“மனிதன் என்பவன் தெய்வமாக லாம்” கவிஞர் கண்ணதாசனின் பாடல்வரி ஐயத்தை ஏற்படுத்தியது. மனிதன் எப்படி தெய்வம் எனப்படுவான்? நாட்டுப்புற தெய்வங்கள் வரலாறு கேட்கும் போது தான் மனிதன் தெய்வமான விவரம் தெரிகிறது. சனாதனிகளால் உருவாக்கப்பட்ட சிவன், திருமால், பிரமன், பிள்ளையார் போன்ற தெய்வங்கள் கற்பனை குழைத்து உருவாக்கப்பட்டவை. கதை கதையாய்க் கட்டி புராணங்களாய்ப் பெரிதுபடுத்தி மேலேற்றப்பட்டவை. நாட்டுப்புற தெய்வங்களுக்கும் கதைகள் உண்டு. ஆனால் அவைதன் எல்லைக்குள் நின்றுகொண்டன. தென்னாடுடைய சிவன் எந்நாட்டவர்க்கும் இறைவன் ஆக்கப்பட்டதுபோல் பூச்சியம்மனோ, கோடியம்மனோ, தூண்டிமுத்துவோ ஆக்கப்படவில்லை என்பதுகவனத்துக்குரியதுமனிதர்கள் தெய்வங்களான கதைகளைத் தொகுத்து “மக்கள் தெய்வங்கள்” என்ற தலைப்புடன் நூலாகத் தந்திருக்கிறார் கோ.பழனி. “ஆறாம் திணை” இணைய இதழில் தொடர்ந்து கட்டுரைகளாகப் பதிவிடப் பட்டவை தற்போது நூல் வடிவம் பெற்றுள்ளது.நாற்பது தெய்வங்கள் பற்றிய தகவல்களை நூலாசிரியர் தொகுத்து தந்துள்ளார்.

செல்லியம்மன், வட்டப் புரியம்மன், பொன்னியம்மன், கோடியம்மன், கொம்முட்டி அம்மன், மலையேறியம்மன், வீரசிங்கம் பேட்டை மாரியம்மன், வீரமாகாளியம்மன், வெள்ளைச்சியாயி அம்மன், பளிச்சியம்மன், தீப்பாய்ந்த அம்மன், சௌடம்மன், கண்ணகியம்மன், இசக்கியம்மன், பாப்பாத்தி அம்மன், பூச்சியம்மன், சின்னணைஞ்சியம்மன், அப்புச்சியம்மன் என 18 தெய்வங்களின் பெயர்கள் அம்மன் என்ற பின்னொட்டுப்பெற்றுள்ளன. தெய்வநிலையில் வைத்துப் போற்றப்படும் பெண்களுக்கான குறியீடு அம்மன் என்பதாக இருக்கிறது. இந்தக் குறியீடே பின்னர் மாரியம்மன், காளியம்மன், மீனாட்சியம்மன், காமாட்சியம்மன் என நீட்சிபெற்றிருக்கும் எனக் கருத இடமுண்டு.பெண்களுக்கான மதிப்புறு சொல்லாக அம்மா என்பது இன்றும் புழக்கத்தில் இருக்கிறது. இதன் திரிந்த சொல்வடிவம் தான் அம்மன் என்பது தெரிகிறது.அந்த அம்மன்களில் பெரும்பாலோர் கவுரவக் கொலை என்று இக்காலத்தில் பெயர் சூட்டப்பட்ட சாதி ஆணவக் கொலையுண்ட பெண்களாகவே இருக்கிறார்கள். சாதி மறுப்பு என்கிற சமத்துவ எண்ணம் முளைவிடும்போதெல்லாம் கிள்ளியெறியப்பட்டுள்ளது.

தீண்டாமைக்கு எதிராக மட்டும் தலித் மக்களுக்கு எதிராக மட்டும் இந்தக் கொலை வெறி தாண்டவம் ஆடவில்லை.அண்ணல் அம்பேத்கர் சொன்னதைபோல இங்கே சாதிப்படிநிலை தனதுகாலுக்கு கீழே மிதிபட ஒரு சாதி இருக்கிறது என்று திருப்தி அடையச்செய்கிறது. மிதிபடும் சாதி எதுவாக இருந்தாலும் தலைதூக்கினால் நசுக்கப்படும் என்பதை “மக்கள் தெய்வங்கள்” சொல்லும் நாட்டார் வரலாறு நமக்குக் காட்டுகிறது.பறையர் இனப் பெண்களுக்கும் செங்குந்த முதலியார்,நாயுடு, பார்ப்பனர் ஆகிய சாதிகளைச் சேர்ந்த ஆண்களுக்குமான காதல் மறுதலிக்கப்படும் போதும், வண்ணார், சக்கிலியர், பள்ளர், நாடார், புதரை வண்ணார் ஆகிய சாதிகளின் பெண்களுக்கும் தேவர், அந்தணர் ஆகிய சாதிகளின் ஆண்களுக்கும் ஏற்பட்ட காதல் நிராகரிக்கப்பட்ட போதும் கொலையுண்டவர்கள் தெய்வங்களாக்கப்பட்டுள்ளனர்.ஏன் கொல்ல வேண்டும், பிறகு தெய்வங்களாக்க வேண்டும் என்கிற கேள்வி மிக முக்கியமானது. கொலையுண்டவர்களை மதித்து எவரும் தெய்வமாக்கப்படவில்லை. பழங்காலத்தில் மனிதர்களிடம் குறைந்தபட்சம் குற்றவுணர்வு இருந்தது. சாதியின் பேரால் கொலை நடந்த பிறகு தங்களுக்கு ஏற்படும் சிறு சிறு துன்பதுயரங்களுக்கும் இறந்து போனவர்களே காரணம் என்கிற உறுத்தல் ஏற்பட்டது. இந்த அச்சவுணர்வுலிருந்து விடுபடவே பெரும்பாலும் தெய்வங்கள் உருவாக்கப்பட்டன. பல கதைகள் அப்படித்தான் கருக்கொண்டுள்ளன.ஒருகுறிப்பிட்ட காலக்கட்டத்திற்குப் பின் தெய்வமாக்கல் வணங்குதல் இல்லாமல் போனதற்குக் காரணம் குற்றவுணர்வு மங்கி மறைந்துபோனதோடு கொலைசெய்வது கவுரவமாகிவிட்டது. அதனால் தான் அதற்கு கவுரவக் கொலையென்று பெயர் சூட்டி வைத்திருக்கிறார்கள். 65 வயது முதியவர் ஒருவர் பேத்தியைக் கொலை செய்துவிட்டு சாதிவிட்டு சாதி காதலிப்பவர்களை இனியும் கொல்வேன் என்று ஆணவத்தோடு சொல்வது தான் இன்றைய நிலை. அச்சம் அகன்று ஆணவம் மேலாங்கிப்போன காலத்திலிருந்து “அம்மன்”கள் உருவாகவில்லை. ஆனால் கொலைகள் முன்னிலும் அதிகமாகத் தொடர்கிறது. மக்கள் தெய்வங்கள் தவிர, ரேணுகாம்பாள், ஏழுகன்னிமார், கண்ணகியம்மன், வீரனார் போன்ற தகவல்பதிவுகள் பாரம்பரியத்தன்மைகொண்டவையாக இருக்கின்றன. காதலை ஏற்க மறுக்கும் சாதிவெறி என்கிற குணாம்சத்தின் பண்டைய நிலையை வெளிச்சம் போட்டுக்காட்டுவதாக மக்கள் தெய்வங்கள் நூல் விளங்குகிறது. இதன் ஆசிரியர் கோ. பழனியும் வெளியிட்டிருக்கும் புலம் பதிப்பகத்தாரும் பாராட்டுக்குரியவர்கள்.

News_135265மக்கள் தெய்வங்கள்

ஆசிரியர்: கோ.பழனி

வெளியீடு: புலம்

332/216,

திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை,

திருவல்லிக்கேணி,

சென்னை – 600 005

பக்: 168

விலை ரூ.140/-

Leave a Reply

You must be logged in to post a comment.