சிவகாசி, அக். 25-

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்த இரு பெண் தொழிலாளர்கள் சிகிச்சை பலனின்றி ஞாயிறன்று உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டியில் கருப்பையா என்பவருக்குச் சொந்தமான ராதாகிருஷ்ணா பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் தீபாவளியையொட்டி பட்டாசு தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை பிற்பகல் பெண்கள் உள்பட 35 பேர் வேலைபார்த்துக் கொண்டிருந்துள்ளனர். மேலக்கோதை நாச்சியார்புரத்தைச் சேர்ந்த பச்சையம்மாள் (60), சத்தியவேணி (40) ஆகியோர் தனி அறையில் சரவெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது ஆலையின் வளாகத்தில் தயாரித்து வைத்திருந்த வெடிகளை வெடித்து சோதனை செய்துள்ளனர்.அப்போது சிதறிய தீப்பொறி, சரவெடி தயாரிக்கும் அறையில் விழுந்ததில் வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அந்த அறை முழுவதும் சேதமானது.

பச்சையம்மாள், சத்தியவேணி ஆகியோர் உடல் கருகி ஆபத்தான நிலையில் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்கள் சிகிச்சை பலனின்றி ஞாயிறன்று உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து வெம்பக்கோட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து ஆலை உரிமையாளர் கருப்பையாவை கைது செய்தனர்.

இழப்பீடு கேட்டு போராட்டம்

உயிரிழந்த பச்சையம்மாள், சத்தியவேணி ஆகியோரின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க கோரி அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சிவகாசி அரசு மருத்துவ மனையில் போராட்டம் நடத்தினர்.

Leave A Reply