கோயம்புத்தூர், நவ. 4-

image4737

அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தை சுயநிதி பல்கலைக்கழகமாக மாற்றும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் கல்லூரிவளாகத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.கோவை – மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் நிதியுதவி பெற்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கல்லூரியின் அறக்கட்டளை நிர்வாகம் மனிதவள மேம்பாட்டுத் துறை விதிகளை முறையாக பின்பற்றாமல் சுயநிதி கல்லூரியாக்க முயற்சித்து வருகிறது. இதனால் மத்திய அரசிடம் இருந்து வழங்கப்படும் நிதியுதவி நிறுத்தப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக இங்கு கல்வி பயிலும் ஏழை,எளிய மாணவிகளின் கல்விக் கட்டணம் பன்மடங்கு உயர்த்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் பணிக்கு பாதுகாப்பில்லாத சூழலும் ஏற்பட்டுள்ளது.

இதனைக் கண்டித்து மாணவிகள், பேராசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக பல்கலைக்கழக மாணவிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் செவ்வாயன்று மாலை முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவிகளில் இருவர் மற்றும்பேராசிரியர் ஒருவர் புதனன்று மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சூழலில் பல்கலைக் கழகத்திற்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக உரிய தீர்வுகிடைக்கும் வரை தங்களதுபோராட்டம் தொடர்ந்து நடைபெறும் என மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.