இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம்

சென்னை, அக்.29-

மக்கள் நலக் கூட்டியக்கம் தேர்தல் அணியாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் ஏகமனதாக முடிவு செய்துள்ளது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள பத்திரிகை செய்தியின் விபரம் வருமாறு:- இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் 2015 அக்டோபர் 27 மற்றும் 28 ஆகிய இரண்டு தினங்களில் சென்னை எழும்பூரில் உள்ள, தமிழ்நாடு ஏஐடியுசி அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் எஸ்.அழகுமுத்துப் பாண்டியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் எஸ்.சுதாகர் ரெட்டி, தேசிய செயலாளர் டி.ராஜா எம்.பி., தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஆர்.நல்லகண்ணு, தா.பாண்டியன், துணைச் செயலாளர்கள் கே.சுப்பராயன், மூ.வீரபாண்டியன், பொருளாளர் எம்.ஆறுமுகம் எம்.எல்.ஏ, செயற்குழு உறுப்பினர்கள் சி.மகேந்திரன், கோ.பழனிச்சாமி, பி.சேதுராமன், டி.எம்.மூர்த்தி, என்.நஞ்சப்பன் எம்.எல்.ஏ, பி.பத்மாவதி, நா.பெரியசாமி உட்பட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு அரசியல் நிலை குறித்து விவாதித்து, வரும் சட்டப்பேரவை தேர்தலில், அதிமுக, திமுக அல்லாத ஆட்சி அமைத்திட கீழ்கண்ட அரசியல் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

சீரழியும் விவசாயம்

மத்தியில் ஆண்ட காங்கிரஸ் , ஆளும் பாஜக கட்சிகளின் அரசாங்கங்கள் பின்பற்றிவரும் தனியார்மய, புதிய தாராளமய, உலகமயக்கொள்கைகளை தமிழகத்தில் ஆண்ட திமுக, ஆளும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் பின்பற்றி வருகின்றன. இதன் விளைவாக விவசாயம் சீரழிந்து சிறுகுறு நடுத்தர தொழில்கள் பெருமளவு பாதிக்கப்பட்டு, பன்னாட்டு – உள்நாட்டு பகாசுர பெரு நிறுவனங்கள் செழித்து வருகின்றன.

நுனி முதல் அடி வரை ஊழல்

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய மூலதன அனுமதியும், ஆன்லைன் வர்த்தகமும், வணிகம் சார்ந்த பலகோடி மக்களின் வாழ்க்கையை அழித்து வருகின்றன. தனியார்மயக் கொள்கையின் காரணமாக கல்வியும், மருத்துவமும் கோடிக்கணக்கான மக்களுக்கு எட்டாக் கனியாகி விட்டன. இதனால், அரசியல் சட்டரீதியான சமூக நீதியை பெறுவது மறுக்கப்படுகிறது. ஊழல், முறைகேடுகள் எழுதப்படாத சட்டமாகியுள்ளது. பொதுப்பணிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியில் சரிபங்கு கமிஷனாக கேட்கப்பட்டதை ஒப்பந்ததாரர்கள் வெளிப்படுத்தினர். பயிறுக்கு போகவேண்டிய தண்ணீரை வாய்க்காலே குடித்துவிடுவது போன்று, அரசு நிர்வாகம் நுனிமுதல் அடிவரை ஊழல் முறைகேடுகளில் முற்றாக மூழ்கிவிட்டன.

தலைதூக்கும் மதவெறி சக்திகள்

சட்டம் ஒழுங்கு கெட்டு, தினசரி கொலை, கொள்ளை, வழிப்பறி, சாதி ஆண வக்கொலைகள், பாலியல் வன்புணர்ச்சிகள் தொடர்கின்றன. மதுக் கலாச்சாரம் மக்களை சீரழிக்கிறது. சாதி- மதரீதியாக மக்களை பிளவுபடுத்தி மக்களிடையே குரோத – விரோதங்களை கூர்தீட்டுகிற குற்றச்செயல்கள் தடுக்கப்படவில்லை. மக்களை பிளவுபடுத்தி தங்களது குறுகிய அரசியல் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளும் மதவெறி சக்திகள் தலைதூக்குகின்றன. மதச்சார்பற்ற கொள்கை கேள்விக்குறியாகும் அபாய நிலை எழுந்துள் ளது.

நேர்மையான அதிகாரிகளை ஊக்கப் படுத்துவதற்குமாறாக தற்கொலைக்கு தள்ளப்படுகின்றனர். இரண்டு கழக ஆட்சியின் போதும் சட்டமன்ற ஜனநாயகம் -சட்ட மன்றத்திலேயே வதைக்கப்படுகின்றது. பேச்சு ரிமை – எழுத்துரிமை கூட்டம் கூடும் உரிமை, ஆர்ப்பாட்டம் போன்றவை ஒடுக்கப்படுகின்றன.

கொள்ளை போகும் வளங்கள்

கனிமவளம், வனவளம், மணல்வளம் என அனைத்து இயற்கை வளங்களும் ஆளும்கட்சியின் பலத்த ஆதரவோடு சூறையாடப்படுகிறது. நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி, கூட்டுறவு என சகல தேர்தல்களிலும் முறைகேடாக குவிக்கப்பட்ட பணபலமும், சமூக விரோத கும்பலின் பலமும் , ஆளும் கட்சியின் வெற்றிக்கு காரணமாகின்றன. இரண்டு கழகங்களும் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி அரசியலை வியாபாரமாக்கி அரசியல் பொருளாதார, பண்பாட்டுத் தளங்களை சீரழித்துவிட்டன.

தமிழக மக்களின் நீண்ட காலக் கனவு

எனவே, திமுக, அதிமுக அல்லாத ஒரு மாற்று தமிழ்நாட்டின் அரசியல் தேவை என்பது தமிழ்நாட்டு மக்களின் நீண்டகால கனவாகும். தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, மாற்றுக் கொள்கையுடன் கூடிய ஒரு அணியை வளர்த்தெடுக்க வேண்டிய ஒரு பெரும் அரசியல் கடமை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளுக்கும் உள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக் குழு கருதுகிறது. இந்நிலையில் இந்தியகம்யூனிஸ்ட் கட்சி , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய நான்கு கட்சிகளும் மக்கள் நலக் கூட்டு இயக்கமாக செயல்பட்டு, மக்கள் கோரிக்கைகளுக்காகவும், மாநில நலன் காத்திடவும், கடந்த பல மாதங்களாக போராடிவருவதை வரவேற்பதுடன், எதிர் வரும் 2016 சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் அணியாக வளர்த்தெடுப்பது, அரசியல் ரீதியான அவசியக் கடமை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக்குழு கருதுகிறது. மேலும், இதேபோன்று , மாற்றுக் கொள்கைகளைக் கொண்ட கட்சிகளும் மக்கள் நலக் கூட்டு இயக்கத்தோடு இணைந்து பணியாற்றிட முன்வருமாறு கேட்டுக்கொள்கிறது.

மாற்றத்தை முன்வைத்து மக்கள் நலன் காக்கப் போராடி வரும் மக்கள் நலக் கூட்டு இயக்கத்திற்கு, தமிழக மக்கள் தங்களின் பேராதரவை அளித்திட வேண்டுமாய் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக் குழு கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: