சென்னை, அக். 25-

தமிழக அரசின் மலிவுவிலை துவரம் பருப்பு விற்பனை நவம்பர் 1-ஆம் தேதி துவங்க உள்ள நிலையில், கூட்டநெரிசலைக் கட்டுப்படுத்த ‘முன்பதிவு’ முறை திட்டமிடப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் துவரம் பருப்பு விலை, நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு பல மடங்கு உயர்ந்துள்ளது. துவரம் பருப்பு விலையைக் கட்டுப்படுத்த அரசுபல்வேறு நடவடிக்கைகளை எடுப்பதாகக் கூறினாலும், நடப்பில் விலைகுறையவில்லை. இந்நிலையில், தமிழகத்தில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின், 20 அமுதம் அங்காடிகள், 71 கூட்டுறவு அங்காடிகளில், ஒரு கிலோ துவரம் பருப்பு 110 ரூபாய்க்கு விற்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

இதற்கென மத்திய அரசிடமிருந்து 500 டன் துவரம் பருப்பை தமிழக அரசுவாங்கியுள்ளது. இந்த பருப்புகள் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு அரை கிலோ 55 ரூபாய்க்கும், ஒருகிலோ 110 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட உள்ளன. சந்தை விலையை விட இதுமிகவும் குறைவு என்பதால் இவற்றை வாங்க மக்கள் அதிக ஆர்வமாக உள்ளனர். தற்போது அரசு அங்காடிகளில் தினமும் 75முதல் 100 கிலோ அளவிற்கான துவரம் பருப்பே விற்பனையாகிறது. மலிவு விலை பருப்பு விற்பனை தொடங்கும் போது இந்த எண்ணிக்கைப் பலமடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. குறிப்பாக தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் கூட்டம் அலைமோதும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, குறைந்த விலையில் பருப்பு விற்பனை தொடங்கும் போது, மக்கள் நெரிசலைத் தவிர்க்க ‘முன்பதிவு’ மூலம் துவரம் பருப்பை விற்பனை செய்ய அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளதாகவும், இதன்படி ஏற்கெனவே முன்பதிவு தொடங்கப்பட்டு, பருப்பு கேட்டு வருவோரின் முகவரி, தொலைபேசி எண் முதலியவற்றை அதிகாரிகள் குறித்து வைத்தும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. தினமும் ஒரு கடைக்கு 500 முதல் ஆயிரம் கிலோபருப்பு மட்டுமே விற்பனைக்காக வரும் என்ற நிலையில், நபர் ஒருவருக்கு அதிகபட்சமாக இரண்டு கிலோ துவரம் பருப்பு மட்டும் தான் வழங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply