வரலாற்று அறிஞர்கள், விஞ்ஞானிகள் கடும் எதிர்ப்பு

புதுதில்லி, அக். 29-

மோடி அரசின் கீழ் கருத்து வேறுபாடுகள் வன்முறையாலும் துப்பாக்கி குண்டுகளாலும் தீர்க்கப்படுகின்றன. நாட்டில் அச்சுறுத்தும் சூழல்நிலவுகிறது என்று நாடு முழுவதும் உள்ள முக்கியமான வரலாற்று அறிஞர்கள் 53 பேர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாஜக அரசின் பாசிச போக்கைகடுமையாக கண்டித்து தற்போது ரொமிலாதாப்பர், இர்பான் ஹபீப், கே.என்.பணிக்கர் மற்றும் மிருதுளா முகர்ஜி உள்ளிட்ட 53 வரலாற்று நிபுணர்கள் கடுமையான கண்டனத்துடன் கூட்டறிக்கை விடுத்துள்ளனர்.அந்த அறிக்கையில் அவர்கள் கூறியுள்ளதாவது:

கருத்து வேறுபாடுகள் வன்முறையால் தீர்க்கப்படுகின்றன. விவாதங்கள் எதிர் விவாதங்களினால் எதிர் கொள்ளப்படாமல் துப்பாக்கி குண்டுகளினால் எதிர்கொள்ளப்படுகின்றன. ஒரு எழுத்தாளர் இந்தப் போக்கை எதிர்க்கும் விதமாக தனது விருதை திரும்பித் தருகின்றார் என்றால் எந்த நிலைமைகளினால் அவர் விருதை திரும்பித்தருகிறார் என்பது குறித்து எதுவும் கூறப்படாமல் அதற்கு பதிலாக பாஜக அமைச்சர்கள் அதை காகிதப்புரட்சி என்று கூறி எழுத்தாளர்களை எழுதுவதை நிறுத்துமாறு அறிவுரை கூறுகின்றனர்.

அறிவாளிகள் ஆட்சேபித்தால் அவர்கள் வாயடைக்க வைக்கப்படுவார்கள் என்பதுதான் இதன் பொருள். இந்த அரசு எதை விரும்புகிறது? கடந்த கால வரலாற்றை திட்டமிட்டு தனது விருப்பப்படி தயாரிக்கிறது. அந்த வரலாற்றில் சிலரை புகழ் பாடுகிறது; சிலரை வசை பாடுகிறது; இதில் எந்த கால வரிசையும் இல்லை; எந்த ஆதாரமும் இல்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளனர். ஏற்கெனவே, நாட்டின் நிலைமை மோசமாகி வருகிறதுஎன சுட்டிக்காட்டி நூற்றுக்கும் மேற்பட்ட புகழ்பெற்ற விஞ்ஞானிகள், குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளனர். இந்நிலையில், நாட்டின் முன்னணி விஞ்ஞானியும் செல் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தின் நிறுவனருமான பி.எம்.பார்கவா தனக்கு வழங்கப்பட்ட பத்மபூஷண் விருதை திருப்பியளிப்பதாக அறிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.