நவ.3 தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்
வணிகச் சூதாடிகளை கட்டுப்படுத்த தவறிய மோடி அரசு * பருப்பு விளைச்சலையும் பெருக்கவில்லை

சென்னை,அக்.30-

மக்கள் நலக் கூட்டு இயக்கத்தின் சார்பில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, வெள்ளியன்று விடுத்துள்ள அறிக்கை வருமாறு:கடந்த ஆண்டு 80 ரூபாய்க்கு விற்ற துவரம் பருப்பு, மத்திய-மாநில அரசுகளின் அலட்சியத்தால் தற்போது ரூ.220 அளவுக்கு உயர்ந்து இருக்கின்றது. தீபாவளி பண்டிகை நெருங்குகையில் பருப்புகள் உள்ளிட்ட அன்றாடத் தேவை உணவுப் பொருட்கள் விலை ஏற்றத்தால், அனைத்துத் தரப்பு மக்களும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கின்றார்கள்.

வணிகச் சூதாடிகள் கொள்ளை லாபம்

கடந்த ஆண்டு பா.ஜ.க. அரசுபதவிக்கு வந்தபிறகுதான், இணையதள வணிகத்தில் பருப்பு வகைகளைச் சேர்த்தது. அதுதான் இந்தத் தாறுமாறான விலை உயர்வுக்குக் காரணம் ஆகும். இணைய வணிகச் சூதாடிகளைக் கட்டுப்படுத்தத் தவறியதால், அவர்கள் பருப்புகளைப் பதுக்கி, விலை உயர்வை ஏற்படுத்திக் கொள்ளை லாபம் அடிக்க வழிவகுத்துக் கொடுத்து விட்டார்கள். அதனால்தான் இப்போது, நாடு முழுவதும் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகள் மூலம் 82 ஆயிரம்டன் பருப்பு பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றது.

பருப்பு விளைச்சலைப் பெருக்காதது ஏன்?

மேலும் பருப்பு விளைச்சல் குறைவு என்று மத்திய அரசு காரணம் கூறுவதை ஏற்க முடியாது.நாட்டில் பருப்பு சாகுபடி பரப்பளவு குறைந்து வருவதைப் பற்றிஅரசு கவனத்தில் கொள்ளவில்லை.

விவசாயிகளின் பிரச்சனைகளைத் தீர்க்காமல், உள்நாட்டில் விளைச்சலைப் பெருக்காததால், இன்றைக்குப் பல்லாயிரம் கோடி ரூபாய் அயல்நாட்டுச் செலாவணியைக் கூடுதலாகச் செலவிட்டு 7 ஆயிரம் டன் பருப்பை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

Leave A Reply