புதுதில்லி,அக்.28-

வர்த்தகத்தில் இந்தியா எனும் மிகப் பெரிய சந்தையை கைப்பற்றும் நோக்கத்துடன் பன்னாட்டு பகாசுர கார்ப்பரேட் கம்பெனிகள் இடைவிடாமல் முற்றுகையிட்டு வரும் நிலையில், இணையதள வர்த்தகத்திலும் மிகப்பெரும் கொள்ளை லாபம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் `முகநூல்’ என தமிழகத்தில் கூறப்படும் ‘பேஸ்புக்’ நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜூக்கர் பெர்க் இந்தியா வந்துள்ளார். புதுதில்லியில் ஐஐடி மாணவர்களிடையே உரையாற்றிய அவர், ‘இணையச் சமநிலை’யை தான் ஆதரிப்பதாக கூறிக் கொண்டார்; அதே நேரத்தில், இலவச இணையச் சேவைபெறுவதற்கான மக்களின் உரிமை குறித்த கோட்பாடுகளுக்கு எதிராகவே அவரதுமுழு உரையும் அமைந்திருந்தது.

புதனன்று தில்லிக்கு வந்த மார்க் ஜூக்கர் பெர்க், ஐஐடி வளாகத்தில் சுமார் 1000 மாணவர்கள், பேராசிரியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசினார். அதிகாரமட்டத்தை தாண்டி மக்களுடனான சந்திப்பு என்ற முறையில், இந்தியாவில் மார்க் பங்கேற்றுள்ள முதல் நிகழ்ச்சி இது. அவர் பேசுகையில், தனது பேஸ்புக் நிறுவனம் இணையச்சமநிலை என்ற கோட்பாட்டிற்கு இசைவு தெரிவிப்பதாக கூறினார். ஆனால் அதே நேரத்தில், தனது நிறுவனத்தின் சார்பில் வாடிக்கையாளர்களுக்கு ‘ஜீரோ கட்டணம்’ (அதாவது இலவசம் என்ற பெயரில்) என்ற முறையில் அளிக்கப்படும் சேவைகள் அவசியம்.  அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டும் என்றும் கூறினார்.

மாணவர்களுடனான கேள்வி – பதில் உரையாடலாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பேஸ்புக் நிறுவனம் இணையச் சமநிலை என்ற கோட்பாட்டை ஆதரிக்கிறதா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மார்க், இணைய சமநிலையை ஆதரிக்கிறோம்; ஒழுங்குமுறை என்ற அடிப்படையில் பல்வேறு நாடுகள் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்றவாறு உருவாக்கியுள்ள விதிகளையும் ஆதரிக்கிறோம் என்று குறிப்பிட்டார். மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர், உலகில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் இலவச இணையச் சேவை அளிப்பது என்பது மிக அதிகமான செலவு பிடிக்கும் ஒன்றாகும் என்று கூறியதுடன், தொலை தொடர்பு நிறுவனங்கள் தங்களது பயனாளர்களுக்கு இணையச் சேவையை கொண்டு சேர்ப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கில் பணம் செலவழிக்கின்றன என்று கூறினார்.

இந்தியாவில் தங்களது நிறுவனம் ‘ப்ரீ பேசிக்ஸ் டாட் ஆர்க்’ என்ற தளத்தின் மூலம் அளிக்கும் கட்டணமில்லா சேவையை அனைவருக்கும் கொண்டு செல்ல முயற்சிக்கிறோம் எனக்குறிப்பிட்ட மார்க் ஜூக்கர் பெர்க், இது இணையச் சம நிலையை உறுதி செய்யும் என்றும் கூறினார். இந்தியாவை பொறுத்த வரை அனைவரும் இணைய தளச்சேவையை பெற வேண்டும்; ஒட்டுமொத்த இந்தியாவும் இணையத்துடன் இணைக்கப்படாமல் உலகத்துடன் இந்தியா இணைய முடியாது என்றும் அவர் கூறினார். தில்லி ஐஐடி நிகழ்ச்சியில் பேஸ்புக் நிறுவனரான மார்க் ஜூக்கர் பெர்க் பங்கேற்றதும் அவர் மேற்கண்ட முறை யில் உரையாற்றியதும் முழுக்கமுழுக்க இந்திய இணையதள சந்தையை கைப்பற்றுவதற் காகவே என்று இந்தியாவில் தீவிரமாக செயல்படும் கட்டற்ற மென்பொருள் இயக்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

