மோடி, அமித் ஷா மீது நடவடிக்கை எடுத்திடுக!
பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் மதவெறிப் பேச்சு

புதுதில்லி, அக். 30-

‘பீகார் தேர்தலில் தோற்றால் பாகிஸ்தானில் பட்டாசுவெடித்து கொண்டாடுவார்கள்’ என்று மதவெறியைத் தூண்டும் விதமாகப் பேசி, மதவாத சக்திகளுக்கு தலைமை தாங்கும் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக புதுதில்லியில் வெள்ளியன்று பத்திரிகையாளர்களிடம் பேசிய யெச்சூரி கூறியதாவது:- பாஜக தலைவர்களின் கூற்றுக்கள், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகும். இது, தில்லி தேர்தலில் தோற்றதைப் போன்று பீகாரிலும் தோற்று விடுவோம் என்ற அச்சம் மற்றும் விரக்தியின் அடிப்படையில் பேசுவதாகும். தேர்தல் ஆணையம் இத்தகைய பேச்சுக்களை கவனத்தில் கொண்டு தேர்தல் நடத்தை விதிகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்திட வேண்டும். மற்றொன்று, மத்திய பாஜகஅரசு அரசியல்ரீதியாக என்னசெய்கிறது? பாஜகவின் தலைவர் அமித் ஷா மற்றும் அவருடைய எஜமான் மோடி ஆகியோர் அனைத்து மதவாத சக்திகளுக்கும் புரவலர்களாக இருக்கின்றனர். உண்மையில் அவர்கள் மதரீதியாக பிளவுபடுத்தும் பிரச்சாரத்திற்கு தலைமை தாங்குகின்றனர்.பிற்படுத்தப்பட்டவர்களின் இடஓதுக்கீட்டைப் பறித்து சிறுபான்மையினருக்கு அளிப்பதாக எதிர்க்கட்சிகள் மீது பாஜககுற்றம் சாட்டுகிறது.

இப்படிப்பட்ட மதவாதப் பிரச்சாரத்தில் பிரதமர் உட்பட பாஜக தலைவர்கள் அனைவரும் ஈடுபட்டு வருகின்றனர்.மதவாதப் பிரச்சாரத்திற்கு எதிராக இடது முன்னணி தொடங்கியுள்ள பிரச்சாரம் மக்கள் மத்தியில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளதால் தில்லிபோன்ற படுதோல்வி பாஜகவிற்கு காத்திருக்கிறது.

இவ்வாறு யெச்சூரி கூறினார். முன்னதாக பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பாஜக தலைவர் அமித் ஷா, “பாஜக தோற்றால் பாகிஸ்தானில் பட்டாசு வெடித்து கொண்டாடுவர்; நீங்கள் பாகிஸ்தானில் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவதை விரும்புகிறார்களா?” என்று பேசி தேசிய வெறியையும் முஸ்லிம்களுக்கு எதிராக மதவெறியையும் ஒரு சேரத் தூண்டி விடும் விதமாக பேசினார்.

இதன் மூலம் பாஜக தவிரமற்ற எதிர்க்கட்சிகள் அனைத்தும் தேச பக்தி இல்லாதவர்கள் என்று குறிப்பிட்டார்.

(பிடிஐ செய்தியுடன்)

Leave A Reply

%d bloggers like this: