உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் கொடியேரி பாலகிருஷ்ணன் பேட்டி

பெரும்பாவூர்:-

உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் சரியான பாடம்புகட்டுவார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் கூறினார். இடுக்கி மாவட்டம் தொடுபுழாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- உள்ளாட்சி தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மக்கள் அமோக ஆதரவு அளித்து வருகிறார்கள்.

அருவிக்கரா சட்டமன்ற தேர்தலில் கிடைத்த வெற்றி போல் உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெற்றுவிடலாம் என்று காங்கிரஸ் கட்சியினர் கனவு காண்கிறார்கள். இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். காங்கிரஸ் அரசுக்கு எதிராக மக்கள் தீர்ப்பு அளிக்க முடிவுசெய்துவிட்டதை மாநிலம் முழுவதும் சென்று பிரச்சாரம் செய்யும்போது உணர முடிகிறது.

விலைவாசி உயர்வு, மக்கள் நல திட்டங்களில் பின்னடைவு ஆகியவற்றினாலும் காங்கிரஸ் தோல்வி அடையும். காங்கிரஸ் கட்சியினர்,  பாரதிய ஜனதாவுடன் இந்த தேர்தலில் மறைமுகமாக உறவு வைத்துள்ளனர். இதற்காக திரைமறைவில் சில இடைத்தரகர்கள் மூலம் இருகட்சிகளுக்கும் அரசியல் மறைமுக உறவு ஏற்பட்டுள்ளது. இந்த இரட்டை வேடத்தை மக்கள் நன்றாக புரிந்துள்ளனர். மத்தியில் பாரதிய ஜனதா அரசு மதவாத போக்கை திணிக்கிறது. சிறுபான்மை மக்கள், தலித் மக்கள் மத்திய பாரதிய ஜனதா அரசினால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே கேரளாவில் இந்த கட்சிக்கு மக்கள் ஆதரவு அளிக்க மாட்டார்கள். இவ்வாறு கொடியேரி பாலகிருஷ்ணன் கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.