மாட்டிறைச்சி தேடி ரெய்டு

புதுதில்லி, அக். 27 –

மாட்டிறைச்சி உணவு பரிமாறப்படுவதாக வந்த தொலைபேசி புகாரின் பேரில், தில்லி போலீசார், கேரள அரசு இல்லத்திற்குள் புகுந்து சோதனை நடத்திய சம்பவம், நாடு முழுவதும் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. தில்லி காவல்துறை, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால், பா.ஜ.க.வினரின் தூண்டுதல் பேரில், திட்டமிட்ட வகையிலேயே, இச்சோதனை நடத்தப்பட்டு உள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

‘இந்து சேனா’ மிரட்டல்

திங்களன்று மாலை 4 மணியளவில் தில்லி காவல்துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது.  அதில் பேசிய நபர், தன்னை இந்து சேனாவைச் சேர்ந்த விஷ்ணு குப்தா என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, பின்னர் தில்லியில் உள்ள கேரள அரசின் விருந்தினர் மாளிகையான கேரள இல்லத்தில் பசு மாட்டிறைச்சி பரிமாறப்படுவதாகக் கூறியுள்ளார். அதைத் தடுக்காவிட்டால், கடும் விளைவுகள் ஏற்படும் என்றும் போலீசாருக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, கேரள அரசு இல்லத்திற்குள் புகுந்த காவல்துறை, அங்கு மாட்டிறைச்சி உணவு பரிமாறப்படுகிறதா என்று சோதனை நடத்தியுள்ளனர்.

ஆனால், தொலைபேசியில் தொடர்பு கொண்ட ‘இந்து சேனா’  பேர்வழி சொன்னபடி,  மாட்டிறைச்சி உணவு எதுவும் கேரள இல்லத்தில் இல்லை. இங்குள்ள கேண்டீன் மெனுவை வாங்கிப் பார்த்த போலீசார், அதில் ‘பீப்’ இடம் பெற்றிருப்பது பற்றி விசாரித்த போது, எருமை இறைச்சியையே ‘பீப்’ என்று குறிப்பிட்டு இருப்பதாகவும், பசுமாட்டு இறைச்சி பரிமாறப்படுவதில்லை என்றும் கேரள இல்ல அதிகாரிகள் பதில் அளித்துள்ளனர். எனினும், கேரள இல்லம் முன்பாக மிக நீண்டநேரமாக தில்லி போலீசார் முகாமிட்டுள்ளனர்.

நாடு முழுவதும் கண்டனம்

இந்நிலையில், கேரள அரசு இல்லத்திற்குள், தில்லி போலீசார் புகுந்து சோதனை நடத்திய சம்பவம் செவ்வாயன்று தெரியவந்த நிலையில், அதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. தில்லி காவல்துறையானது, மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருப்பதால், பாஜகவினரின் தூண்டுதல் மற்றும் அவர்களின் திட்டமிட்ட ஏற்பாட்டிலேயே கேரள இல்லத்தில் மாட்டிறைச்சி சோதனை நடத்தப்பட்டு உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் முன்னுக்கு வந்துள்ளன.

உம்மன்சாண்டி கண்டனம்

“கேரள இல்லம் என்பது கேரள மாநில முதல்வர், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் தில்லி வந்தால் தங்குவதற்கான அதிகாரப்பூர்வ இடம்; இந்நிலையில், கேரள இல்லம் தொடர்பாக புகார்வந்தால் அது குறித்து போலீசார் முதலில் விசாரணை மேற்கொண்டிருக்க வேண்டும்; உள் துறை அமைச்சகத்திடம் தகவல்களைப் பெற்ற பின்னரே சோதனை நடவடிக்கையை மேற்கொண்டிருக்க வேண்டும்“ என்று கேரள மாநில முதல்வர் உம்மன் சாண்டி, கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். மேலும், கேரள பவன்ஒன்றும் தனியார் ஹோட்டல் அல்ல; கேரள அரசு நிறுவனத்திற்குள் தில்லி போலீசார் நுழைந்து நடந்து கொண்ட விதம் கண்டனத்திற்கு உரியது; இதனை நாங்கள் வெறுமனே விடமாட்டோம்; தில்லி காவல்துறை, உள்துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளதால், இதுபற்றி மத்திய அரசிடம் பிரச்சனை கிளப்புவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

தில்லி போலீசில் புகார்

கேரள இல்லத்தில் எருமை இறைச்சிதான் பரிமாறப்படுகிறது; அதை பசுமாட்டிறைச்சி என்று தவறுதலாக கூறுவதாகவும், அதேநேரத்தில் எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் கேரள இல்லத்திற்குள் சிலர் நுழைந்தது பற்றி தில்லி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளதாகவும் கேரள மாநில தலைமைச் செயலாளர் ஜி.ஜி.தாம்சன் தெரிவித்துள்ளார்.

போலீஸ் மறுப்பு

இதனிடையே கேரள இல்லத்தில் சோதனை நடக்கவே இல்லை என்று தில்லி காவல்துறை ஆணையாளர் பி.எஸ்.பஸ்சி விளக்கம் அளித்துள்ளார். கேரள இல்லத்திற்குச் சென்ற போலீசார், மாட்டிறைச்சி பரிமாறப்படுகிறதா என்று விசாரித்துவிட்டும், இந்து சேனாவின் மிரட்டல் உள்ளதால், உங்களின் பாதுகாப்பை பலப்படுத்திக் கொள்ளுங்கள் என்றும் அறிவுறுத்தி மட்டுமே வந்ததாக மேலும் அவர் கூறியுள்ளார்.

மம்தா பானர்ஜி, கெஜ்ரிவால் கண்டனம்

கேரள அரசு இல்லத்தில் போலீசார் நடத்திய சோதனைக்கு, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும்கண்டனம் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் சகிப்புத்தன்மை அற்றது என்பதுடன், மக்களின் அடிப்படை உரிமையை பறிப்பதற்கான- விவேகமற்ற மற்றும் ஆரோக்கியமற்ற முயற்சி என்று அவர் கூறியுள்ளார். தில்லி போலீசார் கேரள அரசு இல்லத்திற்குள் நுழைய வேண்டிய தேவையே கிடையாது; மேலும், போலீசார் நினைத்த போதெல்லாம் சென்று சோதனை நடத்த அது தனியார் ஓட்டல் கிடையாது; இது அடிப்படை கட்டமைப்பின் மீதானதாக்குதல் ஆகும்; தில்லி காவல்துறை பாரதீய ஜனதாமற்றும் சிவசேனா போன்றே நடந்து கொள்கிறது என்று தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சாடியுள்ளார். தில்லி அரசு பவனில், மோடிஜிக்கும் – பாரதீய ஜனதாவிற்கும் பிடிக்காத உணவை நான் சாப்பிட்டால், முதல்வரான என்னையும் கூட போலீசார் கைது செய்து விடுவார்களா? என்று கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

எம்.பி.க்கள் தர்ணா

கேரள அரசு இல்லத்தில், காவல்துறை நுழைந்ததைக் கண்டித்து, தில்லியில் கேரளத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் தர்ணா நடத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், மூத்ததலைவருமான பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற இந்த தர்ணாவில், மீண்டும் கேரள அரசு இல்லத்தில் மாட்டிறைச்சி உணவு பரிமாறப்பட வேண்டும்; கேரளஅரசு அமைப்பிற்குள் நுழைந்து சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுமுழக்கங்கள் எழுப்பப்பட்டன.  கேரள அரசு இல்ல கேண்டீன் மெனுவில், மீண்டும் மாட்டிறைச்சி சேர்க்க வேண்டும் என சிபிஎம் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.சம்பத் வலியுறுத்தினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.