100-க்கும் மேற்பட்டோர் பலி வடமாநிலங்களிலும் அதிர்வு

இஸ்லாமாபாத், அக்.26-

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் திங்களன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. நூற்றுக்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி பலியாகி உள்ளனர். பாகிஸ்தானில் மட்டும் இதுவரை 55 பேர் இடிபாடுகளில் சிக்கி பலியாகியுள்ளனர். குறிப்பாக பெஷாவர் நகரில் 18 பேரும், சவாத் பகுதியில் 8 பேரும், பஜவுர் பழங்குடியினர் பகுதியில் 4 பேரும் பலியாகி உள்ளனர். சிட்ரல்பகுதியில் 13 பேர் பலியாகி உள்ளனர்.மேலும் மலைப்பகுதிகளில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு உள்ளது. இங்கு பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதேபோல ஆப்கானிஸ்தானில் 43 பேர் பலியாகி உள்ளனர். இந்தபலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. பூகம்பத்திலிருந்து தப்பிக்கும் முயற்சியில் ஆப்கன் நகரமான தலுக்கானில் 12 பள்ளிச் சிறுமிகள் பலியாகியுள்ளனர்.

மேலும் 30 சிறுமிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் காபூல் நகரத்தில் இருந்து 256 கிலோமீட்டர் தொலைவில் இந்துகுஷ் மலைத்தொடர் உள்ளது. இங்கு திங்களன்று பிற்பகல் 2.45 மணிக்கு, 196 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், ரிக்டர் அளவுகோலில் இது 7.7 ஆக பதிவாகி இருப்பதாகவும், அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் கட்டடங்கள் குலுங்கின. பொதுமக்கள் கட்டடங்களில் இருந்து வெளியேறி சாலைகளுக்கு ஒடி வந்தனர். காபூல் உள்ளிட்ட ஆப்கான் நகரங்களில் மின்சாரமும் தொலைபேசி சேவையும் முற்றாக துண்டிக்கப்பட்டது. பாகிஸ்தானின் லாகூர், இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, பெஷாவர் உள்ளிட்ட நகரங்களிலும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தியாவிலும் தில்லி, ஜம்மு- காஷ்மீர், இமாச்சலப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய வடமாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டது. தில்லியில் சில நிமிடங்கள் வரை நீடித்த நில அதிர்வால் மக்கள் பீதியடைந்தனர். நிலம் அதிர்ந்தவுடன் அடுக்குமாடி கட்டடங்களில் இருந்தவர்களும், அலுவலகங்களில் பணியாற்றிக் கொண்டு இருந்தவர்களும் அலறியடித்துக் கொண்டு தெருக்களுக்கு ஓடி வந்தனர். தில்லி மெட்ரோ ரயில் சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டது. நில அதிர்வு ஏற்பட்டவுடன் பொதுமக்கள் தங்களின் உறவினர்களுக்கு போன் செய்து பேசியதால் தொலைத்தொடர்பு சேவை பாதிக்கப்பட்டது. குர்கானில் நில அதிர்வால் கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஸ்ரீநகரில் நிலநடுக்கத்தின்போது, கட்டடங்கள் ஆடியதைப் பார்த்ததாகவும், இது 2005-ம் ஆண்டு ஏற்பட்ட பேரழிவு நிலநடுக்கத்தை நினைவூட்டியதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். இங்குள்ள ஜஹாங்கீர் சவுக்மேம்பாலத்தில் விரிசல்கள் ஏற்பட்டதால் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டது. ஸ்ரீநகருக்கு 55 கி.மீ. தொலைவில் உள்ள சொபோரில் ராணுவ பதுங்குகுழி நொறுங்கியதில் ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார்.காஷ்மீர் ஹன்சா பள்ளத்தாக்கிலிருந்து வெளியிடப்பட்டடுவிட்டர் பதிவில், பனிமலைச் சரிவு ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. பஞ்சாப், உத்தராகண்ட் மற்றும் ராஜஸ்தான் பகுதிகளிலும் நிலநடுக்க அலைகள் உணரப்பட்டுள்ளன.எனினும், இந்தியாவில் நில அதிர்வால் உயிர் சேதம் எதுவும் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய – யுரேசிய கண்டத் தட்டுக்கள் மோதும் இடமாக இமாலயப் பகுதிஉள்ள நிலையில், யுரேசிய கண்டத்தட்டுக்கு அடியே இந்திய துணைக் கண்டத்தட்டு நுழைந்து வருவதே தற்போதைய நிலநடுக்கத்திற்கு காரணம் என்று புவியியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: