பொய்யான தகவல் தந்த விஷ்ணுகுப்தா கைது

புதுதில்லி, அக். 28 –

கேரள அரசு இல்ல கேண்டீன் மெனுவில், மீண்டும் எருமை மாட்டிறைச்சி உணவு இடம்பெற்றது. அதேநேரத்தில், இங்கு பசு மாட்டிறைச்சி உணவு பரிமாறப்படுவதாக பொய்யான தகவலை அளித்த இந்துசேனா அமைப்பைச் சேர்ந்த விஷ்ணு குப்தாவை புதனன்று போலீசார் கைது செய்தனர். தில்லியில் உள்ள கேரள அரசு இல்ல கேண்டீனில், பசு மாட்டிறைச்சி உணவு பரிமாறப்படுவதாக இந்துசேனா என்ற அமைப்பைச் சேர்ந்த விஷ்ணுகுப்தா, போலீசுக்கு தொலைபேசி மூலம் தகவல் அளித்தார். அதன்பேரில், தில்லி போலீசார், கேரள அரசு இல்லத்திற்குள் புகுந்து சோதனை நடத்தினர். ஆனால், அங்கு பசு மாட்டிறைச்சி உணவு எதுவும் இல்லை. கேரள இல்ல கேண்டீனில் பரிமாறப்படுவது, எருமை மாட்டிறைச்சி உணவுதான் என்றும், பசு மாட்டிறைச்சியை பயன்படுத்துவது இல்லை என்று எடுத்துக்கூறியும், போலீசார் நீண்டநேரமாக கேரள இல்லத்தின் முன்பாக முகாமிட்டனர். இதனால், கேரள அரசு இல்ல கேண்டீன் மெனுவிலிருந்து, மாட்டிறைச்சி உணவு தற்காலிகமாக நீக்கப்பட்டது.

இதனிடையே, கேரள இல்லத்திற்குள் புகுந்து போலீசார் சோதனையிட்டது நாடு முழுவதும் கடும் கண்டனத்திற்கு உள்ளானது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பினராயி விஜயன் தலைமையில், கேரளத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கேரள மாநில முதல்வர் உம்மன்சாண்டி, போலீஸ் சோதனைக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்ததுடன், பிரதமர் மோடி இப்பிரச்சனையில் தலையிட வேண்டும் என்று கடிதம் எழுதினார்.

தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோரும் தில்லி போலீசாருக்கு கண்டனம் தெரிவித்தனர். ஆனால், கேரள இல்லத்தில் விசாரணை மட்டுமே நடத்தினோம், சோதனை எதுவும் மேற்கொள்ளவில்லை என்று தில்லி காவல்துறை ஆணையர் பி.எஸ்.பஸ்சி விளக்கம் அளித்தார். பொய்யான புகார் அளித்த விஷ்ணுகுப்தா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் அறிவித்தனர்.இந்நிலையில், புதனன்று கேரள அரசு இல்ல கேண்டீனின் மதிய உணவுக்கான மெனுவில், மீண்டும் எருமை மாட்டிறைச்சி உணவு இடம்பெற்றுள்ளது. 45 நிமிடத்தில் மொத்த இறைச்சியும் விற்று தீர்ந்தது என்றும் தகவல் வெளியானது.

விஷ்ணுகுப்தா கைது!

கேரள இல்லத்திற்குள் நுழைந்து போலீசார் நடத்திய சோதனை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு காரணமாக அமைந்த பொய்யான தகவலை அளித்த இந்து சேனா அமைப்பின் தலைவர் விஷ்ணு குப்தாவை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: