்போர் அனைவரும் பாகிஸ்தானுக்குச் சென்று விட வேண்டும் என்றால், இவர்கள் என்ன பாகிஸ்தான் சுற்றுலாவை வளர்த்தெடுக்க பாடுபடுபவர்களா? என்று குத்தலாக கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டில் ‘தீவிர சகிப்பின்மை’ நிலவுகிறது என்று ஷாருக்கான் கூறியதையடுத்தே பாஜகவினர் மேற்படி மிரட்டலில் இறங்கியுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: