பிரதமர் நரேந்திரமோடி ஒவ்வொரு மாதமும் வானொலியில் ‘மனதில் இருந்து’ என்ற தலைப்பில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்த மாதம் அவர் ஆற்றிய உரையில் ‘பல சாதி மத வேற்றுமைதான் இந்தியாவின் அழகு, ஒற்றுமை மந்திரத்தை முன்னெடுத்துச் செல்வோம்’ என்று கூறியுள்ளார். பிரதமர் பேசுவதைப் பார்த்தால் இவர் இப்போது தான் வேற்றுக் கிரகத்திலிருந்து இந்தியாவுக்கு வந்து இறங்கியவர் போல தோன்றுகிறது. உண்மையில் அவரது உரைக்கு ‘மனதில் இருந்து’ என்பதை விட ‘மனதில் உள்ளதை மறைத்து’ என்றுதான் தலைப்பிட வேண்டும். இந்தியாவில் பல்வேறு மத நம்பிக்கைகள் கொண்ட, பல்வேறு மொழிகளைப் பேசுகிற, பல்வேறு பண்பாடுகளைக் கொண்ட, பல்வேறு இன மக்கள் வாழ்கின்றனர் என்பது உண்மைதான்.

இதை அழித்து ஒற்றைப் பண்பாட்டையும், ஒற்றை மதத்தையும், ஒற்றைமொழியையும் திணிக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ், பாஜக பரிவாரம் துடிக்கிறது. மத்திய ஆட்சிப் பொறுப்பில் பாஜக இருப்பதைப் பயன்படுத்தி தங்களது ஆக்கிரமிப்புகளை வெகுவேகமாகச் செய்து வருகின்றனர். மதச்சார்பின்மையை ஆதரித்த, மூட நம்பிக்கையை எதிர்த்த மூன்று அறிஞர்கள் மோடி ஆட்சியில் அடுத்தடுத்து கொல்லப்பட்டுள்ளனர். எழுத்தாளர் கல்புர்கி கொல்லப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு எழுத்தாளர்கள் கொந்தளித்து எழுந்தனர். பலர் தாங்கள் பெற்ற விருதுகளை திருப்பித்தந்தனர்.

சாகித்ய அகாடமி விருதுபெற்ற தமிழக எழுத்தாளர்கள் பெரும்பாலோர் ஒன்றிணைந்து கூட்டறிக்கை வெளியிட்டு சகிப்புத்தன்மையின்மைக்கு எதிராக கண்டனம் முழங்கினர். ஆனால் மத்திய அமைச்சர் ஒருவர் விருதுகளைதிருப்பிதருவதற்கு பதிலாக எழுதுவதை நிறுத்துங்கள் என்று கட்டளை போடுகிறார். அவரை எதிர்த்து மோடி ஒரு வார்த்தை பேசியது உண்டா? ராமனுக்கு பிறக்காதவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் என்கிறார் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர். உ.பி.மாநிலம் தாத்ரியில் மாட்டி றைச்சி வைத்திருந்ததாக கூறி இஸ்லாமியர் ஒருவர் அடித்துக் கொல்லப்படுகிறார். காஷ்மீர் மாநில சட்டப்பேரவை வளாகத்திலேயே சுயேச்சை எம்எல்ஏ ஒருவர் இதே பிரச்சனைக்காக தாக்கப்படுகிறார்.

ஹரியானாவில் இரண்டு தலித் குழந்தைகள் உயிரோடு எரித்துக் கொல்லப்படுகின்றன. ஆனால் இவை துரதிர்ஷ்டவசமானவை என்ற ஒற்றை வார்த்தையோடு முடித்துக் கொள்கிறார் மோடி. சிறு சம்பவங்கள் என சிறுமைப்படுத்துகிறார் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத். ஆனால் பிரதமர் மோடி வானொலியில் வேற்றுமை தான் அழகு என முழங்குகிறார். இது வெளிவேஷமன்றி வேறு என்ன? தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளையும் மத்திய ஆட்சி மொழிகளாக மாற்றுவதற்குப் பதிலாக வழக்கொழிந்த சமஸ்கிருத மொழியையும், இந்தி மொழியையும் திணிக்க முயல்வது வேற்றுமையில் ஒற்றுமை காணும் அழகா? மோடி தனது உரையில் டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கரின் பங்களிப்பையும் புகழ்ந்துரைத்துள்ளார். ஆனால் இவரது கட்சி ஆளும் குஜராத் மாநிலத்தில் அம்பேத்கர் குறித்த பாடம் நீக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. ஆனால் மோடி எதுவும் அறியாதவர் போல நாட்டு மக்களிடம் பேசிக்கொண்டிருக்கிறார்.  வழக்கம் போல ஊடகங்கள் மோடி ஒற்றுமையைப் பற்றி பேசிவிட்டார் என புல்லரிப்பாக எழுதியுள்ளன. ஆனால் நடைமுறையில் இவர் சார்ந்த பரிவாரம் ஒற்றுமையை சிதைத்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை.

Leave a Reply

You must be logged in to post a comment.