சாதனைகளுக்கு ஊனம் தடையில்லை என்பதை நிரூபித்துக் காட்டிய தோழர் சதன்குப்தா கடந்த மாதம் கொல்கத்தாவில் மரணமடைந்தார். ஊனமுற்றோர் உரிமைகளுக்கான அகில இந்திய மேடையின் நிர்வாகக்குழு உறுப்பினர் மேற்குவங்கத்தை சேர்ந்த பார்வையற்ற தோழர் அனிர்பன் முகர்ஜி, உரிமைக்குரல் இதழுக்காக எழுதிய கட்டுரையின் மொழியாக்கம். இந்திய நாடாளுமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்ட பார்வையற்ற முதல் எம்.பி..! மேற்கு வங்க அரசின் தலைமை வழக்குரைஞர்… பார்வையற்றோர் கூட்ட மைப்பை (சூகுக்ஷ) உருவாக்கியவர்களில் முதன்மையானவர்.. மேற்கு வங்கத்தில் மாற்றுத்திறனாளி இயக்கங்களுக்கு உந்துசக்தியாகத் திகழ்ந்தவர். இடதுசாரி இயக்கத்தின் முன்னோடி, மாணவர் சங்கத்தலைவர், தொழிற்சங்கத் தலைவர், என அடுக்கடுக்கான பொறுப்புகளுக்குச் சொந்தக்காரர் சதன்குப்தா.. தன்னுடைய இறுதி மூச்சு வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராகச் செயல்பட்டவர்.

கடந்த செப்.19 அன்று 98-வது வயதில் கொல்கத்தாவில் தன்னுடைய இறுதி மூச்சை நிறுத்திக்கொண்டார். தற்போதைய வங்கதேச தலைநகராக விளங்கும் டாக்காவில் 1917 நவம்பர் 7-இல் அதாவது ரஷ்ய புரட்சி வெற்றி பெற்ற தினத்தன்று பிறந்தவர் சதன்குப்தா. அவருடைய தந்தை ஜோகேஷ் சந்திர குப்தா பாரிஸ்டர் பட்டம் பெற்றவர். கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் சிறந்த வழக்குரைஞராகவும், காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவராகவும் விளங்கியவர். ஒன்றரை வயதில் பெரியம்மை நோயால் பாதிக்கப்பட்டு முழுமையாக பார்வையை இழந்த குழந்தை சதன்குப்தாவை பரிவோடு பாதுகாத்து வளர்த்தார் தாய் உஷா குப்தா

நாடாளுமன்ற-சட்டமன்றங்களில்

கொல்கத்தா பார்வையற்றோர் பள்ளியில் ஆரம்பக் கல்வி. பள்ளி இறுதித் தேர்வில் பத்து முதன்மையான மாணவர்களில் ஒருவராகத் தேர்ச்சி. கொல்கத்தா மாநிலக் கல்லூரியில் பொருளியல் படிப்பில் முதுகலைப் பட்டம். கொல்கத்தா பல்கலைக் கழகத்தில் சட்டபடிப்பு. பின்னர் பாரிஸ்ட்டர்பட்டம் பெற்று 1942 செப்.14 முதல் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் பணி. அவருடைய சாதனைப் பட்டியல் மிகநீண்டது. 1944-இல் மஞ்சரி தாஸ் குப்தா என்ற வழக்கறிஞரை திருமணம் செய்தார். மஞ்சரி தாசும் கொல்கத்தா உயர்நீதி மன்றத்தில் சிறந்த வழக்குரைஞராகத் திகழ்ந்தார். கல்லூரி படிப்பின்போது இடதுசாரி மாணவர் இயக்கத்தோடு தன்னை இணைத்துக்கொண்ட சதன்குப்தா, அப்போதைய வங்க மாகாண மாணவர் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார். நாடு முழுவதும் ஆங்கிலேயரின் அடக்குமுறை கடுமையாக இருந்த 1939ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படை உறுப்பினர் ஆனார். ஆங்கிலேயரை எதிர்த்த போராட்டத்திலும் கட்சிப் பணிகளிலும் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார் சதன்குப்தா. நாடு குடியரசு ஆனதும் முதலாவது பொதுத் தேர்தல் வந்தது. அதில் கொல்கத்தா  தென் கிழக்கு நாடாளுமன்ற தொகுதியில் ஜனசங்க ஸ்தாபகர் ஷியாமபிரசாத் முகர்ஜியை எதிர்த்து சதன்குப்தாவை வேட்பாளராக நிறுத்தியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. அத்தேர்தலில் வெற்றிவாய்ப்பை இழந்தபோதும், ஷியாமபிரசாத் முகர்ஜியின் மறைவை அடுத்து நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டார் சதன் குப்தா. இம்முறை காங்கிரஸ் வேட்பாளரும் மிகப்பெரிய சட்ட நிபுணராகவும் திகழ்ந்த ராதா பினோத் பால் என்பவரை தோற்கடித்து வெற்றி பெற்றார் சதன்குப்தா. அதன் மூலம் இந்திய குடியரசின் நாடாளுமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் பார்வையற்ற உறுப்பினர் என்ற பெருமையோடு நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தார். 1957-இல் மீண்டும் வெற்றிபெற்று 1962 ஆம் ஆண்டு வரை சிறந்த நாடாளுமன்ற வாதியாக ஜொலித்தார் சதன்குப்தா.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்ட போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோடு தன்னை உறுதியாக இணைத்துக் கொண்டார் சதன் குப்தா. 1969 ஆம் ஆண்டு மேற்கு வங்க சட்டமன்றத்துக்கு நடந்த தேர்தலில் கொல்கத்தாவில் உள்ளகாளிகட் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக சதன் குப்தாவை நிறுத்தியது மார்க்சிஸ்ட் கட்சி. அதில் வெற்றி பெற்று மேற்குவங்க சட்டமன்றத்துக்குள் நுழைந்த முதல்பார்வையற்ற உறுப்பினர் என்ற பெருமையையும் பெற்றார். மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசு 13 மாதங்களில் அந்த சட்டமன்றத்தை எதேச் சதிகாரமாக கலைத்தது. அதுவரை சட்டமன்ற உறுப்பினராகவும் திறம்பட செயலாற்றினார் சதன் குப்தா.

தொழிலாளர்களின் தோழன்

ஐடிசி, இன்சூரன்ஸ் உள்ளிட்ட பல தொழிற்சங்கங்களின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட சதன்குப்தா தொழிலாளிகளின் அன்புக்குரிய தோழனாகவும் விளங்கினார். நாடாளுமன்றப் பணியோடு, அவருடைய வாதத்திறமையின் காரணமாக பலமாநிலங்களில் நடைபெற்ற முக்கிய வழக்குகளில் ஆஜராகி வாதாட வேண்டிய கட்டாயத்துக்குள்ளானார் சதன்குப்தா. இதனால், அவருடைய வழக்குரைஞர் பணி கொல்கத்தா உயர்நீதிமன்றத்தோடு மட்டுமல்லாமல், ஸ்ரீநகர், ஜோத்பூர், ஜெய்பூர், பாட்னா, அலகாபாத், கட்டாக், ஜாம்ஷெட்பூர், ஜபல்பூர் நகர்களுக்கும், அப்போதைய கிழக்கு பாகிஸ்தானின் சிட்ட காங் நகருக்கும் விரிவடைந்தன. ஒருவழக்குரைஞர் என்ற முறையில் அவருடைய பணி மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்காக சதன் குப்தா வாதாடாத வழக்குகளே இல்லை என்று சொல்லலாம். அதோடு மட்டுமல்லாமல், அரசியல் மற்றும் மனித உரிமைகள் மீது தாக்குதல் தொடுக்கும் வகையில் நாடு முழுவதும் பல நீதிமன்றங்களில் வந்த பல வழக்குகளுக்கு எதிராகவும் அவர் ஆஜராகி வாதாடினார். கிழக்கு இரயில்வேயில் மின்மயமாக்கும் ஒப்பந்தப் பணியில் ஈடுபட்டிருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளிகளை எந்த அறிவிப்பும் இன்றி நிர்வாகம் பணிநீக்கம் செய்ததை எதிர்த்து பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக நீதி மன்றத்தில் வாதாடி வெற்றி பெற்றார்.மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இரயில்வே வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளிகளை நிர்வாகம் பழிவாங்கியதை எதிர்த்து வாதிட்டு வெற்றிபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

காந்திஜியின் வாழ்த்து

இந்திய பாதுகாப்புச் சட்டம், உள்நாட்டுப் பாதுகாப்பு பராமரிப்புச் சட்டம் ஆகிய கொடூரச் சட்டங்களை பயன்படுத்தி விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை எந்த விசாரணையும் இன்றி சிறையில் தள்ளிக்கொண்டிருந்தது அன்றைய ஆங்கிலேயர் ஆட்சி. இப்படி பாதிக்கப் பட்ட ஷிப்நாத் பானர்ஜி என்ற விடுதலை வீரருக்கு ஆதரவாக கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வாதாடி வெற்றி பெற்றார்சதன் குப்தா. பின்னாளில் இது ஒரு பிரசித்திபெற்ற வழக்காக கருதப்பட்டது. காரணம், சதன் குப்தாவின் திருமணத்தை வாழ்த்தி அவருடைய தந்தை ஜோ கேஷ் சந்திர குப்தாவிற்கு மகாத்மா காந்தி அனுப்பிய கடிதத்தில்.. “ஆங்கிலேயர்களின் கொடுங்கோல் சட்டங்களினால் பாதிக்கப்பட்ட ஷிப்நாத் பானர்ஜிக்கு ஆதரவாக ஒரு பார்வையற்ற இளைஞன் வாதாடினான் என்பதை அறிந்தேன். வழக்கு ஆவணங்களையும் சில மாதங்களுக்கு முன்புதான் பார்த்தேன். அந்த பார்வையற்ற இளம் வழக்கறிஞரின் வாதத் திறமைகளை அறிந்து ஆச்சரியப்பட்டேன். அந்த பார்வையற்ற இளம் வழக்கறிஞர் உங்களுடைய மகன் என்பதை நான் ஒருபோதும் அறிந்திருக்கவில்லை. தற்போது அதற்காக மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தங்கள் மகனுக்கும், அவரை மணமகனாக தேர்வுசெய்த மணமகளுக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவியுங்கள்” என காந்தியடிகள் வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.1977-இல் மேற்கு வங்கத்தில் ஆட்சிக்கு வந்தவுடன் பெரும் வீச்சில் நிலச்சீர் திருத்தத்தை அமல்படுத்த துவங்கியது இடது முன்னணி அரசு. உச்சவரம்புச் சட்டத்தைப் பயன்படுத்தி, பெரும் நிலச் சுவான்தார்களிடம் அளவுக்கு அதிகமாக இருந்த நிலங்களைப் பறித்து நிலமற்ற கிராமப்புற ஏழைகளுக்கு வழங்கும் உன்னதப் பணியை மேற்கொண்டது இடது முன்னணி அரசு. இது இடது முன்னணி அரசுக்குநாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுத்தந்தது. ஆனால், நில உடமையாளர்கள் பலர் அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்தனர். அனுதாபம் தேடி நீதிமன்றங்களில் வழக்குகளைத் தொடுத்தனர். அந்த வழக்குகளை எதிர்கொள்ள கூடுதல் அரசு வழக்குரைஞராக சதன்குப்தாவை இடது முன்னணி அரசு நியமித்தது. சதன் குப்தா இடது முன்னணி அரசின நிலச்சீர்திருத்தச் சட்டத்தை ஆதரித்துவாதாடி நிலச்சுவான்தார்கள் தொடுத்தவழக்குகள் அனைத்தையும் தோற்கடித்தார். சதன் குப்தாவின் திறமையைக் கண்டு அவரை 1986 ஆம் ஆண்டு மேற்கு வங்க அரசின் தலைமை வழக்கறிஞராக நியமித்தது. இதன் மூலம் இப்படிப்பட்ட பதவியை பெற்ற முதல் பார்வையற்றவர் என்ற பெருமையையும் சதன் குப்தா பெற்றார்.

சமூகம் மற்றும் கல்விப் பணி

ஒரு பார்வையற்ற மாற்றுத்திறனாளி என்ற அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்கான இயக்கங்களிலும் ஈடுபட்டு பிரகாசித்தார். தேசிய பார்வையற்றோர் கூட்டமைப்பின் (சூகுக்ஷ) ஸ்தாபகத் தலைவராக அவர் விளங்கினார். சர்வதேச மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் இந்திய பிராந்தியத் தலைவராகவும் அவர் செயல்பட்டார். மாற்றுத்திறனாளிகள் அடங்கிய தூதுக்குழுவோடு சோவியத்யூனியனிலும் அவர் பயணம் மேற்கொண்டுள்ளார். அவருக்கு கல்வி கற்றுக்கொடுத்த கொல்கத்தா பார்வையற்றோர் பள்ளி, கொல்கத்தா காதுகேளாதோர் பள்ளி ஆகியவற்றின் நிர்வாகக்குழுத் தலைவராக பின்னாளில் சதன்குப்தா விளங்கினார். பத்வான் பவன் மாண்டிசோரி பள்ளியின் தலைவராக பல ஆண்டுகள் செயலாற்றினார். அவருடைய மறைவு நம் அனைவருக்கும், நாட்டிற்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் ஈடற்ற பேரிழப்பாகும். அவர் ஒரு சகாப்தம்.

தமிழில்: எஸ். நம்புராஜன்

Leave A Reply

%d bloggers like this: