பலாத்காரம் செய்து, ஆசிட் வீசுவோம் என அச்சுறுத்தல்

பெங்களூரு,அக்.25-

மாட்டிறைச்சி விருந்தில் கலந்து கொண்ட- கன்னட பெண் எழுத்தாளர் சேத்தனா தீர்த்தஹள்ளிக்கு, இந்துத்துவ மதவெறியர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். சேத்தனாவை பலாத்காரம் செய்து, அவரது முகத்தில் ஆசிட்வீசப் போவதாக அவர்கள் கூறியுள்ளனர். முகநூல், மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி வழியாக இந்த மிரட்டல் குறித்து சேத்தனா, உள்ளூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தும், போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததால், சனிக்கிழமையன்று பெங்களூரு மாநகர காவல் துணை ஆணையரைச் சந்தித்து முறையிட்டுள்ளார். பெங்களூருவைச் சேர்ந்த சேத்தனா தீர்த்தஹள்ளி, சினிமா படங்களுக்கும் திரைக்கதை எழுதி வருகிறார். இதுவரை ஐந்திற்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியுள்ள இவர், பெண்ணடிமைத்தனம், வரதட்சணைக் கொடுமை, சாதிய வன்முறைகளை எதிர்த்தும் தொடர்ந்து கட்டுரைகளை எழுதி வருபவர் ஆவார்.

அண்மைக்காலமாக, எழுத்தாளர்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை, தாத்ரியில் மாட்டிறைச்சி உண்டதாக இஸ்லாமிய முதியவர் கொல்லப்பட்ட கொடூரம், கோயிலுக்குள் நுழைந்த தலித் முதியவர் எரிக்கப்பட்ட விவகாரம் ஆகியவற்றை கண்டித்து, தமது முகநூலிலும் பதிவுகளை வெளியிட்டு வந்தார். கடந்த மாதம், மாட்டிறைச்சிக்கான தடையைக் கண்டித்து பெங்களூருவில் நடைபெற்ற மாட்டிறைச்சி விருந்திலும் கலந்துகொண்டு, மாட்டிறைச்சி சாப்பிட்டார். இதனால் ஆத்திரமடைந்த இந்துத்துவ மதவெறியர்கள், சேத்தனாவுக்கு முகநூல், செல்பேசி மற்றும் மின்னஞ்சல் மூலம் கொலைமிரட்டல் விடுத்துள்ளனர்.

சேத்தனாவை பாலியல் பலாத்காரம் செய்து, அவரின் முகத்தில் ஆசிட்வீசப் போவதாக அவர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக, மதுசூதன் கவுடா என்பவர் முகநூல் மூலம் சேத்தனாவுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். “இந்து மதத்தை அவமதித்து மாட்டிறைச்சி சாப்பிட்டதால் கல்புர்கியைப் போல சேத்தனா தீர்த்தஹள்ளியை கொலை செய்வேன்“ என்று அவர் கூறியுள்ளார். இதையடுத்து சேத்தனா, மதுசூதன் கவுடா மீது ஹனுமந்த நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில், சனிக்கிழமையன்று பெங்களூர் மாநகர காவல் துணை ஆணையர் லோகேஷ் குமாரை சந்தித்து புகார் அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சேத்தனா, எழுத்தாளர் கல்புர்கி கொலை வழக்கு விசாரணையிலேயே இன்னும் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், தனக்கு வரும் கொலை மிரட்டலால் தான் மிகுந்த அச்சம் அடைந்திருப்பதாகவும், பாதுகாப்பு இல்லை என்பதாலேயே காவல்துறையில் புகார் அளித்திருப்பதாகவும் தெரிவித்தார். இதனிடையே “எழுத்தாளர் சேத்தனா தீர்த்தஹள்ளிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளவர்கள் குறித்து விசாரணை நடத்த காவல் நிலையத்துக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது போலீசார் விரைந்து செயல்பட்டு குற்றவாளியை கைது செய்வார்கள்” என்று காவல் துணை ஆணையர் லோகேஷ் குமார் கூறியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.