ஆப்கானிஸ்தானில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அமெரிக்கப் படைகள் தொடர்ந்து நீடிக்கும் என்றும், இந்தப் படையினருக்கு தேவையான அனைத்து ஆயுத சப்ளையும் உறுதி செய்யப்படும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா அறிவித் திருக்கிறார்.ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் படிப்படியாக – முற்றாக வாபஸ் பெறப்படும் என்று இதே பாரக் ஒபாமா அறிவித்து ஒரு வருடம் கூட முடியவில்லை. இப்போது அதற்கு நேர்மாறாக, படைகள் நீடிக்கும் என்று கூறிவிட்டு, “முடிவற்ற போரை ஆதரிப்பது எனும் பேச்சுக்கே இடமில்லை” என்று கொடூரமான நகைச்சுவையையும் உதிர்த்திருக்கிறார்.2001 செப்டம்பர் 11 அன்று அமெரிக்காவில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களை தொடர்ந்து, அல்கொய்தா பயங்கரவாத அமைப்பை அழிக்கப் போவதாகக் கூறி 14 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்கானிஸ்தான் மீது கொடூரமான யுத்தத்தை அமெரிக்க ஏகாதிபத்தியம் கட்டவிழ்த்துவிட்டது.

இந்த14 ஆண்டுகளில் ஆப்கானிஸ் தான் சல்லடையாக துளைக்கப்பட்டிருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் – குழந்தைகள் – பெண்கள் உள்பட, ‘பயங்கரவாதிகள்’ என்று கூறி கொத் துக்கொத்தாக குண்டுவீசி கொல்லப்பட்டார்கள். லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக இன்றும் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். இந்த 14 ஆண்டுகள் மட்டுமல்ல, கிட்டத்தட்ட 35 ஆண்டு காலமாக ஆப்கானிஸ்தான், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொடிய யுத்தத்தால் முற்று கையிடப்பட்டுள்ளது என்பதே உண்மை. சோவியத் ஒன்றியத்தின் ஆதரவுடன் ஜனாதிபதி நஜிபுல்லா தலைமையிலான மக்கள் ஜனநாயக குடியரசாக ஆப்கானிஸ்தான் மலர்ந்தபோதே, அமெரிக்க நாசகர உளவு அமைப்பான சிஐஏ மூலம் தலிபான் பயங்கரவாதிகள் ஊட்டி வளர்க்கப்பட்டு யுத்தம் துவங்கியது. அந்த பயங்கரவாதிகள் அன்றைக்கு ஜனாதிபதி நஜிபுல்லாவை உலகமே அதிர்ச்சியடையும் விதத்தில் கொடூரமாக படுகொலை செய்தார்கள். அன்றிலிருந்து பயங்கரவாதிகளும், தான் உருவாக்கிய பயங்கரவாதிகளை அழிப்பதாக கூறி அமெரிக்காவும் சேர்ந்து ஆப்கானிஸ்தானை இடைவிடாமல் சீரழிந்து வருகிறார்கள்.

இந்த 35 ஆண்டுகளில், கிட்டத்தட்ட 20 லட் சம் ஆப்கானியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அகதி களாக மாறியவர்களில் எண்ணிக்கை அளவிட முடியாதது.ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா துவக்கிய முடிவற்ற யுத்தம், அடுத்தடுத்து இராக், லிபியா, சிரியா என வளைகுடா நாடுகளை – அதாவது எண்ணெய் வளநாடுகளை முற்றாக கபளீகரம் செய்கிற யுத்தமாக நீண்டுகொண்டிருக்கிறது. இதன் விளைவு, மேற்காசியா மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவின் ஒட்டு மொத்த எண்ணெய் வள நாடுகளும் எரிந்து கொண்டிருக்கின்றன. கோடிக்கணக்கான மக்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர் வெறியின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள். பல நாடுகளில் ரத்த ஆறு ஓடிக் கொண்டிருக்கிறது. அன்றைக்கு தலிபான்களை உருவாக்கி ஆப்கானிஸ்தானை அழித்த அமெரிக்கா, இன்று ஐஎஸ் பயங்கரவாதிகளை உருவாக்கி இராக்கையும், சிரியாவையும் அழித்துக் கொண்டிருக்கிறது. இந்த பயங்கரம் உலகளாவிய முறையில் பரவும் ஆபத்து உருவாகி தீவிர மடைந்திருக்கிறது. இந்தப் பின்னணியில், ஆப்கானிஸ்தானி லிருந்து படைகளை முற்றாக விலக்கிக் கொள்வதற்குப் பதிலாக இன்னும் அந்த நாட்டை துவம்சம் செய்யும் நோக்கத்தோடு, அங்கிருந்து பாகிஸ்தான், இந்தியா,  சீனா, ரஷ்யா போன்ற நாடுகளை மிரட்டும் நோக்கத்தோடுதான் படைகள் நீடிக்கும் என்று ஒபாமா அறிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: