நாகர்கோவில்,அக்.28-

தமிழக மின்வாரியத்தில் பணிபுரியும் அனைத்து ஒப்பந்தத் தொழிலாளர்களையும் அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்யக்கோரி மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் பார்வதிபுரம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு புதனன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக மின்வாரியத்தில் பணிபுரியும் அனைத்து ஒப்பந்தத் தொழிலாளர்களையும் அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்யவும், நிரந்தர தொழிலாளர்களுக்கு வழங்குவது போன்று போனஸ், கருணைத்தொகை ஆகியவற்றை ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் வழங்கவும் தமிழக அரசையும், மின்வாரியத்தையும் வலியுறுத்தி தமிழக முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உள்ள மின்வாரிய அலுவலகங்களின் முன்பு தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் புதனன்று மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதனையொட்டி நாகர்கோவில் பார்வதிபுரம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நூற்றுக்கணக்கான மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு துணைத்தலைவர் இர்வின்தாஸ், சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.தங்கமோகன் ஆகியோர் தலைமை தாங்கினர். கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் கே.பி.பெருமாள், சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் லட்சுமணன், டிஒய்எப்ஐ மாவட்டச் செயலாளர் ரெஜீஸ்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னாள் எம்எல்ஏ ஆர்.லீமாறோஸ் மறியல் போராட்டத்தை துவக்கிவைத்து பேசினார். இதனையடுத்து நூற்றுக்கணக்கான மின் ஒப்பந்தத் தொழிலாளர்கள் கோஷமிட்டு கொண்டு மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மறியல் செய்தனர்.

காவல்துறையினர் போராட்டக்குழுவினரை கைது செய்தனர். இதில் 235 மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி நெல்லையில் பாளை. மகாராஜநகர் மின்வாரிய அலுவலகம் அருகில் நடைபெற்ற போராட்டத்திற்கு சங்க திட்ட தலைவர் எஸ்.பூலுடையார் தலைமை தாங்கினார், சி.ஐ.டி.யு மாநில துணை பொது செயலாளர் ஆர்.கருமலையான் போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன்,மின் ஊழியர் மத்தியமைப்பு மண்டலச் செயலாளர் எஸ்.வண்ணமுத்து, திட்ட செயலாளர் எம்.பீர்முகம்மது ஷா, திட்டப் பொருளாளர் கந்தசாமி, மாவட்ட இணைச் செயலாளர் எஸ்.வெங்கட்ராமன், திட்ட துணைத் தலைவர் எஸ்.முத்துகுமாரசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் உட்பட ஏராளமானோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட 438 பேர்களை காவல்துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடிதூத்துக்குடியில் தமிழ்நாடு மின் ஊழியா மத்திய அமைப்பு (சஐடியு) தூத்துக்குடி கிளை சார்பில் எட்டயபுரம் ரோட்டில் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மறியல் நடைபெற்றது. போராட்டத்திற்கு திட்டத் தலைவர் ரவிதாகூர் தலைமைவகித்தார். சிஐடியு மாவட்டச்செயலாளர் வை.பாலசுப்பிரமணியன் போராட்டத்தை துவக்கி வைத்தார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தி.குமாரவேல் விளக்கவுரை ஆற்றினார். இதில் திரளான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.