விருதுநகர், நவ.4-

சாலை ஆய்வாளர்களுக்கு மின்னணு முறையில் ஊதியம் : உயர்நீதிமன்றம் உத்தரவு

சாலை ஆய்வாளர்களுக்கு வங்கி மூலம் மின்னணு முறையில் ஊதியம் வழங்க வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறையில் பணியாற்றி வரும் சாலை ஆய்வாளர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்கப்படுவது இல்லை. சாலைகளுக்காக ஒதுக்கப்படும் நிதியில் இருந்து சம்பளம் வழங்கப்பட்டுவருகிறது. அதாவது, மாதம்தோறும் உதவிப் பொறியாளர் பெயரில் காசோலை வரும். அதை அவர், வங்கியில் செலுத்தி பணமாக மாற்றி சாலை ஆய்வாளர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால், ஊதியம் பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு வந்தன. வங்கிகளில் தனி நபர் கடன் பெறுவதிலும் சிரமங்கள் இருந்தன.

இதேபோல், வனத்துறை மற்றும் பொதுப் பணித்துறையில் வேலை செய்யும் சில ஊழியர்களுக்கும் இது போன்ற நடைமுறை இருந்து வந்தது. ஆனால், கடந்த 2012-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் அவர்களுக்கும் வங்கிக் கணக்கில் ஊதியம் வழங்க உத்தரவிடப்பட்டது. எனவே, சாலை ஆய்வாளர்களுக்கும் மின்னணு முறையில் வங்கி மூலம் ஊதியம் வழங்க வேண்டும் என சாலை ஆய்வாளர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் மு.மாரிமுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, நெடுஞ்சாலைத்துறை அரசு செயலாளர் மற்றும் முதன்மை இயக்குநர் ஆகியோர் எட்டு வாரங்களில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Leave A Reply

%d bloggers like this: