மும்பை, நவ.4-

ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன்

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அனைத்து கருத்துக்களையும் மனந்திறந்து விவாதிக்கும் சூழ்நிலையும் சகிப்புத்தன்மையும் அவசியமாகும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். சில நாட்களுக்கு முன்னதாக தில்லி ஐஐடி விழாவில் பேசிய ரிசர்வ்வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன், “சகிப்புத்தன்மை இல்லை என்றால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும்” என்று கூறியிருந்தார். இதனால் எரிச்சல் அடைந்த பாஜக தலைவர்களும் அமைச்சர்களும், “ரகுராம் ராஜன் அவரது வேலையை மட்டும் பார்க்கட்டும்; அனாவசியமாக மற்ற விசயங்களில் தலையிட வேண்டாம்“ என்று ஆத்திரத்தைக் கொட்டியிருந்தனர். இந்நிலையில் புதனன்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த ரகுராம் ராஜன் கூறியதாவது:- இந்தியாவில் சகிப்புத்தன்மையில்லை என்றால் பைத்தியக்காரத்தனமாக பெரிய அளவிலான நலன்களை இழக்க வேண்டியிருக்கும். ஏற்கனவே நான் கூறியது:- அங்கும் இங்கும் பேசும் வெற்றுப் பேச்சல்ல.

இதுநமக்கு ஏற்கனவே உள்ள நலன்களை எப்படி அதிகரிக்க போகிறோம் என்பதற்கான ஒரு விவாதமாகும். இந்தியா ஒரு திறந்த சமூகமாகும்; இதை மூடுவதற்கான அனைத்துமுயற்சிகளையும் நாம் எதிர்க்கிறோம். இந்தியாவின் மிகப்பெரிய பலமே அதன் ஜனநாயகமாகும். எனவே ஒவ்வொருவரும் ஒரு ஆரோக்கியமான விவாதத்திற்கு அமைதியாக தயாராக இருங்கள். ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டிருந்தால் ஆரோக்கியமான விவாதம் நடத்த முடியாது. முதலில் கருத்துக்களை மோத விடுங்கள். நாம் ஒவ்வொருவரும் என்ன சிந்திக்கிறமோ அதைப் பேசவிடாமல் தடுக்கக் கூடாது. மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவிற்கு இருக்கும் மிகப்பெரிய பலமே சகிப்புத்தன்மையாகும். அதை பைத்தியக்காரத்தனமாக இழக்கக்கூடாது. எனவே வளர்ச்சிக்கான அடிப்படையாக இருக்கும் அந்தக் காரணியை ஆதரிக்க வேண்டும். எனவே வலது தீவிர மற்றும் இடது தீவிரக்குழுக்கள், யாரையும் வாயை மூடுங்கள் என்றோ, என்ன விசயத்தை நாங்கள் கேட்க வேண்டும் என்றோ கூறக்கூடாது. இது ஒரு உண்மையான விவாதமாக இருக்க வேண்டும். அந்தச் சூழலை நீங்கள் பாதுகாக்க வேண்டும். நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் சமூகம் இதை உண்மையில் ஆதரிக்கின்றவர்களாக இருப்பது நன்றிக்குரியது. சகிப்புத்தன்மையும் பரஸ்பரம் மரியாதையும் கருத்துக்களை முன்வைப்பதற்கான சூழலுக்கு அவசியமாகும். உடல்ரீதியாக காயப்படுத்துதல் அல்லது வார்த்தைகளின் மூலமாக அவமதிக்கும் எந்த குழுக்களையும் அனுமதிக்கக்கூடாது.அதிகார பீடத்திலுள்ளவர்களையும் பாரம்பரியத்தையும் எதிர்த்துக் கேள்வி கேட்பதுதான் அதிகாரத்திலிருப்பதாலேயே ஒரு குறிப்பிட்ட கருத்தை அல்லது ஒரு சித்தாந்தத்தைத் திணிப்பதை சாத்தியமற்றதாக்கும். எனவே எதையும் விவாதிக்கிற மற்றும் கேள்விக்குள்ளாக்குகிற உரிமையைப் பாதுகாப்பது இந்தியாவின் வளர்ச்சிக்கு அவசியமாகும். இவ்வாறு ரகுராம்ராஜன் கூறினார்.(பிடிஐ)

Leave a Reply

You must be logged in to post a comment.