ஹர்திக் பட்டேல் மீதான தேசத் துரோக வழக்கை ரத்து செய்ய முடியாது: குஜராத் உயர்நீதிமன்றம்

அகமதாபாத், அக்.27

ஹர்திக் பட்டேல் மீதான தேசத் துரோக வழக்கை ரத்து செய்ய குஜராத் உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. குஜராத் மாநிலத்தில் பட்டேல் சமூகத்தினரை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக் கோரி போராட்டம் நடத்தி வருபவர்,  ஹர்திக் பட்டேல். மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வரும் இவர் கடந்த 3-ந் தேதி சூரத் நகரில் பட்டேல் சமூகத்தினருக்காக உயிரைத் தியாகம் செய்யத் தயார் என்று கூறிய இளைஞர் ஒருவரை நேரில் சந்தித்தார். பின்னர் அவரிடம், பட்டேல் சமூகத்தினர் ஒரு போதும் தற்கொலை செய்து கொள்ள மாட்டார்கள். உங்களுக்கு தைரியம் இருந்தால் 2 போலீஸ்காரர்களை சுட்டுக் கொல்லுங்கள் என்று வெறித்தனமாக கூறினார். இதைத் தொடர்ந்து சூரத் போலீசார், வன்முறையைத் தூண்டிவிடும் வகையில் பேசியதாக ஹர்திக் பட்டேல் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்தனர்.

ஹர்திக் பட்டேல் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டதை எதிர்த்து, அவரது தந்தை பாரத் பட்டேல் குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜே.பி. பர்டிவாலா முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ‘தேசத் துரோக வழக்கின் முதற்கட்ட விசாரணையில், ஹர்திக் பட்டேல் போலீசாரை கொல்வதை தூண்டிவிடும் வகையில் பேசியதற்கான முகாந்திரம் இருப்பதாகவே’ நீதிமன்றம் கருதுகிறது. எனவே இந்த வழக்கில் 124(ஏ) பிரிவை (தேசத் துரோகம்) ரத்து செய்ய முடியாது. சமூகத்தில் வன்முறை மற்றும் அமைதியை சீர்குலைக்கும் விதமாக ஒருவரைத் தூண்டிவிடுவது தேசத்து ரோகம் தான். இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. விசாரணை இறுதியில் இதுபற்றி தெளிவாகத் தெரியவரும்‘ என்று தெரிவித்தார்.

இரண்டு போலீசார் இடைநீக்கம்

இதனிடையே, தேசத்துரோக வழக்கில் கைதுசெய்யப்பட்டு போலீஸ் காவலில் உள்ள ஹர்திக் படேலுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்ட நகர குற்றவியல் பிரிவு போலீசார் இருவர் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்யும் குஜராத் மாநிலத்தில் பட்டேல் சமூகத்தினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மிகவும் பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி 22 வயதான ஹர்திக் பட்டேல் போராட்டம் நடத்தி வருகிறார்.  இதனால் கடந்த 23-ம் தேதி இவரை காவல்துறை அதிகாரிகள் சூரத் நகரில் கைது செய்தனர். இவர் மீது அரசுக்கு எதிராக கலவரம் செய்தல், தேச துரோக வழக்கு பதிவு செய்தனர். பின்னர் இவர் சூரத் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது இவரை 14 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து விசாரணைக்கு ஹர்திக் பட்டேல் சூரத் நகர் காவல்துறையின் குற்றப்பரிவு அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் ஒரு அறையில் இருந்தபோது, மகேந்திர சிங் ஜவன்சிங் என்ற காவலர் ஹர்திக் பட்டேல் அருகில் நிற்க, ஏட்டு அருண்தாலே இருவரையும் புகைப்படம் எடுத்து உள்ளார். மகேந்திரசிங் சாதாரண உடையில் இருந்தார். பின்னர் ஹர்திக் பட்டேலுடன் மகேந்திரசிங் இருக்கும் படம் “வாட்ஸ் அப்”போன்ற சமூக தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கைதான குற்றவாளியுடன் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை. ஆனால் கைதானவருடன் காவலர் ஒருவர் புகைப்படம் எடுத்து “வாட்ஸ் அப்”பில் வெளியிட்ட விவகாரம் குறித்து முதல் கட்ட விசாரணையில் இருவரும் குற்றவாளிகள் என்பது தெரியவந்தது. இதனால் காவலர் மகேந்திரசிங், ஏட்டு அருண்தாலே இருவரும் தற்காலித பணி நீக்கம் செய்யப்பட்டதாக துணை கமிஷனர் தீபன் பத்ரன் தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: