பாகிஸ்தான் குழுவினர் நடத்திய இசை நிகழ்ச்சியில் சிவசேனா ரகளை : 4 பேர் கைது

குர்கான், அக். 25 –

ஹரியானா மாநிலம் குர்கானில் பாகிஸ்தான் கலைஞர்கள் நடத்திய இசை நிகழ்ச்சியில், சிவசேனா கும்பல் புகுந்து ரகளையில் ஈடுபட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக சிவசேனா கட்சியைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அரியானா மாநிலம் குர்கானில், சனிக்கிழமையன்று மாலை பாகிஸ்தான் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது சிவசேனா கட்சியை சேர்ந்த சிலர், நிகழ்ச்சியில் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பாகிஸ்தானுக்கு எதிராகவும் அவர்கள் முழக்கங்களை எழுப்பியுள்ளனர். நிகழ்ச்சி நடைபெற்ற மேடையிலேயே ஏறி தகராறு செய்துள்ளனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 2 போலீசாரும், சிவசேனா கும்பலை கலைக்காமல் வேடிக்கை பார்த் துள்ளனர். பிரச்சனை பெரிதாகும் என்று தெரியவந்த நிலையில், உயர் அதிகாரிகளின் தலையீட்டுக்குப் பிறகு, சிவசேனாவைச் சேர்ந்த 4 பேரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

இதனிடையே “கடந்த 2008ஆம் ஆண்டு முதல் நாங்கள் இந்தியாவின் பல்வேறு இடங்களில் நிகழ்ச்சி நடத்தி வருகிறோம்; உலகின் மற்ற நாடுகளிலும் நிகழ்ச்சிகள் நடத்துகிறோம்; இருந்த போதும், இந்தியாவில் நிகழ்ச்சி நடத்துவது மகிழ்ச்சியாக உள்ளதோடு, இருநாடுகளுக்கு இடையிலான பொது கலாச்சாரத்தை பகிர்ந்து கொள்வதற்கு உதவியாக இருக்கிறது” என்று பாகிஸ்தான் இசைக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.