பேஸ்புக் நிறுவனம் உலகம் முழுவதும் தனது பயனாளர்களாக இருக்கும் கோடிக் கணக்கான நபர்களின் பெயரில், அவர்களது ஒவ்வொரு பேஸ்புக் கணக்கிற்கும் 12.76 டாலர் அளவிற்கு கட்டணத்தை, விளம்பர தாரர்களிடமிருந்து வசூலித்துக் கொண்டிருக்கிறது என்பது பேஸ்புக் பயனர்களே அறியாத உண்மை; அதாவது தனது பயனர்கள் ஒவ்வொருவரையும் விளம்பரதாரர்களிடம் பேஸ்புக் நிறுவனம் விற்றுவிட்டது என்பதே இதன் பொருள் என கட்டற்ற மென்பொருள் இயக்கம் சுட்டிக்காட்டுகிறது.

இந்நிலையில், 2017ம் ஆண்டில் ஒவ்வொரு பயனருக்குமான கட்டணத் தொகையை 17.5 டாலராக நிர்ணயம் செய்வதற்கு மார்க் ஜூக்கர் பெர்க் திட்டமிட்டுள்ளார். மேலும், அமெரிக்கா உள்ளிட்ட வளர்ச்சியடைந்த நாடுகளில் பேஸ்புக் நிறுவனம் அதன் உச்சகட்ட பயனர்களை பெற்றுவிட்டது; இனிமேல் பெறுவதற்கு அங்குபயனர்கள் இல்லை. எனவே, புதிய பயனர்களை தேடி பேஸ்புக் நிறுவனம் புறப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட பெரும் சந்தையாக இந்தியாவையும், ஆப்பிரிக்க நாடுகளையும் அது குறிவைத்திருக்கிறது. அதனால் தான் ஒட்டுமொத்த இந்தியாவும், தனது தளத்துடன் இணைய வேண்டும் என்று ஜூக்கர் பெர்க் கூறுகிறார் என்றும் கட்டற்ற மென்பொருள் இயக்கம் சுட்டிக்காட்டுகிறது. மேலும், இந்தியாவில் பேஸ்புக் மட்டுமின்றி இன்டர் நெட்டாட் ஆர்க் என்ற தளத்தின் மூலம் இலவச சேவை என்ற பெயரில் பேஸ்புக், வாட்ஸ் அப், விக்கிபீடியா உள்ளிட்ட 4 தளங்களை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிப்பு செய்தது. இதில் ஒருமுக்கிய சூட்சமம் அடங்கியுள்ளது. இலவச சேவை என்ற பெயரில் மேற்கண்ட 4 தளங்களை மட்டுமே ஒரு நபர் பார்க்க முடியும்; இதைத் தவிர வேறு எந்த தளத்தையும் பார்க்க முடியாது என்பதே உண்மை. இதை பேஸ்புக் நிறுவனம் இலவச சேவை என்றும், அதை அனைவருக்கும் கொண்டு செல்லப்போவதாகவும் கூறுகிறது. இதன்மூலம் எந்தவொரு இணையதள பயனரும், எந்தவொரு தளத்தையும் பார்வையிடுவதற்கு உள்ள உரிமையை பேஸ்புக் நிறுவனம் பறிக்கிறது. இதுகுறித்து பிரச்சனை எழுப்பப்பட்டதால் அந்தத் தளத்தின் பெயரை தற்போது ப்ரீபேசிக்ஸ் டாட் ஆர்க் என்று மாற்றியுள்ளது.அதுமட்டுமல்ல, இந்த சேவைகள் அனைத்தையும் இந்தியாவில் ஏற்கெனவே மத்திய அரசின் மகத்தான பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நாடு முழுவதும் உருவாக்கி வைத்திருக்கும் ஆப்டிக்கல் பைபர் நெட்வொர்க் எனப்படும் கண்ணாடி இழை நெட்வொர்க் மூலமாகவே பேஸ்புக் நிறுவனம் கொண்டு செல்லப்போகிறது. அதாவது பொதுத்துறை நிறுவனம் போட்டுவைத்துள்ள பாதையை இலவசமாக பயன்படுத்தி பேஸ்புக் நிறுவனம் மிகப் பெரும்கொள்ளை லாபம் அடிக்கப்போகிறது. இதற்காகவே, பிரதமர் நரேந்திரமோடியின் ஆதரவுடன் மார்க் ஜூக்கர்பெர்க் இந்தியா வந்துள்ளார் என கட்டற்ற மென்பொருள் இயக்கத்தினர் குற்றம்சாட்டினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.