எதை நோக்கிச் செல்கிறது இந்தியாவின் வளர்ச்சி?++

சர்ச்சையை தடுத்து நிறுத்துங்கள் இல்லையெனில் இந்தியா அளவிலும் சர்வதேச அளவிலும் இந்தியா தனது மதிப்பை இழக்க நேரிடும் என்று சர்வதேச பொருளாதார மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் வெளியிட்ட அறிக்கை இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த அறிக்கையில் எத்னிக் டென்ஷன் (நுவாniஉ வநளேiடிn) என்ற வார்த்தை பிரயோகம் வருகிறது.எத்னிக் டென்ஷன் என்பதன் அர்த்தத்தை தேடிப்பார்க்கையில் இனப் பதற்றம் என விளக்குகிறது அகராதி. இனப் பதற்றம் என்ற வார்த்தைக்கு பின்னால் பல சம்பவங்கள் உள்ளன. வீட்டில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக தாத்ரியில் நடந்த கொலை, எழுத்தாளர் எம்.எம்.கல்புர்கி கொலை என இந்தியாவின் மதச்சார்பின்மையை கேள்விகுள்ளாக்கும் நிகழ்வுகள் உள்ளன.பொதுவாக தர மதிப்பீட்டு நிறுவனங்கள் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதில்லை.

பொருளாதாரத்தை பாதிக்கும் அளவிற்கு நிகழ்வுகள் நடந்து கொண் டிருக்கிறது என்பதை சுட்டிக்காட்டத்தான் இந்த அறிக்கை வெளிவந்துள்ளதாக தெரிகிறது. அதையொட்டித்தான் வளர்ச்சி என்ற ஒற்றை முழக்கத்தை வைத்து ஆட்சியை பிடித்த நரேந்திர மோடி அரசு எந்த பாதையில் செல்கிறது என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழத் தொடங்கியிருக்கிறது. சர்வதேச அளவில் இந்தியாதான் அதிக அளவில் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்து வருகிறது. 30,000 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் ஆகிறது. வியட்நாம், மலேசியா, எகிப்து, தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு மாட்டிறைச்சியை இந்தியா ஏற்றுமதி செய்து வருகிறது. ஆனால் தற்போது ஏற்றுமதி 8.82 சதவீதம் குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கு இந்தியாவில் தற்போது நிலவி வரும் அரசியல் சூழ்நிலை மாட்டிறைச்சி ஏற்றுமதியாளர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுதான் காரணம் என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. மேலும் மாட்டை இறைச்சிக்காக வெட்டுவதற்கு பயம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்து மத அடிப்படைவாதிகள் தனிமனிதர்களை மற்றும் மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவ னத்தின் ஊழியர்களை தொடர்ந்து தாக்குவதாகவும் இதனால் மாட்டிறைச்சியை எடுத்துச் செல்வதற்கு கடினமாக இருப்பதாக மாட்டிறைச்சி உற்பத்தியாளர்கள் தெரிவிப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.பொருளாதார மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ், நீண்ட கால வளர்ச்சிக்கு இந்தியா அதிக அளவில் பொருளாதார சீர்த்திருத்தங்களை தற்போது எதிர் நோக்கியிருக்கிறது.

ஆனால் தற்போது பாஜக அரசுக்கு மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாததால் சீர்திருத்தங்களை நிறைவேற்றுவது கேள்விகுறியாகியுள்ளதாக மூடிஸ் கூறுகிறது. மேலும் ஜிஎஸ்டி மசோதா மற்றும் நிலம் கையகப்படுத்தும் மசோதா மற்றும் தொழிலாளர் நல மசோதா ஆகியவை இன்னும் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. 2016-ஆம் ஆண்டு நிறைய பொருளாதார சீர்திருத்தங்களை செய்தால் மட்டுமே நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி)அதிகரிக்கும் எனவும் மூடிஸ் கூறியுள்ளதுபிரதமர் நரேந்திர மோடி பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மேக் இன் இந்தியா, திறன்மிகு இந்தியா, டிஜிட்டல் இந்தியா என்று பல்வேறு திட்டங்களை அறிவிக்கிறார். இந்தியாவில் முதலீடு செய்ய வாருங்கள் என்று உலக முதலீட்டாளர்களை அழைக்கிறார். ஆனால் உள்நாட்டில் நிகழும் பிரச்சனைகளை கட்டுப்படுத்த தவறிவிட்டாரோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சர்ச்சைக்குரிய பேச்சுக்களை பேசிய பாஜகவினரை பார்த்து யாரும் லெட்சுமணன் ரேகையை (ராமாயணத்தில் லெட்சுமணன் கிழித்த கோடு) தாண்ட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். ஆனால் அதன் பிறகும் சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.தாத்ரி கொலையும் அதைத் தொடர்ந்த சம்பவங்களும், ரூ.30,000 கோடி அளவிலான இந்தியாவின் ஏற்றுமதியை பாதிக்கும் அளவிற்கு உருவெடுத்து நிற்கிறது. இந்தியாவின் மதச்சார்பின்மையை கேள்விக்குள்ளாக்குவது மட்டுமல்லாமல் இந்தியாவின் வளர்ச்சியையும் சேர்த்து பாதிக்கும் போதுதான் அச்சம் ஏற்படுகிறது. வளர்ச்சி நாயகன் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த மோடி தற்போது இந்தியாவின் வளர்ச்சியை கேள்விக்குள்ளாக்கும் நிகழ்வுகளை கண்டுகொள்ளாமலும், கட்டுப் படுத்தாமலும் இருப்பது என்ன நியாயம்?

நன்றி: தி இந்து (தமிழ்)- 02.11.2015

Leave A Reply

%d bloggers like this: