சிபிஎம் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் உறுதி

திருவாரூர், அக். 25-

மீத்தேன் திட்டத்தை விட அபாயகரமான ஷேல்கேஸ் திட்டத்தை அமல்படுத்த செங்கொடி இயக்கம் அனுமதிக்காது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் உறுதியுடன் குறிப்பிட்டார். திருவாரூர் சட்டமன்ற தொகுதி மக்களின் கோரிக்கை மாநாடு மற்றும் பொதுக்கூட்டம் கொரடாச்சேரி காந்தி மைதானத்தில் சனிக்கிழமையன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு ஜி.ராமகிருஷ்ணன் பேசியதாவது:-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களுக்கான கோரிக்கை வைப்பதோடு மட்டும் நின்று விடுவதில்லை. மாறாக அவை நிறைவேறும் வரை அயராது போராடும் கட்சி. ஒன்றுபட்ட தஞ்சை மண்ணில் ஒடுக்கப்பட்ட மக்களை தலைநிமிரச் செய்ய பல்வேறு போராட்டங்களை நடத்தி அவர்களை மீட்டெடுத்த பெருமை செங்கொடி இயக்கத்திற்கு உண்டு. விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கின்ற இந்தமாவட்டத்தில் விவசாயிகளின் நலனுக்காகவும் விவசாய தொழிலாளர்களின் நலனுக்காகவும் நடத்திய போராட்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிமுன் வைக்கின்ற கோரிக்கைகள் அனைத்துக் கட்சியினருக்கும் அனைத்துத் தரப்பு மக்களுக்கானது.

முற்றுகைப் போராட்டம்

விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் கேட்டு கடந்த 2013ஆம் ஆண்டு ஜனவரி7ம் தேதியன்று தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக முற்றுகைப் போராட்டத்தை நடத்தினோம். விவசாயிகள் சங்கத்தின் சார்பில் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. நமது உறுதிமிக்க போராட்டத்தின் காரணமாக பொதுமக்களும் நம்மோடு இணைந்தார்கள். வலிமைமிக்க போராட்டம் 3 நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. இந்த மூன்று நாட்களும் ஆட்சியர் அலுவலகங்கள் பூட்டிக் கிடந்தன. போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கொடநாட்டில் இருந்தபடியே கோரிக்கைகளை ஏற்று நடவடிக்கை எடுத்தார். இதனால் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த விவசாயிகள் பயனடைந்தார்கள். இது செங்கொடி இயக்கத்தின் சாதனையல்லவா? விவசாயிகள் இயக்கத்தின் மூத்த தலைவர் பி.சீனிவாசராவ் நினைவு தினத்தில் தமிழகம் முழுவதும் 13 இடங்களில் தீண்டாமைக்கு எதிராக களம் இறங்கி போராட்டம் நடத்தினோம். தீண்டாமைக் கொடுமை, பஞ்சமி நிலம் மீட்பு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது. அரசின் அடக்கு முறைகளை தூளாக்கி நடைபெற்ற இப்போராட்டம் 12 இடங்களில் வெற்றிபெற்றது. பல இடங்களில் தலித் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு ஆலயப் பிரவேசம் செய்தனர். அரியலூர் மாவட்டத்தில் மட்டும் பேச்சுவார்த்தையில் உள்ளது.தமிழகத்தில் எந்தக் கட்சியாவது இதுபோன்று மக்கள் பிரச்சனைகளுக்காக தொடர்ந்து போராடுகிறதா? மனசாட்சியோடு கூறமுடியுமா? 2016ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலையொட்டி தற்போதுதான் சில கட்சிகள் மக்களை சந்திக்கவருகிறது. 2006ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் இருந்தது. அப்போது துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின்தான் காவிரிப் படுகையில் மீத்தேன் எரிவாயு எடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். தற்போது மீத்தேன் திட்டத்தை எதிர்த்து வேறு வழியின்றி பேசுகிறார். என்ன நாடகம் இது? தற்போது தமிழக அரசு இத்திட்டத்திற்கு தடை விதித்திருந்தாலும் ஷேல்கேஸ் எனும் அபாயம் நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. மீத்தேன் திட்டத்தை விட அபாயகரமான இத்திட்டத்தை அமல்படுத்த செங்கொடி இயக்கம் அனுமதிக்காது. மக்களையும், விவசாயிகளையும் திரட்டி போராடும்.

மோடி ஆட்சியின் லட்சணம்

பாஜகவின் நரேந்திர மோடி ஆட்சியில் மக்களின் வாழ்க்கையில் என்ன மாற்றம் வந்துவிட்டது. கார்ப்பரேட் கம்பெனி முதலாளிகளுக்கு உதவி செய்வதற்காக அந்நிய முதலீட்டை கொண்டு வருகிறேன் என்ற பெயரில் உலகநாடுகளைச் சுற்றிவருகிறார். சுவிஸ் வங்கி மற்றும் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை கொண்டு வருவோம் என்றார்கள். செய்தார்களா? தவறான பொருளாதார கொள்கையால் அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. ஆன்லைன் வர்த்தகம், முன்பேர வர்த்தகம் என்று மக்களின் வாழ்க்கையை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சூறையாடிக் கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் கூட இந்தியாமுழுவதும் மருந்துக்கடை உரிமையாளர்கள் ஆன்லைன் வர்த்தக முறையில் மருந்துப் பொருட்களை விற்பனை செய்ய அனுமதிக்கக் கூடாது எனக் கூறி மருந்துக்கடைகளை ஒரு நாள் அடைத்து தங்கள் எதிர்ப்பை மத்திய அரசுக்கு தெரிவித்திருக்கிறார்கள். இந்த முறை அமல்படுத்தப்பட்டால் மக்களின் உயிருக்கு பேராபத்து விளையும். இந்த வர்த்தகத்தை நம்பியுள்ள உரிமையாளர்கள், கடைக்காரர்கள், மருந்து விற்பனை பிரதிநிதிகள் வாழ்க்கை பறிபோகும். இதுதான் மோடி ஆட்சியின் லட்சணம். சிறுபான்மை சமூகம் மற்றும் தலித்சமூக மக்கள் கடுமையாக ஒடுக்கப்படுகிறார்கள். கொல்லப்படுகிறார்கள். கருத்துச் சுதந்திரம் பறிபோகிறது. முற்போக்கு எண்ணம் கொண்ட எழுத்தாளர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். இதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தனிச் சட்டம்

சாதி ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்றக்கோரி போராடி வருகின்றோம். இந்த சட்டவரம்பிற்குள் அனைத்து சாதியினரையும் கொண்டுவர வேண்டும். மகாத்மா காந்தி, ராஜாஜி, சி.சுப்பிரமணியம், தோழர்கள் பி.சீனிவாசராவ், பி.ராமமூர்த்தி போன்ற தலைவர்கள் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்கள். சிபிஎம் மூத்த தலைவர் என்.சங்கரய்யா குடும்பமே பல சாதிகளின் சங்கமமாக திகழ்கிறது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெருமை கொள்கிறது.1995 – 1997ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி மோகன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு தனது விசாரணை அறிக்கையில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களின் குழந்தைகளுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு செய்யப்பட வேண்டுமென பரிந்துரை செய்தது. தமிழக மக்கள் சந்தித்து வரும் பல்வேறு இன்னல்களைக் களைவதற்கே மக்கள் நல கூட்டியக்கம் உருவாகியுள்ளது. இதுதொடர்ந்து மக்கள் நலனில் அக்கறை செலுத்தும்; போராடும். 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலையும் எதிர்கொள்ளும் என்றார்.

Leave A Reply

%d bloggers like this: