தூத்துக்குடி,அக்.19-

தூத்துக்குடியில் பருப்பு இறக்குமதி நிறுவனங்களில் மோசடி செய்தது தொடர்பாக 7 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தூத்துக்குடி தெற்கு ராஜா தெருவில் இறக்குமதி நிறுவனம் நடத்தி வருபவர் ஜோஸ்ராஜ் சர்மா. இவர் ஆஸ்திரேலியாவில் இருந்து பருப்பு வகைகளை இறக்குமதி செய்து, தூத்துக்குடியில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில், இறக்குமதி செய்யப்பட்ட மைசூர் பருப்பு வகைகள், மஞ்சள், உளுந்தம் பருப்பு போன்றவற்றை கடந்த 30.05.2015 முதல் 02.07.15 வரை சண்முகம் டிரேடர்ஸ் என்ற நிறுவனத்திற்கு விற்பனை செய்தாராம்.

இதற்காக அந்நிறுவனம் சார்பில் ரூ.5,99,38,167க்கு 23 காசோலைகள் கொடுத்தார்களாம். இதனிடையே சண்முகா டிரேடர்ஸ் நிறுவனத்தினர் குடோனில் இருந்த பொருட்களை காட்டி, வங்கியில் ரூ.5,76,77,235 கடன் பெற்றுள்ளனர். மேலும், ஜோஸ்ராஜ் சர்மாவுக்கு வழங்கப்பட்ட செக்கைரத்து செய்யுமாறு வங்கியில் கடிதம் அளித்துள்ளனர். இதனால் காசோலையை வங்கியில் செலுத்திய போது அந்த காசோலை ரத்து செய்யப்பட்டதாக வங்கியில் தெரிவிக்கப்பட்டதாம். இதனால் தான் மோசடி செய்யப் பட்டதாக உணர்ந்த ஜோஸ்ராஜ் சர்மா தூத்துக்குடி மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து சண்முகம் டிரேடர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த பிரபாகரன், அண்ணாதுரை, செல்லத்தாய், ஜேயகர், மனோகரன், சுதாகர் உட்பட 7பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர மகாலிங்கம் வழக்குப் பதிவு செய்துள்ளார். இதுபோல் தெற்கு ராஜா தெருவில் உள்ள மற்றொரு பருப்பு இறக்குமதி நிறுவனத்தில் பருப்பு வாங்கி, ரூ.1,87,69,976 க்கு 11 காசோலை அளித்து மோசடி செய்ததாக புகாரின் பேரிலும் அந்நிறுவனத்தைச் சேர்ந்த 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Leave A Reply