சென்னை, அக். 25-

சட்ட விரோதமாக போடப்பட்ட சாலைகளினால் சென்னை கடற்கரைப்பகுதி 6 கிலோ மீட்டர் வரை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்று தமிழக மீனவர் சங்கங்களும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகளும் புகார் கூறியுள்ளன. இந்தியாவின் கடற்கரைகள் மற்ற உலக நாடுகளை ஒப்பிடும்போது மிகவும் அழகானவையாக வளம் நிறைந்ததாக உள்ளன. 7000 கிலோ மீட்டர் நீளமுள்ள நாட்டின் கடற்கரை 9 மாநிலங்களை உள்ளடக்கியவை. தமிழகத்தின் கடற்கரை 1000 கிலோ மீட்டர் நீளமுள்ளது. தமிழகத்தின் இடையிலுள்ள புதுச்சேரியையும் உள்ளடக்கியது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில் கடற்கரைகளின் சூழல் பாதிக்கப்பட்டு குறிப்பாக கோவா போன்ற கடற்கரைகள் அழியும் அபாயத்திலிருப்பதை கண்டவர் கடற்கரைகளை பாதுகாக்க அனைத்து கடற்கரை மாநிலங்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பினார். அந்த கடிதத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே கடற்கரை மண்டல ஒழுங்குமுறை அறிவிப்பாணை ஆகும்.

கடற்கரை மண்டல ஒழுங்குமுறை அறிவிப்பாணை என்பது சுற்றுச்சூழல் பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் கடற்கரைகளை பாதுகாப்பதற்காக இயற்றப்பட்டது. கடற்கரை மண்டல ஒழுங்குமுறை அறிவிப்பாணை கடற்கரையை நான்கு மண்டலங்களாகப் பிரித்து எந்தத் திட்டங்களும் தடை செய்யப்பட்ட பகுதிகள், ஒழுங்குபடுத்தப்பட்ட பகுதிகள் பாரம்பரிய மக்களின் அதாவது கடற்கரை சமூகத்தினராகிய மீனவ மக்களின் குடியிருப்புகள் ஆகிய பகுதிகளாக பிரிக்கின்றது. நான்காவது பகுதியை அந்தமான் நிக்கோபார் பகுதிக்கு பொருத்தமானதாகப் பிரிக்கிறது. 13 கடற்கரை மாவட்டங்களை உள்ளடக்கிய தமிழக கடற்கரைகளில் சென்னை கடற்கரை மிகவும் நீளமானது, அழகானது மற்றும் வளம் நிறைந்ததாக உள்ளதால் பன்னாட்டுக் கம்பெனிகள் மற்றும் சர்வதேச சுற்றுச்சூழல் கம்பெனிகளின் கண்களை உறுத்தி வந்தன. எப்படியாவது இந்த கடற்கரை நிலத்தைக் கைப்பற்ற பல காலமாக முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் கடற்கரை மண்டல ஒழுங்குமுறை அறிவிப்பாணையை மீறி பல சுற்றுலா கம்பெனிகள் ஓட்டல்களை கட்டி வருகின்றன.தற்போது சென்னை கடற்கரையில் 6 கிலோ மீட்டர் வரை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக மீனவர் அமைப்புகளும் கடற்கரை சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகளும் அறிக்கை வெளியிட்டுள்ளன. அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது:- திருவான்மியூரிலிருந்து முட்டுக்காடு வரை சட்டவிரோதமாக போடப்பட்ட சாலைகள் 5.8 கிலோ மீட்டர் வரை கடற்கரையை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. இது வரை 10 சாலைகள் சட்டவிரோதமாக போடப்பட்டுள்ளன. இந்தச் சாலைகள் கடற்கரைகளில் கட்டிடங்களும் நட்சத்திர ஓய்வு விடுதிகளும் கட்டுவதற்காகத் திட்டமிட்டு போடப்பட்டவையாகும்.இந்தச் சாலைகளினால் மீனவர்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுவதோடு மட்டுமின்றி அவர்களின் வாழ்விடங்களும் பறி போகும் அபாயம் உள்ளது. கடற்கரை மண்டல ஒழுங்குமுறை அறிவிப்பாணை -2011இன் கீழ் எந்தத் திட்டங்களும் அனுமதிக்கப்படாத தடை செய்யப்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சாலைகள் வருகின்றன. இதற்காக இச்சட்டத்தின் கீழ் கட்டாயமாக்கப்பட்ட கடற்கரை மண்டல ஒழுங்குமுறை மேலாண்மைத் திட்டங்களும் போடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இதுதொடர்பாக சென்னை மாநகராட்சியிடம் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் விபரம் கேட்டபோது திருவான்மியூர், பாலவாக்கம், கொட்டிவாக்கம் மற்றும் நீலாங்கரை ஆகிய பகுதிகளில் எந்தச் சாலைகளும் போட அனுமதி அளிக்கவில்லை என்று கூறியுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.