தில்லி, அக். 25 –

8 வயதில் வழி தவறி பாகிஸ்தான் சென்ற இளம்பெண் கீதா:

இன்று இந்தியா வருகிறார்

கடந்த 15 வருடங்களாக தனது குடும்பத்தையும், நாட்டையும் பிரிந்து பாகிஸ்தானில் வசித்துவந்த இளம்பெண் கீதா, திங்களன்று இந்தியா திரும்புகிறார். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர், இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் சென்ற சம்ஜவுதா ரயிலில், எட்டு வயது சிறுமியாக மீட்கப்பட்டவர் கீதா. வாய் பேச முடியாத, காது கேட்கும் திறனும் அற்ற அச்சிறுமியிடம் இருந்து, அவரது பெற்றோர் குறித்து பாகிஸ்தான் ராணுவத்தினரால் எந்தத் தகவலும் பெற இயலவில்லை. இதனால் அந்நாட்டு போலீசிடம் ஒப்படைக்கப்பட்டார் கீதா. அதன் பின் அங்குள்ள தொண்டு நிறுவனத்தின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார். அண்மையில், கீதா குறித்த தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்தன. அவரின் பெற்றோர் பீகார்மாநிலத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்களிடமிருந்து சேகரித்த புகைப்படங்கள் பாகிஸ்தானிலுள்ள இந்திய தூதரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தியத் தூதர் ராகவனும் அவரது மனைவியும், புகைப்படங்களுடன் கீதாவைச் சந்தித்தனர். அப்போது, புகைப்படங்களில் இருந்த தனது தந்தை, சித்தி உள்ளிட்ட பலரை கீதா அடையாளம் காட்டினார். அதனைத் தொடர்ந்து கீதாவை இந்தியா அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டன. அமைச்சர் சுஷ்மா சுவராஜூம் கீதாவை சந்தித்தார். இந்நிலையில், கீதா திங்க ளன்று இந்தியா திரும்ப உள்ளதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் உறுதி செய்துள்ளார். கீதாவுடன் அவர் தங்கியிருந்த தொண்டு அமைப்பு ஒன்றை சேர்ந்த 5 பேரும் இந்தியா வருகின்றனர். கீதாவிற்கு மரபணு பரிசோதனை நடத்தப்பட்டு, அதன்பின் அவர், பெற்றோருடன் அனுப்பி வைக்கப்படுவார் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.