திருவனந்தபுரம், அக். 28 –

கேரள இல்லத்தில் புகுந்து மாட்டிறைச்சி சோதனை நடத்திய விவகாரத்தில், தில்லி போலீசாரின் செயலை மத்திய அரசு நியாயப்படுத்தினால், சட்ட நடவடிக்கைக்கு செல்வோம் என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி எச்சரிக்கை விடுத்துள்ளார். புதனன்று நடைபெற்ற கேரள அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின், உம்மன்சாண்டி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “மாநில அரசு நடத்தும் அதிகாரப்பூர்வ விருந்தினர் இல்லத்தில், மாநில அதிகாரிகளின் அனுமதியின்றி சோதனை மேற்கொள்வது, எல்லை மீறிய செயல்; சட்டத்தையும் மீறிய நடவடிக்கை; எனவே, சோதனை குறித்த தில்லி போலீசாரின் விளக்கத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது; இதுகுறித்து பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கும் எழுதப்பட்டுள்ள கடிதத்திற்கு பதிலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்; அவர்களும், தில்லி போலீஸ் கடமையை மட்டுமே செய்தது; சட்டத்திற்கு இணங்கவே சோதனை மேற்கொண்டது என்று கூறுவார்களேயானால்,

கேரள அரசு அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைக்கு செல்லும்”என்று உம்மன் சாண்டி கூறினார்.மேலும், புகார் அளித்தவரின் நம்பகத்தன்மையைக் கூட கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் சோதனை நடத்தப்பட்டுள்ளது என்றால், இது எந்தத் தரப்பையோ திருப்தி செய்ய நடத்தப்பட்ட தாகவேத் தெரிகிறது என்று குற்றம்சாட்டிய உம்மன்சாண்டி, தவறை ஒப்புக் கொண்டால் மட்டுமே இப்பிரச்சனையில் கேரள அரசு அமைதியடையும் என்றும் குறிப்பிட்டார்.

Leave A Reply

%d bloggers like this: